Saturday, September 24, 2011

ஆளுமையுள்ள எமது மண்ணை நிர்வகிக்க வல்ல மாணவ சமுகத்தை


ஆளுமையுள்ள எமது மண்ணை நிர்வகிக்க வல்ல மாணவ சமுகத்தை
உருவாக்க நாம் பாடுபடுவோம்
வாழவைப்போம்  அமைப்பின் உதவிகளை கோட்டைகட்டியகுளம் பாடசாலைக்கு
வழங்கிவைத்து சிறிதரன் எம்.பியின் செயலாளர்




முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள கோட்டைகட்டி பாடசாலை
மீண்டும் அதிபர் ஆசிரியர்கள் பெற்றோர்களின் முயற்சியால் முன்னேற்ற
ஏணியில் கால்பதித்து சிகரங்களை தொட பெரும் அவாக்கொண்டுள்ளது.
கிராமப்புறப்பாடசாலையாக இருக்கின்ற இப்பாடசாலை முல்லை மாவட்ட
மற்றும் கிளிநொச்சி மாவட்ட நகர்பகுதிகளில் இருந்து மிகவும் தொலைவில்
இருக்கும் நிலையில் அது தன்னுடைய இயல்பான கல்வி மற்றும் வாழ்க்கை
சூழலை அடைவதற்கு மிகவும் சிரமங்களை சவால்களை சந்திக்க
வேண்டியிருப்பது யதார்த்தம். எனினும் தங்கள் தேவைகளை நிவர்த்தி
செய்ய இப்பள்ளிச் சமுகம் எடுத்திருக்கின்ற முயற்சியின் பயன்களில் ஒன்றாக
கிளிநொச்சி மாவட்ட பா.உறுப்பினர் சி.சிறீதரனின் ஏற்பாட்டின் கீழ் கனடா
வாழவைப்போம் அமைப்பு ஒரு தொகுதி கற்றல் உபகரணங்களை வழங்கியுள்ளது.
இந்த நிகழ்வு பாடசாலையின் ஆசிரியர் திவாகர் தலைமையில் நடைபெற்றுள்ளது.
நிகழ்வில் பா.உறுப்பினர் சி.சிறீதரனின் செயலாளர் பொன்.காந்தன் கிளிநொச்சிமாவட்ட
த.தே.கூட்டமைப்பு அமைப்பாளர் வேழமாலிகிதன் கரைச்சி பிரதேச சபையின் கௌரவ
உறுப்பினர்களான  தயாபரன் மற்றும் சுகந்தன் ஆகியோர் கலந்து கொண்டு கற்றல்
உபகரணங்களையும் பாடசாலையின் நூலகத்திற்கான ஒரு தொகுதி நூல்களையும்
வழங்கி வைத்தனர். இங்கு பா.உறுப்பினரின் செயலாளர் கருத்துரைக்கையில்
முல்லை மண் வரலாறுகளின் பெட்டகம் . அதற்கென்றொரு தனி அத்தியாயம்
தமிழர்களின் வரலாற்றில் இருக்கின்றது. அத்தகைய புகழ்வாய்ந்த ஈகம் நிறைந்த
புனித மண்ணிலே இப்பாடசாலை அமைந்திருக்கின்றது.தமிழர்களாகிய எமது
வரலாற்றில் பலமுறை பேரிழப்புக்களையும் நெருக்கடிகளையும் சந்தித்திருக்கின்றோம்.
ஆனாலும் அதிலிருந்து நாம் மீண்டெழுந்து மீண்டும் புது மிடுக்கொடு பயணித்தது
வரலாறு.இது உலகில் புகழ்பெற்ற இதையும் கடந்த போவோம் என்றவாசகத்தை நினைவுபடுத்துகின்றது.
உண்மையில் நாம் கடந்த முள்ளிவாய்க்கால் போரிலே சத்தித்த இழப்புக்கள் மானுட வரலாற்றிலே
வார்த்தைகளில் வடித்திடமுடியா கொடுரம்மிக்கவை அப்பெரும் கொலை வெளியை கடந்தே
வந்திருக்கின்றோம்.இன்று எம்மிடம் எதுவுமில்லை நினைவுகள் சுமந்த இதயங்களை தவிர.
ஆனால் அது தான் எம்மைவழிநடத்திச்செல்லும் ஆதர்சம் என்பதை நாம் விளங்கிக்கொள்ளவேண்டும்
அந்த பயணத்தில் உலகை எமது  திசையில் நிலைக்கவைக்க நாம் எமது அறிவுக்கு பொக்கிசமாக
இருக்கக்ககூடிய மாணவ சமுகத்தை கட்டியெழுப்ப முனைப்புடன் செயற்பட வேண்டும்.அதற்காக
புலம்பெயர் சமுகம் தயாராக இருக்கின்றது.அதற்கு பாலமாக பா.உறுப்பினர் சிறீதரனும் அவர்
சார்ந்தவர்களும் என்றும் பாடுபட தயாராக இருக்கின்றோம்  நாளை நமது மண்ணை
நிர்வகிக்க இருக்கும் இன்றைய மாணவர்களுக்கு உதவ வேண்டியது காலக்கடமை என்றார்.
தொடர்ந்து அங்கு கலந்து கொண்ட பெற்றார்கள் மாலை நேரக்கல்வியை மேற்கொள்வதற்கு
உதவுமாறு வேண்டுகோள் விடுத்ததுடன் க.பொ.சா.தர பரீட்சைக்கு இன்னும் சில மாதங்களே
இருக்கும் நிலையில் முக்கியமாக கணிதபாடத்திற்கு நிரந்தர ஆசிரியர் பாடசாலையில்
இல்லாது இருப்பதை மிகவும் கவலையோடு சுட்டிக்காட்டினர்.அதே வேளையில் போக்குவரத்து
வசதிகளும் குறைபாடோடு இருப்பதாக கருத்துரைத்தனர். முல்லை கோட்டைகட்டிய பாடசாலையின்
மாணவர்களின் எதிர் காலத்தில் அக்கறை செலுத்தவேணடியது எல்லோரதும் கடமையாக
இருப்பதுடன் அப்பாடசாலை அதிபர் ஆசிரியர்களின் முயற்சிகள் மெச்சத்தக்கவையாகவும்
அமைந்திருக்கின்றது.

Thursday, September 22, 2011

சாரம்

பொன்.காந்தன்



என் பாடலின் சுருதி எது
என் பாடலின் தாளம் எது
என் காதலின் கண்கள் எது
என் கால்களின் பாதை எது
என் கனவுகளின் வர்ணம் எது
இதுவரையான வாழ்வின் சாரம் இது

Saturday, September 17, 2011

தமிழ் பூகம்பம்

-பொன்.காந்தன்


பூமலர்ந்த தேசத்தில்
புயலடித்துப்போன பின்னே
சாக்குரலின் நினைவுகளோ
சதா மனம் வருத்த
பாதகரின் காலடிக்குள்
பட்டிணியும் பதட்டமுமாய்
கெட்டு வாழ்கின்ற
கேவலத்தை எண்ணியெண்ணி
நித்தம் வதைகின்ற
நிலத்தமிழர் நிலைகண்டு
கொட்டி முழக்கமிட்டு
கொதித்து குமுறிநின்று
கோலத்தமிழ் நிலத்தின்
குதூகலமாம் சுதந்திரத்தை
கொண்டுவர ஆங்கோர்
பொங்கு தமிழ் பூகம்பம்
முள்ளி வாய்க்காலில்
முடிந்த தமிழர்களின்
மூச்சின் கனவுகளை
எல்லை  தாண்டிநின்று
எழுதிவைப்பதற்கு
வல்ல தமிழர்கள்
வயிரம் ஆகிறார்கள்
வாசம் செய்வதற்கு
வண்ணத் தமிழ் மண்ணை
வசந்தக்காற்றுடனே
வல்ல உலகத்தார்
வந்து தருவதற்கு
உலகத்தமிழர்கள்
ஒன்றாகியியற்றுகிற
உயர்தவமாம் பொங்குதமிழ்
கல்லறைகள் ஏதுமற்று
காற்றவழியுறைகின்ற
சென்ற வழியெங்கும்
சிதறி மடிந்துவிட்ட
 தமிழர்களின்தாகத்தை
எங்கும் பொலியவைத்து
தங்கத்தாய் தாய் நாட்டை
தந்திடுக பொங்கு தமிழ்.

Friday, September 9, 2011

காந்தன்வர்ணம்

காந்தன்வர்ணம்

காந்தன்வர்ணம்

தாகம்



நெஞ்சோடுள்ள நெடுங்காதல் சொல்ல
பெண்ணாகப்பிறந்த பேரழகு தேடி
அந்நாள் தொட்டு அலைகிறேன் நான்
இந்நாளில் அந்த உண்மையை சொல்லி
என்னோடிணையும் நரையினை தடவி
ஏங்கினேன் இளைத்தேன்
முள்ளுடன் முகிழ்த்த மலர்களிலொன்றாய்
மோகத்தின் வேரில் சமர்ப்பணமாகும்-என்னுடன்
வந்த இதயத்தின் தாகம்

 

Saturday, September 3, 2011

தீராத புரட்சிக்காரி




-பொன்.காந்தன்

செங்காடி தீராத புரட்சிக்காரி
எரி மலைகளின் புறப்பாட்டை
மற்றும்
எல்லையற்ற தாகத்தை
இன்னும்
தன் இதயத்தை
எல்லோரது உதட்டருகில் வைத்து
சொல்லக்கூடிய செய்தியை
நினைவுபடுத்தியிருக்கிறாள்.
பெண்'சே'யாக

சிலைகளோடு
சில மேடைகளோடு
செங்கொடி அடங்கிவிடக்கூடியவள் அல்ல
வழியற்ற காலத்தின் வழியவள்
தமிழர்கள்
அவளுக்கு எதைக் கொடுக்கப்போகிறார்கள்
அவள் இன்னும்
பல இலட்சம் பேரையும்
பல்லாயிரம் ஆண்டுகளையும்
பல நூறு மாளிகைகளையும்
பல நூறு அஸ்திரங்களையும்
அப்படியே பொத்திப்பிடித்து
ஒரு சில கணங்களில்
காட்டிச்சென்றிருக்கிறாள்.
செங்கொடியும்
இருண்ட காலத்தின் உயர்ந்த பாடல்
என் தாய் செங்கொடியையும்
பெற்றெடுத்தாள் என்று நினைக்கும்போது
மகிழ்ச்சி
அங்கயற்கண்ணி வெடித்த போதும்
இப்படித்தான்  நிமிர்ந்து நின்றோம்.
அங்கயற்கண்ணிக்கு ஆணையிட
ஓரு அரசனாவது இருந்தான்.
செங்கொடிக்கு ஆணையிட யாரிருந்தார்
அதனால் அரசியாகியிருக்கிறாள் அவள்
செங்கொடியின் இறப்பில் மகிழவில்லை
பிறப்பில் மகிழ்கிறேன்
அவளின் மரணம்
தமிழ் தலைவர்களின் பலயீனம்
தமிழர்கள் இன்னும்
ஒன்றாதல் உணரா வெளிப்பாடு
செங்கொடிகளுக்காய்
தலைவர்கள் எப்போது
தீக்குளிப்பார்கள்
 

Friday, September 2, 2011

எருக்கலைகளின் காலம்



-nghd;.fhe;jd;


இக்காலத்தை
எருக்கலைகளின் காலம் என்று எழுதிவையுங்கள் நண்பர்களே!
ஒவ்வொரு தமிழனுக்குள்ளும்
எருக்கலை அடர்ந்து வளரட்டும்
சிறு வயதில்
எருக்கலைகளின் மலர்களில இருக்கும் ;மூக்குத்தியை
அணிந்து மகிழ்ந்ததுண்டு
ஆயினும் எருக்கலைகள் ஆழமாக என்னை
வசீகரித்ததில்லை
சில ஞாபகங்கள் இருக்கின்றன 
எருக்கலைகள் பற்றி
எங்கள் வீட்டில் ஆடுகள்
குட்டி ஈன்றபொழுதுகளில்
இளங்கொடிகளை ஒரு பையில் கட்டி
பின் எருக்கலைகளில் கட்டி விட்டதுண்டு
அநேகமாக ஊர் வழமை இது
எருக்கலைகளில் இளங்கொடிகளை கட்டினால்
அதிகம் மடிகளில் பால் சுரக்குமாம் என்பது அய்தீகம்

எருக்கலை பால் மரம்தான்
இருந்தபோதும் ஆழமாக அது;;
முன்பு என்னை வசீகரித்ததில்லை
அதற்குள் இருக்கின்ற ஆழங்கள் பற்றி
உண்மையில் உணரத்தவறிவிட்டேனோ
என்று மனம் அங்கலாய்க்கின்றது.
ஆத்மாக்கள் பேசிக்கொள்ளக்கூடிய
ஒரு உன்னத மொழியை
உணரும் வல்லமை
எருக்கலைகளுக்கு மட்டும்தான்
கைவரப்பெற்றதோ என்று
ஆச்சரியமுறுகிறேன்.
நண்பர்களே!
வெட்கத்தைவிட்டு
அச்சத்தை விட்டு
இருளின;;y; பெரும் சுவர்களில் மோதுண்டு
பிரகடனம் செய்கிறேன்
தமிழர்களின் இக்காலத்தை
எருக்கலைகளின் காலமென்று எழுதிவையுங்கள்.

எங்கள் சொர்க்கம்
கண்டக்கோடரிகளால் பிளக்கப்பட்டு
முத்துப்பரல்களும்
ஓம குண்டங்களும்
தர்ம சாத்திரங்களும்
புதையல்களும்
புனிதங்களும்
இன்பக்கலசங்களும்
ஒப்பாரி ஆற்றிலே மிதந்து போக
சதைத்துண்டங்களையும்
கட்டியழ முடியா
அகதி வெளியில் 
பாறுண்ட விருட்சத்தின் பாடலை
பாடிட நிர்ப்பந்தமான
எனது இனத்தின் ஏதோ ஒன்று செத்துநாறும்
காலத்தில்
எருக்கலைகளின் காலத்தை
நான் எழுதத்துணிந்தேன்.

ஒரு காலத்தில் நாம்
கண்ணீரும்
நம்பிக்கையும்
சத்தியமும் 
நெருப்பும் 
உண்மையும ;வேகமும்
காற்றும் கடலும் வரலாறும் கலந்து
கோயில்கள் கட்டினோம.;
எங்கள் இனம் மொத்தமும்
கட்டுண்ட கிடந்த கணப்பொழுது
அங்குதான் இருந்தது.
ஒவ்வொரு கல்லறையும்
ஒவ்வொரு மூலஸ்தானம்
கோபுரமாகக்கூட இருக்கலாம்.
வானமாகக்கூட இருக்கலாம்
மலர் மேனியாகக்கூட இருக்கலாம்
என்னால் சரியாக சொல்ல முடியவில்லை
அம்மா அற்புதமாகச்சொல்லுவாள்
அவள்கருவறையில் இருந்து வருகின்ற வார்தைகள் அவை.
அம்மாவின் பிள்ளை உரிமைக்களத்தில் குதித்தது தொட்டு
விடுமுறையில் பிள்ளை வந்து போவது ஈறாக
வெடியும் குண்டொலிகளும்
கேட்கும் நாட்களுடன்
பிள்ளை வித்துடலாக வந்த நாட்களுடன்
கோயில்களில் பிள்ளை விதைக்கப்பட்டு
கல்லறை எழுந்த காலம் வரை
அதன்பின்னும்....
அம்மாக்களின் எழுதமுடியாத கவிதைதான் அற்புதம்
அம்மா நல்லாச் சொல்லுவாள்
முள்ளிவாய்க்காலில் சாகாமல்
இருந்திருந்தாy;.
நானும் சிறிது சொல்ல முடிந்தது
என் தங்கச்சியையும் ஒரு நாள்
அப் புனித கோயிலில் விதைத்து வந்தோம்.

வரலாறுகளில்
இன்னொரு தேசத்துள்
படைகள் புகுத்தன
போர் செய்தன.
என்று படித்திருக்கிNறேன்.
எனது மண்ணிலும்
சிங்களப்படைகள் புகுந்தன என்றும்
பிரபாகரனை வெற்றி கொண்டன என்றும்
என்றும் ஏராளம் செய்திகள் வந்துவிட்டன.
நிச்சயம்
அது பொய்
மிருகங்கள் போர் செய்ததற்கான சாட்சியங்களே அதிகம்.
ஒரு மனிதன் இன்னொரு மனிதனின் கல்லறையை உடைப்பானா
நிச்சயமாக இல்லை
எவன் கல்லறையாக இருந்தாலும்
எவ்வளவு கொடுர எதிரியாக இருந்தாலும்
என் தங்கச்சி உண்மையாக ஒரு செவ்விரத்தம்
மலரை என்றாலும்
காணிக்கை ஆக்கியிருப்பாள்.

கனகபுரம்  போகின்றபோது
துயிலுமில்லத்தை ஒரு முறை
திரும்பிப்பார்ப்பேன்
என் தங்கச்சியின் உடைத்துக்கிளறப்பட்ட
கற்களேனும்
எருக்கலைகளின் கீழ்தெரிகிறதா என அங்கலாய்க்கும் மனம்
தினமும் மனங்கள் அங்கலாய்த்துச் செல்லும் வீதியது
தினமும் மனிதர்கள் மனங்களால் மட்டும் மலர்கள்
தூவிச்செல்லும் வீதியது.
பார்க்கும் இடமெங்கும் சிங்கள சிப்பாய்களின்
அரண்கள்.
யாருக்கு யார் காவல்?
ஒன்றும் இன்றுவரை தமிழர்களின் மனங்களுக்குள்
வெற்றி கொண்டு ஒரு காவலரணையேனும்
அவர்களால் அமைக்க முடியவில்லை.
ஏனெனில் இது எருக்கலைகளின் காலம்
முன்பெல்லாம் எருக்கலைகள் எங்கெங்கோ வளரும்
இப்போது கல்லறைகள் உடைக்கப்பட்டு
புனித உடல்கள் அவமதிக்கப்பட்ட இடங்களில்தான்
வளர்ந்திருக்கின்றன.
எருக்கலைகளை நான் இப்போது அதிகம் நேசிக்கின்றேன்
எருக்கலைகள் கோபத்தின் மொழியாக
சாபமிடுவதன் அடையாளமாக இருக்கலாம்
தமிழர்களின் வரலாற்றில்
இது எருக்கலைகளின் காலம்
எழுதிவையுங்கள் நண்பர்களே!