Thursday, March 29, 2012

ஞானப்பழம்

பொன். காந்தன்


டெனிம் குட்டை பாவாடை
டீசெட் அணிந்து
அவள்
டயனாவையோ
கேட்டையோ
ப்ரிட்னியையோ
மனசில் நிரப்பிக்கொன்டிருந்தாள்.
பாடுவதற்காக
அரங்கில் பளபளத்த அவள்
அறிமுகத்தில்
தமிழில் பேச அதிகம் ஆசைப்பட்டாள்
அவள் தமிழ் பெண்தான்

மியூசிக் ஸ்டாட்
"பழம் நீ அப்பா ஞான பழம் நீ அப்பா
தமிழ் ஞான பழம் நீ அப்பா "
கே பி சுந்தராம்பாள்
அவளுக்குள் இருந்து வெளியே வந்து
நதியென ஒடினாள்.
.................................
முருகா !

 

Tuesday, March 27, 2012

மல்லிகை சாம்பல்

 பொன். காந்தன்    




ஒவொரு இரவிலும்
சாம்பலாகிறாள் அவள்
நதிகள் இல்லா இரவில் நடக்கிற
நெருப்பின் சங்கீதமென
வாசலை பார்த்து பார்த்து
முடிகிறது அவளின்
வாழ்வின் எச்ச சொச்சங்கள்

பஸ்பமான எமது நாட்களில்
எமது முதுசமென
கறை படிந்த நாக்குகளையும்
கண்களையும்
விட்டுவிடாமல் கொணர்ந்தோம்
அநேக காலங்களில்
நாம் வெட்க்கப்பட தயாராய் இருந்ததில்லை
இன்றும் அப்படிதான்
அவள் வாசலிலும் தெருக்களிலும்
நாம் காவி வந்த கஞ்சல்களுக்குள்
வாசனை இழந்துகொண்டிருகிறாள்

அவள் மண்ணுக்குள் தலை புதைத்து
போகிறபோதெல்லாம்
எதையோ தூக்கி வீசி
நொறுக்க வேண்டும்போலிருக்கிறது.
இழக்க வேண்டியதை
கொண்டு வந்திருக்கிறோம்
நம் சோதரிகளை வதை செய்ய..

அடுத்து வரும் காலமொன்றில்
நம் அழகிகள்
பொட்டும் பூவும் புன்னகையும் இழந்து
எல்லா வீடுகளிலும் நிறைந்திருப்பர்
அப்போது நாம் என்ன செய்ய வேண்டும்
என்றுரைக்க
ஒரு கடவுளும் வேதவாக்கும்
முன்பொரு காலத்தில் இருந்திருக்க வேண்டுமா


 
 


Friday, March 16, 2012

ஞாபகங்களின் கீதமும்


-பொன்.காந்தன்





இப்போதுதான் உலகம் சுற்றுவதை
முதன்முதலாய் உணர்கிறேன்.
ஏக்கம் நிறைந்த எம் நெடுங்கால முகங்களையும்
மானுட சமுதாயம்
ஏறெடுத்துப்பார்கிறது.
இதற்காக எத்தனை உயிர்களை கொடுக்கவேண்டியதாயிற்று.
எத்தனை இரவுகளை
பட்டிணியும் பதட்டமுமாய் கடக்கவேண்டியதாயிற்று
வாழும் நாட்களை
வதைக்கென்று கொடுக்கவேண்டியதாயிற்று
நீண்ட பிரவுகளை நெஞ்சை இறுகப்பற்றி
தாங்கவேண்டியதாயிற்று
இன்றைக்கும் எங்கள் நாதமிழந்து கிடக்கின்ற இரவில்
எங்கள் தெருவில் நரமாமிசபட்சிகளை உலவிட்டு
வேதனை இடிகளென இதயம்துடிக்க
தூங்காமல் எழுவேண்டியதாயிற்று
இன்னமும்தான்
எம் வாசல் காத்திருக்கிறது விடுதலைக்காய்
வெறி கண்ணை மறைக்க எம்வீட்டுக்குள்
கர்வத்தோடு நுழைந்தவன்
வீசி எறிந்தான் ஒழிந்துபோவென்று
உலகத்தின் செவிப்பறை கிழிய.
அவனறியான் அப்போது எறிந்தது
வீரியம் மிக்க விதைகள் என்பதை.
இப்போது தூக்கமற்ற இரவுகளோடு
தோலைந்துகொண்டிருக்கின்றான்
அந்த துட்டன்.

என் அழகிய தாய் தேசத்தின் காடுகளையும்
கடலின் அலைகளையும்
மணல்வெளியையும்
பனங்காடுகளையும்
அற்புதமான மொழிகொண்டு பார்க்கின்றேன்.
காடு மண்டிக்கிடக்கிற
எங்கள் கற்பகங்களின்
கல்லறைகளையும்
நினைகளை தாங்கி நின்று
கற்குவியல்களான சுவர்களையும்;
திரும்ப திரும்ப கடந்துபோகின்றேன்.
வல்லமைகளே! வல்லமைகளே!என்று
உரத்தகுரல்கொண்டு சொல்லவேண்டும்போல் இருக்கின்றது.

மாவிலாற்றில் தொடங்கி முள்ளிவாய்க்கால் வரை
எங்கள் உயிர்கள் கதறகதற பிடுங்கப்பட்ட
பாதை எங்கணும் தொட்டு முத்தமிடவேண்டும்
அதுவே உலகம் விழித்துக்கொண்டதற்கான உயர்மொழிகள்
எல்லா ஞாபகங்களும்
இதயமெங்கும் நிறைந்து வழிகின்ற
தமிழரின் பொழுதுகள் என பிரகடனம் செய்கிறேன்.
எதுவும் எனக்கு பெரிதாக தெரியவில்லை
மிகமிக சிறிது எனது உயிரெனவும் எழுதிவைக்கின்றேன்.
மூங்கிலாற்று வயல்வெளி வீதி மிகப்பெரிது
அங்கு
எறிகணைமழையில் எங்கள் பிணவயல்கள்
பரந்துகிடந்தன.
அதற்கு முன் பல காலமாய் மனதுக்கினிய
வயல்வெளி
கோபம் தணிக்கும் குளிர்காற்று அங்கிருந்தது
காதல் பிறக்கும் ஒரு கவிதையூற்று கலந்திருந்தது
மூங்கிலாற்று வெளி மிகப்பெரிது
மிகப்பெரும் இன்பத்துக்கும் மிகப்பெரும் துன்பத்துக்கும்
கிளிநொச்சியில் இருந்து எழுந்து நடந்து நகர
மறுத்த மனதின் ஏம்பலிப்பை எப்படிச்சொல்வேன்
நாம் மலையாய் நம்பியிருந்த நகரம் இழந்து போகபோக
எமது இனத்துக்கு ஏதோ நடக்கப்போவதாக மனம்
சொன்னது. நடந்தும்தான் ஆயிற்று.
நம்பிக்கையோடு சிவந்த மனிதர்களான எனது
உயிர்செல்வங்களை
தர்மம் கையெடுத்து வணங்குவதாக தோன்றுகின்றது.

உடையார்கட்டில்
தாள்வாரங்களில் குருதி ஓடிக்கொண்டிருந்தது
ஒரு பொழுது
இன்றுமது ஓலமடங்காக்கிராமம்
அது மிகப்பெரிது.
நந்திக்கடலை நோக்கி சாப்பயணம்
என்றுமில்லாதவாறு சுதந்திரதேவி
எங்களிடம் அதிகவிலைகேட்டாள்
என்றுமில்லாதவாறு அரக்கன்
வெறியோடு நின்றான்
என்றுமில்லாதவாறு மழை
கடலை பெய்தது
காலம் என்றுமில்லாதவாறு எங்களிடம்
எல்லாவற்றையும் கேட்டது.
குழந்தையின் புன்னகையில் இரங்காத
துட்டர்கள்
இரணைப்பாலையை பொக்கணையை
வலைஞர்மடத்தை முள்ளிவாய்க்காலை
சூழ்ந்து நின்றனர்.
இரட்டை வாய்க்காலில் ஒரு காலைப்பொழுதொன்றில்
புளுதி எழுந்தடங்கியது
கந்தக வெடில் சூழ்ந்து கிடந்தது
சதைத்துண்டங்கள் என்மேலும் விழுந்திருந்தன
தும்புகளான ஆடைகளின் துண்டுகளும்
என் மேல் ஒட்டிக்கிடந்தன
சில கணங்களின் முன்தான்
என் அருகே குழந்தையும் தாயும்
போகக்கண்டேன்.
எங்கள் குழந்தைகள் மீது
அன்றில் இருந்து மிகப்பிரியம்

இரணைப்பாலைக்கு அப்பால்
வெண் மணல் சூழ்ந்தவெளி
மணல் குழந்தைகளின் நண்பன்
மணல் குழந்தைகளின் கவிதை
மணல் குழந்தைகளின் கனவு
எனினும்
அவ்வினிய மணல்களால்
எங்கள் பிஞ்சுகளை மூடி
மணலில் துடித்தோம்
மணல்சாட்சியாக கடல் சாட்சியாக
நாம் தொழும் பெருங்கோயில்
வற்றாப்பளை கண்ணகையைச்சுற்றிய
உப்பு வெளியெங்கும் விரிந்துகிடக்கின்றது.

பெரு வலிமை மிக்க கண்ணகை
தன் பிள்ளைகளை
சன்னிதானத்திலே செந்துணியும்
சிவந்த கண்ணுமாக வந்த
கொடுரன் குதறி எறிய
கையாலாகாதவளாக நின்றிருந்தாளா
தீயை கொப்பளிக்க வல்ல காளி ஏன்
மெனமாய் பார்த்திருந்தாள்
சிங்கள குருதிவெறிக்கு இருண்ட வருமென்பதை
உணர்ந்திருந்தாளா
மதுரையை எரிக்க வல்ல மார்புகளைதான்
இரக்கமற்றவன்
வரலாறு உணராமல் வதைத்து
இன்று
தெருவுக்கு வரஇருக்கின்ற ஆண்டியானான்
என்று கண்ணகை சொல்கிறாளா.
இம்முறை வற்றாப்பளை அம்மனின்
உப்பு நீரில் எரியும் விளக்கு
என்றுமில்லாதவாறு சிவந்து ஒளிரும்
நந்திக்கடலில் கலந்த உயிர்களின்
இரத்தத்தின் சாட்சியாக
நீதியின் நெருப்பாக கிளருமது.

எங்கள் கண்களில் நிறைந்த பெருமைகளென
இனிமைளென
கவிதைகளென நாம் ஏந்திவைத்திருந்த
இசைப்பிரியாக்களே தராசுகளை ஏந்தியிருக்கிறார்கள்.
தமிழிச்சிகளின் சபதம் சிங்கள இராச்சியத்தின்
கனவுகளுக்குள் தீயென புகுந்துள்ளது.
சிங்காசனத்தில் இருப்பவன்
தன்னின பெண்களால் அருவருக்கப்படுபவன் ஆவான்
அவன் தெருவில் அவன் மொழியால் சித்திரவதை செய்யப்படுவான்
அவன் முகம் இருண்டு கறுத்து அசிங்கப்படுவான்
நீதியின் முன் அவன் ஒடுங்கிக்கிடப்பான்
காறி உமிழப்பட்ட எச்சில்களின் நடுவே
இறுதியாக அவன் முடிவு எழுதப்படும்.
நண்பர்களே!
உலகத்திசையெலாம்
இன்று நாம் உயர்ந்த பொருளானோம்
எமது விலை மிகப்பெரிது
எல்லையற்றது.
எமது இரத்தத்திற்கும் உயிரிற்கும்
அத்தனை வலிமையா!
அத்தனை வலிமைதான்
உலகின் எல்லா வியாபாரிகளையும்
அது காட்டித்தந்துவிட்டது.
எல்லா நடிகர்களையும் கண்டு வியக்கின்றோம்.
ஆயினும் காரியம் ஆகட்டும்
புலத்திலும் நிலத்திலும்
என்ன ஆகுவேண்டுமென்பதை கணித்துசென்றுவிட்டான் கரிகாலன்
வல்லவர்களுக்கு மட்டும்
இந்த வரிகள் புரியும்
இன்னும் பல யுகங்களுக்கும் ஆதர்சதலைமை
அவனே என்பதை அவன் அர்ப்பணிப்பு
ஆழ எழுதிவிட்டது.
தான் பெற்ற இளவல்களையெல்லாம்
இனத்திற்காய் கொடுத்த மாண்பைவிட
வேறென்னவேண்டும்
இத்தனை ஆண்டுகள் இனத்திற்காய்
தேய்ந்ததை விட
ஒரு திண்ணியம் வேண்டுமா
அவனை மூடிவைத்துவிட்டு தமிழர் விடுதலைபற்றி
பேசுதல் கூடுமா
அவன் வளர்த்தெடுத்த ராஜபாதையில்
உலகத்தின் நடுவில் தமிழினம்
உட்கார்ந்திருந்து நீதி கேட்கிறது
கறுப்பினத்துக்கும் வெள்ளை இனத்துக்கும்
எங்கள் வேட்கையை
அவன் வளர்த்த வீரியம் கொண்டுசேர்த்திருக்கின்றது.
மறைந்தாலும் உறைந்தாலும் மகாவீரன்
ஈழத்தமிழர் இதயங்களில் நிமிர்ந்திருக்கிறான்
வெற்றி என்பதற்கு புது வேதாந்தத்தை
அவன் இந்த பூமிக்கு விட்டுச்செல்வான்
ஒலிவ் கிளைகளுக்குப்பின்னும்
பனந்தோப்புக்களுக்கு பின்னும்
அவன் கரைந்துகிடக்கிறான்
பேரமைதியில் பிரமாண்டமாக ஒரு யாகத்தை வளர்த்து
உச்சமாகிறான்
நெடுங்கால பெட்டகமாய் காவிச்செல்லுங்கள்
பிரபாகரன் தமிழர் அடையாளம்.

தமிழர் இரத்தம் தமிழர் குருதி
தமிழினத்தின் இதயத்துக்குள் கரைந்து
ஒன்றாக இழுத்து வரலாற்றை எழுதென்று
எழுந்துநிற்கின்றது.
தமிழர் சக்தியை பூமி பார்;த்து புல்லரிக்க
திரள்கிறதா தமிழ்ச்சாதி
திரள்க!
இக்காலத்தை விட்டால் இடியின் மின்னலின்
சக்தியை உலகம் ஒருபோதும் அறிய வாய்ப்பில்லை
கொடிய இருளை ஊதித்தள்ளி நிலவை
நெடுஞ்சூரியனை தமிழர் வானில்
ஒளிரவிட ஒருபோதும் இடமில்லை
இனிக்கொடுக்க ஈழத்தமிழரிடம் உயிருமில்லை
முள்ளிவாய்க்காலை
அள்ளி உள்ளங்களில் ஏற்றிவையுங்கள்
தூங்கிக்கிடக்கிற தூய்மையான இனப்பற்றை
தாங்கு சக்தியாக களமிறக்குங்கள்.
அரசியலுக்காகவும்
அடுத்த பதவிக்காலத்துக்காகவும்
தயவுசெய்து குழந்தைகளின் மரணங்களை
சகோதரிகளின் சாக்கோலத்தை
மூலதனமாக்கி விடாதீர்கள்
உண்மையான இனப்பற்றுக்காக சுகபோகங்களை

கதிரைகளை துறந்து புறப்படுங்கள்
காலம் இமயங்களில் ஏற்றிவைத்து கிரீடங்களை சூட்டும்.
வரலாற்றுக்காலங்களில்
கடமைகளை கைநழுவவிட்டால்
பிறகெல்லாம் வெறும் பிதற்றலாகவே முடியும்.
தாயின் கடமை
தலைநிமிரச்செய்யும்.
நண்பர்களே!
விடுதலைப்பயணத்தில் வீரிய காலமொன்றில் நிற்கிறோம்
கவனம்!
இனியும் ஏமாறக்கூடாது.





பெருங்கொடுரர்களின் ஊழிக்கூத்தை
காட்சிகளை காவிச்சென்று
உலகமகா சபையில் உலவக்காரணமான
மனச்சாட்சிகளை உலுப்ப உதவிய
மானுட நேசத்தை
அந்த மகா கரங்களை
கண்ணில் ஒற்றிக்கொள்கிறேன்.
இன்றைய சக்தி அது.








Monday, March 5, 2012

பிணங்கள் பற்றிய பேச்சு..............


பொன்.காந்தன்.







இன்றையைப் பொறுத்தமட்டில்
தமிழர்களின் மரணங்கள் என்பது ஒரு பொருட்டே அல்ல
அவர்களின் உடல்கள் துண்டு துண்டாக சிதறி இருக்கலாம்

அவை ஒன்றும் பெரிதே அல்ல
எமது இளம் பிஞ்சுகள்

சுதந்திரம் வேண்டுமென முப்பது நாற்பது வருடங்களாக
ஒவ்வொரு களத்திலும் மடிந்திருக்கலாம்
உண்மையாக அவையெல்லாம்
முட்டாள்களின் முடிவு
காணாமல் போனவர்களை கடத்தப்பட்டவர்களை
தேடி தேடி தேய்ந்த தமிழ் உறவுகளின் வலி
அவையெல்லாம் வெறும் தூசு
எனக்கு ஞாபகம் இருக்கின்றது
ஐ.நா சபையே! சர்வதேசமே!
எமைப்பார்க்காயே பேசாயோ என்று
இன்று அந்த சபை முழுக்க
எமைப்பற்றி பேசுகின்றது
எம் பிரதிநிதிகளோ
ஈழ மண்ணில் நடந்த மரணங்களைவிட
இன்னும் அதிகம் நடந்திருக்கவேண்டுமென்று
எண்ணுகிறார்கள்போல்.





நண்பர்களே!
மரணத்தைவிட
கொலைகளைவிட
ஒரு மனிதன் போபமுறுவதற்கும்
ஒவென்று அழுவதற்கும் வேறேதும் உண்டா!
இன்று ஜெனிவா என்ற வார்த்தையும்
ஐ.நா என்ற வார்த்தையும்

தமிழர் பிரதிநிதிகளின்
காலடியிலும் சிங்கள பிரதிநிதிகள் காலடியிலும்
அர்;த்தமற்றதொன்றாக அவமானப்பட்டுக்கிடக்கின்றது.
ஐ.நா சபையையும் விட நமது மனித உரிமைகள்
பற்றி பேசுவதற்கு வேறு சபைகள் உண்டா
எமது பிரதிநிதிகளிடம் கேட்டுப்பார்க்கின்றேன.;
சிங்களவர்கள் எம்மை கொல்லும்போது
அதுதான் அதிகவலி என்று நினைத்தோம்.
ஆனால்
எமது பிரதிநிதிகள் எம்மைபற்றி பேசாதபோது
அதைவிட வலிக்கிறது இப்போது
என்கிறார்கள் எமது மக்கள்.






நாங்கள் நம்பிக்கையுடன் தெரிவுசெய்த

நம் பிரதிநிதிகளே!
உங்கள் உயிர்கள் மீதும்
உங்கள் குடும்பம் மீதும்
அதிக பிரியமாய் இருக்கிறீர்கள்
எவ்வளவு அற்புதமானது.
அப்படித்தான் கொல்லப்பட்ட
ஆயிரமாயிரம் தமிழ் உயிர்களும்
தங்கள் உயிர்கள் மீதும்
தங்கள் மீதும் மிகவும் பிரியமாய் இருந்தார்கள்.
எம் மக்களின் மரணங்கள் பற்றி பேசாத
அக்கணமே
உங்கள் மரணங்கள் நடந்தேறிவிட்டது
மக்கள் உங்கள் பிணங்கள் பற்றி
பேச ஆரம்பித்துவிட்டார்கள்