Tuesday, April 17, 2012

உண்மை



பொன் காந்தன்

வலிய கிளைகளில் வந்தபோதும்
கனிகள் வீழத்தான் செய்தன
நறு மண மலர்களுக்கிடையில்
தனித்திருக்கிறது எனது பயமொன்று
அது எல்லாவற்றையும்
இறுக பற்றிகொள்கிறது
 மகா பொய்யை உணர்ந்ததாக....
எல்லா உண்மைகளோடும்
நான் புறப்பட்டபோதும்
முகமூடி வியாபாரி
ஒன்று வாங்குங்கள் என்று கெஞ்சுகிறான்
நல்ல கலப்பற்ற
உண்மையான முகமூடி என்கிறான்
முகமூடி ஒன்று வாங்கினேன் ...




Monday, April 16, 2012

முள்ளிவாய்க்கால் என்ற புனித அடையாளம்

பொன்காந்தன்


ஒப்பாரி வைப்பதற்கு கூட
ஒருவரும் இல்லாமல்
செத்துப்போனார்கள் சில குடும்பங்களில்.....
 என்ற சேதியுடன்
முள்ளிவாக்காலின்
மூன்றாண்டு சிவப்பு நினைவுகள் .
மலரிட்டு மண்டியிடமுடியாத
எம் மாதவர்களின் மண்திட்டுகளில்
இன்று செம்படையர்களும்
ஆரியர்களும் ஆளுக்கொரு பக்கமாக நின்று
கொம்புக்கு மண்ணெடுக்கின்றார்கள்.
உலகின் மாதா முடிகள் என்று பெயரெடுத்த
பெரு மல்லர்கள்
எங்கள் பூக்களை அறுப்பதற்கு
புத்தி கெட்டவர்களுக்கு வாள் கொடுத்த கயமையை
நாம் மறந்திலோம்.
கனவுடன் புதைக்கப்பட்ட கற்பகங்களின்
திரு நிலம்மீது பன்னீர் தெளித்து
யாரும் புண்ணியர்கள் ஆகமுடியாது.
பூமி ஒரு போதும் மன்னிக்காது.
நேற்று
சண்டியர்களின்சரித்திரம் தானென
தண்டிகைமீதேறி தான்தான் என்றவன்
இன்று
தர்மத்தின் தண்டனையில் சிக்குண்டு
மெல்ல மெலிகிறான்.
தமிழரின் இரத்தம் காயாத வலியின்
வதையது.
ஆத்மஓலம் அடங்கா அதர்மசங்காரமது.
என்ன கேட்டோம் நாம்
காலியில் கால் பங்கா
அம்பாந்தோட்டையில்  அரைவாசியா
அலரி மாளிகையின் அந்தப்புரமா
என்ன கேட்டோம் நாம்
ஒரு நிலாக்காலம்
நெடும்பனையின் சரசரப்பு
நீட்டி நிமிர்ந்து படுக்க ஒரு காற்று வருடும்
நம் காதல் நிலம்.
குச்சவெளியிலும் கொக்கட்டிச்சோலையிலும்
கல்லடியிலும் கணுக்கேணியிலும்
கைதடியிலும் கரவெட்டியிலும்
சின்னத்தீவுகளிலும்
அடம்பனிலும் ஆட்காட்டிவெளியிலும்
இந்த கைவிரித்து நாம் நடந்த கட்டற்ற சுகம்
முன்பொருகால் இருந்தது உண்மைதானே!
பிறகேன் சிங்களர்க்கு
எம் நிலம் தின்னும் இயமம் வந்தது.
மூவேந்தரை படித்துத்தான் மீண்டும்
தேரேறினோம் நாம்.
தெளிவில்லாமல் புலி ஒரு போதும் பிறக்கவில்லை
எமக்கு அழிவில்லாமல்
ஆயுதம்தூக்க ஆசைவரவில்லை
அகிம்சையில் அதர்மம் அடங்க மறுத்தபோதுதான்
விடங்களை அணிந்த விந்தைகள் எழுந்தது.
வயலும் புலமும் வாழைத்தோட்டமும்
பாலும் பசும்புல்வெளியும்
பாட்டும் கவிதையுமென்று
நீட்டிமுழக்கி நெளிவெளிடுத்து கிடந்தவரின்
வீட்டுக்குள் புடையன் பாம்பாக மடையர்கள் நுழைந்து
இன நிம்மதிக்கு இடையூறு சிங்களன்செய்த பிழை
சிங்கள ராசர்களின் நெடுந்தவறு.
நீட்டோலையில் நிரம்பி வழிகின்றது
கைமுனு பரம்பரையின் கசப்பான அனுபவங்கள்.
கைமுனு பரம்பரையென்றுரைக்கக்கூட
கையாலாகாதவராக காலப்பழி சுமந்து
சிங்கள இனம்


துட்டகைமுனு
எல்லாள மன்னனை
எல்லோரும் மதித்துப்போங்கள் என்று
பண்பாடு அமைத்தவன்.பண்பானவன்.
இந்த பின்னணி தெரியாமல்
சிங்காசனங்களை சீர்கெடுத்தவர்கள்
பின்வந்தவர்கள்
இன்றிருக்கும் சிவப்புத்துண்டு
இதற்கெல்லாம் மாமுடி.
சிங்கள தேசத்தில் நல்லவரை
நாகரிகமுள்ளவரை
மென்காற்றென வருடும் உள்ளங்களை
நம்மினம் என்றுமறியும்
அவகளுக்கொரு வணக்கம் என்றும்
தமிழினத்துள் தளிர்த்தபடி இருக்கும்.
வருத்தமென்னவெனில்
முல்லையில் வைத்து எல்லாம் முடித்துவிட்டேனென்று
மங்களம் பாடிய மடையனின் வார்த்தைகளை
மந்திரமென ஏந்தி உல்லாசப்பயணிகளாய்
சிங்கள நண்பர்கள்
எங்கள் செத்தவீடுகளை
சிதிலங்களை
கொத்தாய்
எம் சித்திரங்கள் புதைந்த மேடுகளை
பார்த்துக்களிக்க வந்ததுதான்.
உலாசமாய் திரிந்த காலடிக்கு
சாபங்கள்தான் மிச்சம்.
வாழ நினைத்த எத்தனையாயிரம் வாழ்க்கை
ஈழ மண்ணிலே இடை நடுவிலே
கதைமுடிந்து போய் கிடக்கின்றது.
இன்றைக்கும் அர்த்தசாமத்தில்
எத்தனை அன்னையர்கள்
அடிக்கடி திடுக்கிட்டெழுந்து தன் பிள்ளை
அழைத்ததாய் புலம்புகிறார்கள்
அந்த அன்பு விடலைகள்
எறிகணைகளில் பல நூறுதுண்டுகளாய்
அன்னையுர் பார்த்திருக்க சிதறியது
காலப்பேருண்மை.
தமிழகம் வெறுக்கும் ஆரியக்குழு
ஈழ மண்ணுக்கு மீண்டும் இளவு சொல்ல வருகிறதா
பண்டைய உறவு அண்டைய நாடு என்று
நாம் எத்தனை மதிப்புற்றோம் முன்பு.
நம் மக்கள் தலையில் இடிவீழ
காரணங்கள் அதிகம் டெல்லிதான் என்று
இங்கு சொல்லித்தான் தெரிவதில்லை.
அடுத்தமுறை ஆட்சியை காப்பாற்றபோடும்
தமிழர் மீதான அன்புவெள்ளம் அவ்வளவுதான்.
இந்திரா காந்தி இறந்தபோது
எங்கள் மூத்த சோதரி முடிந்ததாக
மூன்றுநான் உலையேற்றாமல்
ஆற்றாமல் அழுத நம் மண்ணுக்கு
பார்த்தசாரதிகளையும்
டிக்சிற் நாராயணன்களையும்
கிருஸ்ணலீலைகளையும்
நாச்சியப்பர்களையும் மோந்துபிடிக்க
நம் தம்பி நன்றாக கற்றுத்தந்துள்ளான்.
காடேறிகளுக்கு எதிராக முதன்முதலாய்
கைதூக்கியது காலநெருக்கடி
சீனா விழுங்குகின்றது என்று
சிதம்பரம் சொன்னதன் விளைவு
தன்மானம் உணர்ந்த தமிழகம் எடுத்த
தனிப்பெரும் முடிவு.

தர்மத்தின் தண்டனைப்பார்வை
காங்கிரஸ் மீதும்தான் கவிழ்ந்திருக்கிறது.
நேற்று தமிழகத்தில் தலைகுனிவு
அடுத்து இனிய தமிழருக்கு இழைத்த கொடுரத்துக்காக
இரண்டு அரசுகள் கவிழும்
சிங்கும் சிங்கங்களும் முடியிழந்து போகிற காட்சி
நாம் வாழும் காலத்தில் நிகழும்.
முள்ளிவாய்க்கால் சாபத்தில் கல்லாய் போகும் காங்கிரஸ்
எந்த இராமனும் சாபவிமோசனம் தரப்போவதில்லை.
நண்பர்களே!
முள்ளிவாய்க்கால் முடிந்துபோனவர்களின் புத்தகம்
முடிவுறாத கதையின் மறுபாகம்.
பெரும் வேதப்பொருளாக
நந்திக்கடலின்
நாம் நேசிக்கும் முல்லை பெருநிலத்தின்
நெய்தல் தோன்றுகின்றது.
இனியொரு முறை கால்புதைய நடக்கும்
காதலர்க்கெல்லாம் நேசிக்கும் மாண்பை அது
கற்றுத்தரும்
அது மண்ணை நேசித்த மனிதர்களின்
மாபெரும் காதல் பூமி.
பின்னொருகால் பேரழகுபெற்ற இதழ்களோடு
மலர்கள் பூத்துக்குலுங்கும்
அதற்குள் கண்ணீர் வழிந்தோடி
சிங்கள காமுகர்களால் கசக்கி எறியப்பட்ட கதைசொல்லும்.
அரசு வளரா
நிலமாய் விரயும் அது.
வீரம் சாயா மண்ணில் வீரர்கள் சாய்வது இயல்பு
அதுவே அந்த உப்புவெளியில் நடந்தேறியது.


நாங்கள் கல்லறைப்பாடல்களை
பாடவில்லை
மலர்கள் அள்ளிசொரியவில்லை
மார்பில் அடித்து அழவில்லை
அதன் மறுபெயர்தான் எம் பெருநெருப்பு.
முள்ளிவாய்க்கால் நினைவுகளின்போது அந்நெருப்பு எரிகிறது.
அப்பெருநெருப்பில்
திருக்கைவால் போன்ற பெரிய மீசையும்
சுறாவின் வாயோடும்
வேடர்களின் பார்வையோடும்
வகிடுஎடுத்த சுடலை போன்ற
பெரிய நெற்றியோடும்
யாரும ;இனி அணிய வெட்கப்படும் சிவந்த
சால்வையோடும் நிற்கும் அரக்கனை
தெளிவுறபார்க்கிறோம்.
அவன் கண்களில் ஏக்கம் ஒன்று
நந்திக்கடலின் அலையைபோல் மோதுகின்றது
அரக்கனின் தோல்வியும் மரணமும்
எமது நிரந்தர சுதந்திரம் ஆகாது
எமது சுதந்திரம்தான் அரக்கர்களின்
நிரந்தர தோல்வி.
முள்ளிவாய்க்கால் என்ற புனித அடையாளம்
தன் கைகளை நீட்டுகின்றது
சத்தியம் எடுத்துக்கொள்ளுங்கள்.

Friday, April 13, 2012

ஞானம்

 பொன்காந்தன்


கல்லறையில் மோதி
இறந்து கிடக்கின்றன
சில வண்ணத்து பூச்சிகள்
சுற்றி
மலர்ந்து கிடக்கின்றன
பலவண்ண பூக்கள்
அப்பாவுக்காக அழவும்
என் பிள்ளைக்காக சிரிக்கவும்
நான் எழுதப்படுவதாய் உணர்கிறேன்

பதினாறு

  -பொன்காந்தன்


பக்குவமாய் சொன்னேன்
பதினாறு கேட்கவில்லை
சொர்க்கமென எதை நினைத்தோ
சுழல்கிறது மயக்கத்தில்
வெட்கமென சொன்னேன்
... வீண் பேச்சு என்றது
துக்கம் வரும் என்றேன்
தூ நாயே என்றது
பக்குவமாய் சொன்னேன்
பதினாறு கேட்கவில்லை
அக்கம் பக்கம் பார்த்தேன்
அறைந்தேன் பளாரென்று !

வருடங்கள் வந்து போகும்


-பொன்காந்தன்


ஓட்டைகைகள் நூறு குடிசை
ஒவொரு வீடும் பிச்சை
தேட்டங்கள் ஏதுமில்லை
தெளிந்திட வழியுமில்லை
கூற்றுவன் ஆட்சி இங்கு
குனிந்துதான் நடக்கவேண்டும்
மாற்றிட வழிகள் கண்டால்
மர்மமாய் மரணம் கூடும்
ஏறிய விலையின் வாசி
எதிலுமே சிரமம் சிரமம்
... காய்ந்த மண்ணில் வந்து
கவட்டினை காட்டிக்கொண்டு
களிப்பு நடனமிட்டு
விழாக்கள் தினமெடுத்தால்
உரிமை பிரைச்சனைகள்
ஓடி மறைந்திடுமோ
வறண்டு கிடப்பவர்க்கு
வழிகள் ஏதுமில்லை
வாட்டி எடுக்கிறது
வஞ்சகர் ஆட்சி இங்கு
பரவசம் ஆவதற்கு
இப்பா எழுதவில்லை
விதியினை நொந்து வரும்
வேதனை வரிகள் இவை
மடையர்கள் ஆளும் மண்ணில்
புதியன என்று நின்று
பூரிக்க முடியவில்லை
வருடங்கள் வந்து போகும்
எம் வாழ்க்கையோ அன்றும் வேகும்

சிரமம்


  -பொன் காந்தன்


ஓட்டைகைகள் நூறு குடிசை
ஒவொரு வீடும் பிச்சை
தேட்டங்கள் ஏதுமில்லை
தெளிந்திட வழியுமில்லை
கூற்றுவன் ஆட்சி இங்கு
குனிந்துதான் நடக்கவேண்டும்
மாற்றிட வழிகள் கண்டால்
மர்மமாய் மரணம் கூடும்
ஏறிய விலையின் வாசி
எதிலுமே சிரமம் சிரமம்
... காய்ந்த மண்ணில் வந்து
கவட்டினை காட்டிக்கொண்டு
களிப்பு நடனமிட்டு
விழாக்கள் தினமெடுத்தால்
உரிமை பிரைச்சனைகள்
ஓடி மறைந்திடுமோ
வறண்டு கிடப்பவர்க்கு
வழிகள் ஏதுமில்லை
வாட்டி எடுக்கிறது
வஞ்சகர் ஆட்சி இங்கு
பரவசம் ஆவதற்கு
இப்பா எழுதவில்ரும்
வேதனை வரிகள் இவை
மடையர்கள் ஆளும் மண்ணில்
புதியன என்று நின்று
பூரிக்க முடியவில்லை
வருடங்கள் வந்து போகும்
எம் வாழ்க்கையோ அன்றும் வேகும்