Saturday, September 3, 2011

தீராத புரட்சிக்காரி




-பொன்.காந்தன்

செங்காடி தீராத புரட்சிக்காரி
எரி மலைகளின் புறப்பாட்டை
மற்றும்
எல்லையற்ற தாகத்தை
இன்னும்
தன் இதயத்தை
எல்லோரது உதட்டருகில் வைத்து
சொல்லக்கூடிய செய்தியை
நினைவுபடுத்தியிருக்கிறாள்.
பெண்'சே'யாக

சிலைகளோடு
சில மேடைகளோடு
செங்கொடி அடங்கிவிடக்கூடியவள் அல்ல
வழியற்ற காலத்தின் வழியவள்
தமிழர்கள்
அவளுக்கு எதைக் கொடுக்கப்போகிறார்கள்
அவள் இன்னும்
பல இலட்சம் பேரையும்
பல்லாயிரம் ஆண்டுகளையும்
பல நூறு மாளிகைகளையும்
பல நூறு அஸ்திரங்களையும்
அப்படியே பொத்திப்பிடித்து
ஒரு சில கணங்களில்
காட்டிச்சென்றிருக்கிறாள்.
செங்கொடியும்
இருண்ட காலத்தின் உயர்ந்த பாடல்
என் தாய் செங்கொடியையும்
பெற்றெடுத்தாள் என்று நினைக்கும்போது
மகிழ்ச்சி
அங்கயற்கண்ணி வெடித்த போதும்
இப்படித்தான்  நிமிர்ந்து நின்றோம்.
அங்கயற்கண்ணிக்கு ஆணையிட
ஓரு அரசனாவது இருந்தான்.
செங்கொடிக்கு ஆணையிட யாரிருந்தார்
அதனால் அரசியாகியிருக்கிறாள் அவள்
செங்கொடியின் இறப்பில் மகிழவில்லை
பிறப்பில் மகிழ்கிறேன்
அவளின் மரணம்
தமிழ் தலைவர்களின் பலயீனம்
தமிழர்கள் இன்னும்
ஒன்றாதல் உணரா வெளிப்பாடு
செங்கொடிகளுக்காய்
தலைவர்கள் எப்போது
தீக்குளிப்பார்கள்