Saturday, September 1, 2012

காம்புகளின் வாசம் .........




 பொன் காந்தன்



நீண்டு விரிந்து கிடக்கிறது
தாயின் மடி
தாலாட்ட  குழந்தைகள் அற்று
கண்ணீர் ஓடும் வெளியென ..........
மடியை மடியை பார்த்து
மார்பை மார்பை பார்த்து
ஓடி வரும் கன்று
தொலைவிலும் ஒரு புள்ளியென
இல்லை என சாகும் தாய்மை ..

இன்றும் நேற்றும்
அதற்க்கு முன்னான நாட்களிலும்
வந்து போவாள் அவள்
பிள்ளை இருக்கிறானா ? இல்லையா ?
இந்த கேள்விகள் கண்ணீரோடு
நிரம்பி வழிய !

ஒரு மகன் என இருந்து
இடித்து விழும் வானம் தாங்கி
உடைந்து விழும் நட்சத்திரங்கள் விழுங்கி
அறுந்து தொங்கும் சிறகுகள் உடுத்து நான் ....

கனவுகளில் அவள் நடத்திய
பிள்ளைகளின்
திருமண அழைப்பிதழ்கள்
என் மேசை முழுக்க பரவி கிடக்கிறது
கற்பனைகள் பெற்றெடுத்த
பேர குழந்தைகளின் கொஞ்சல்கள்
அளைகிறது அவளின் முற்றமெங்கும் ....
காம்புகளின் வலி
மகரந்தங்களை மலடாக இருந்து விட
மன்றாடுகிறது ........

நூறு தங்க ரதங்கள் சூழ
பல்லக்கில்
அவளை ஏற்றி மலர் சொரிய
தேவ லோக பவனிக்கு தயாரான போதும்
அவள் கேட்க்கிறாள்
பிள்ளை எங்கே ?
இருக்கிறானா? இல்லையா?
பதில் இல்லா ஒவ்வொரு கணமும்
நரகத்தில்
உழல்கிறாள் அம்மா !


எலும்பு அழைத்தாலும்
சாம்பல் அழைத்தாலும்
காற்று அழைத்தாலும்
தன் பிள்ளையின் அழைப்பு
அறிவாள் அம்மா
அறிந்தால் சொல்லுங்கள்
அவள் பிள்ளையை .......

 

Monday, August 27, 2012

அஞ்சலி -நீல்அம்ஸ் ராங்







-பொன்காந்தன்




நிலவின் கண்ணீர் ஒன்று 
நேற்று என் இதயத்தில் விழுந்தது 
தன் முதல் ஸ்பரிசம் மூச்சு இழந்ததாக 
அது விம்மியது 
நீல்அம்ஸ் ராங் பற்றிய 
வானத்தின் வரி அது 

நீல் அம்ஸ் ராங் 
இப்போது நிலவையும் 
கடந்து போனார் 
வானில் தெரியும் எல்லா
நட்சத்திரங்களில்
கோள்களில்
அவர் கால் பதித்திருப்பார் .
அவரது தீரா விடாய் அதுதான் .
மானுட அறிவின்
அழகான பிரகாசம்
நீல் அம்ஸ் ராங்
துளியும் கற்பனை அற்ற
பேருண்மை அவர்
உண்மை களின் தேடலுக்காக
1960களிலோ
அதற்கு முன்போ
உயிர் கொடுக்க தயாராக இருந்தார் .
எல்லாவற்றையும் அவர் கடந்தார் .

இதை எழுதிகொண்டிருக்கும் போது
அருகில் ஒரு கோவிலில் நம்மாள் ஒருவர்
ராசிகள் பற்றியும்
இதிகாச புராண பூசாண்டிகளையும்
தேன் ஒழுக தெளிக்கின்றார்
கடவுளின் அருட் கடாட்சம் பற்றியும்
சொரிகிறார்.
நீல் அம்ஸ் ராங் அதயும் தாண்டி
நீக்கமற நிறைந்திருப்பதாய் உணர்கிறேன் .

நிலா சோறுதான்
இன்றைக்கும் நம்மில்
கோடிக்கணக்கானவர்களின் புளகாங்கிதம்
அம்ஸ் ராங்கின்
நாமம் கூட தெரியாத நம்மாள்
பல பேருள்ளார்கள்
அவர் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு
இருந்ததாக இதுவரை நினைத்தோம்
என்கிறார்கள் நேற்று சில நண்பர்கள்
வெட்கக்கேடு என்ன வென்றால்
அதில் ஆசிரியர்கள்
பட்டதாரிகள் ................

நீல் அம்ஸ் ராங்
நிலவில் பிறந்த போதும்
இப்போது அமெரிக்காவில்
இறந்தபோதும்
நம் சனம்
சாதிகளாலும்
துரோகங்களாலும் கூறுபட்டு
கோமாளிகளாக இருக்கிறார்கள் .
காலடி மண்ணையே
சரியாக மிதிக்க தெரியாத
உணர தெரியாத தமிழ் சாதிக்கு
நிலவு
ரொம்ப தூரம்
நீல் அம்ஸ் ராங்கின் வரவும் பிரிவும்
சொல்லும் சேதி புரியுமா

அமெரிக்கர் களுக்கு
நீல் அம்ஸ் ராங்
நிலவை புதிதாக அறிமுகம்
செய்தபோது
அமெரிக்கர்கள் புல்லரித்து போனார்கள்
அந்த புல்லரிப்பு
இன்று செவ்வாய் வரை ......
ருசியர்களும் தூக்கத்தை குறைத்தனர்
சீனர்களும் வானத்தை பார்த்தனர் ........
நம்மாளுக்கு
ஒரு பொன்னாடை போதும் புல்லரிக்க
நம் சபைகள்
முதுகு சொறிவதோடும்
பழைய இதிகாச புராண
கற்பனைகளை
ஒப்புவிப்பதொடும் முடிந்து விடுகின்றன
மூழ்கி முத்தெடுப்பதாய் நினைப்பு
இன்னும் பல நூற்றாண்டுகள்
புதைவது அறியாமல் .....
நீல் அம்ஸ் ராங்
நம்மாளுக்கு போது அறிவு தேர்வில்
ஒன்றோ ஐந்தோ
புள்ளி எடுப்பதற்கான விடை
அவ்வளவு தான் ....

நீல் அம்ஸ் ராங் இறந்து போனார்
அவரின் அஞ்சலி குறிப்பு
சாதாரண மனிதர்களுக்கானது அல்ல
விண்ணுக்கும் மண்ணுக்குமானது
நிலவின் குறிப்பையும்
பூமியின் குறிப்பையும்
சேர்த்து எழுதுகிற
புதிய மனிதனின் வான சஞ்சாரம் ...
சொர்க்கம் நரகம் பற்றிய
நம் புலுடாக்களுக்கு அப்பால்
ஆச்சரியம் மிக்கதாக
உண்மை நிரம்பியதாக
நிலாவுக்கான பூமியின் முதல்
கவிதை ஆகிய நீல் அம்ஸ் ராங்கின்
இறப்பின் பின்னான சஞ்சாரம் எழுதப்படும் ......

Wednesday, August 8, 2012

சிலிர்ப்பு


-பொன்காந்தன்



நித்தமும் உன்
நெடுஞ்சோலையை
நீ ரசித்தாய்
உனை மறந்தாய்
மொட்டுக்களை
அது மலரும் மென் கணங்களை
நீ அறிவாய்
முற்றமெலாம் நீ விதைத்த
செடி மலர்கள்
அவை
சட்டென கடக்கும்
வழி போக்கன் பார்வையில்
சிலிர்த்தன என்றுமிலாதவாறு......
வாடி விழும் வரை
காதலித்தன வழி போக்கனை

ஒ ! வழிபோக்கனே
நீ போய்கொண்டேயிரு




Tuesday, August 7, 2012

முடியாதவனின் குரல்


-பொன்காந்தன்


மிக மிக  தொலைவில் ஒரு பையன் நிக்கிறான்
அது மிகப்பெரும் தொலைவு
மிகவும் ஆவலாய் இருக்கிறேன்
முடியாத காரியம்
முடியவே முடியாத காரியம்
அவனை பார்க்க எல்லையற்ற ஆவல் கொண்டுள்ளேன்
இது ஒரு முடியாதவனின் குரலாக
நீங்கள் எடுத்துக்கொள்ளுங்கள்
பறவாய்இல்லை
அதை பற்றி கவலையும் இல்லை
இப்போது மட்டும்
மந்திரங்கள் மீதும்
மாந்திரிகங்கள் மீதும்
ஒரு தேடல் வந்துள்ளது
அவனை அறிந்திடல் வேண்டும்
ஏதேனும் உருவம்
என்ன வரம் வேண்டுமென கேட்காதா?
இது ஏலாவாளியின் புலம்பலாக
எடுத்துக்கொண்டாலும் எனக்கு கவலையில்லை
அவன் கண்ணில்
கைகளில் உதடுகளில்
என்ன இருக்கிறது
எனக்கு தெரிந்தாகவேண்டும்
நம்பிக்கையோடு மரணி என்று
ஓர் வார்த்தை உதிர்வானா !




Tuesday, July 24, 2012

கண்களின் விருந்து


பொன்.காந்தன்



இதயத்தை தொடும் வரை இருந்தேன் -உன்
இரு விழி அசைவினில் கலந்தேன்
உனக்கென மறுமுறை பிறந்தேன் -உன்
முகவரி எதுவென அலைந்தேன்

விழியினில் ஒரு நதியோடும் -என்
விடுமுறை நாட்களை தேடும்
கனவுகள் ஆயிரம் கோடி -உனை
சேர்ந்திடும் வாசல்கள் தேடி


சுகமென நானுனை வரைந்தேன்
சொர்க்கங்கள் ரசித்தன என்னை
இனிமைகள் இறைவனின் பரிசு -அதில்
உயர்ந்தது உன்னிடம் இருக்கிற மனசு

பொழிவது மழையென இருந்தேன் -உன்
பூமுகம் சில்லிட வியந்தேன்
விழிகளில் இத்தனை மலரா -நீ
வெண் மதி சூடிடும் அழகா
உன் விடை எழுத கேள்விகள் கோடி
உருகுது கவிதை உன் மடி தேடி


அர்ச்சுனன் வில்லை திருடிய கண்கள் 
ஆதாம் இன்னும் சுவைத்திடும் கனிகள்
காமன் எழுதிய கடைசி கவிதை
காதல் கொடுத்த காதல் பரிசு
யாதும் நீயே ஆனதினாலே
ஆண்களின் தவங்கள் அழகென ஆச்சு


நீ இந்திர லோக தேவதை இல்லை
மந்திரம் செய்த மாயமும் இல்லை
தூரிகை செய்த ஜாலமும் இல்லை
காதல் தந்த கண்களின் விருந்து

 

Friday, July 20, 2012

உனது மழையும்
எனது வெறிச்சோடிய வானமும்

பொன் காந்தன்


மெய் விழியே ! மெய் விழியே !
நீ எங்கு போனாய்
மெய் மனிதர் வீழ்கையிலே
பொய்யுடுத்து கிடந்தாயோ
இன்றுன் பெயர் என்ன
சாக்காடு முழுதும்
பூக்காடு எழுத
இன்றுதிரும் உன் புன்னகையை
குரங்கு தின்னி பழம் என்று
நம் காலப்போடியன்
கணித்து போவான் .


தாகத்தில் நீ பொழியா மழை
பாவத்தின் அடையாளம்
எனினும்
நீ பொழிவாய்
பூப்பாய்
கனியென இனிப்பாய்
இரக்கத்தின் கடவுள்
இதயம் தொடும் கருணை
எல்லாம் சுமப்பாய்
மானுடம் கரைய
ஊழியை பார்த்து
உட்கார்ந்திருந்த உனதவதாரம்
தேவலோகத்தை சிருஷ்டிக்கும் சக்தியை
எப்போதோ இழந்துவிட்டதை நீ அறியாய்

என்றோ உன்னை சங்கரிக்கப்போகும்
அஸ்திரங்கள்
காலடி மண்ணில் கருத்தரிக்க
நீ எதற்கோ காத்துகிடக்கிறாய்
நான் எதற்கோ காத்து கிடக்கிறேன்

பூமியின் தேகமெங்கும்
உன் நகங்களின் காயங்கள்
காயங்களின் மீது
சில கால சகுனிகள்
மகுடங்களோடு திளைத்து கிடப்பது
உன்கால பூக்களென தெரியும் சிலருக்கு
புளுக்களென நெளியும் எமக்கு .


என் வாசலில் நீ நின்றாலும்
என் வீட்டில் நீ விருந்துண்டாலும்
நான் உனது நண்பன் அல்ல
தேநீர் குவளையும்
உணவு தட்டும்
பூங்கொத்தும்
உனக்கு விரிக்கப்படுகிற
வலையாக இருக்கலாம் .
என் பின்னாலேயே திரி
ஓயாமல் கணக்கெடு
உன் சுவர்களில் என் முகங்களை
ஒட்டிவை
எல்லா ஆலோசனைகளின் பின்னும்
உன்னால்
என் குழந்தையை தூங்க வைக்க முடியாது .


 

Wednesday, July 11, 2012

புதிய இதயத்தின் நாட்கள் ..........



பொன் காந்தன்



நிரம்பிய காதலுடன்
உன்னை சந்தித்த போதெல்லாம்
எல்லாம் மோட்சமடைந்தன
எல்லாம் விடுதலை பெற்று சென்றன .
எல்லாம் கரைந்து போன கணங்கள் அவை .
எல்லாம் கொடுத்துவிட்டு
ஏவல் அற்றும்
சேவகம் அற்றும்
மன்னனாய் இருத்தலான பேரின்பம் .

உன்னை நான்
சந்தித்தேன் என்பதும்
என்னை நீ
வேரோடும்
வானத்தோடும்
பறவைகளோடும்
புரிந்துகொண்டாய்  என்பதும்
கடைசி நாளுக்கு
முதல்நாள் நடந்த
முதல் நாளின் ஆச்சரியங்களில் ஒன்று .

மொழிகளற்ற உலகின்
முதல் எழுத்தாய் தொடங்கும்
இச் சந்திப்பு
எதை எழுத போகிறதோ
அது
புரிய இயலா கொந்தளிப்பாய்
நுரை தள்ளி கிடக்கும்
பிறவியின் இறுதி கணங்களில் .....

குருவிகளும் காற்றும்
பறவைகளும்  பார்வைகளும்
விளைவித்த கனியென
பரவும்
காதலின் புதிய முற்றத்தில்
உட்கார்ந்து இருக்கிறது
நமது சந்திப்பு புதிய உலகை அழைத்தபடி ...

கடவுள்கள் ஒருநாள்
மலர்களுக்கு செய்த
அர்ச்சனை தீர்த்தத்தை
அருந்திய பரவசம்
இடையில் கள்ளருந்தி போய்
இமைகளில் ஊரும்.
திருடிசெல்லப்பட்டிருக்கும்
எல்லா நெருடல்களும் முடிவில்

Sunday, June 10, 2012


சாமான்ய மன்னனின் பயணக்குறிப்பு ....................



-பொன்.காந்தன் 

எனக்கு மூன்று புரவிகள் வேண்டும

திக் விஜயம் போ

ஒன்று பூக்களோடு செல்ல

ஒன்று  வாளோடு செல்ல

ஒன்று எதுவுமற்று .......

மன்னர்களே !

மன்னர்களே !

 உங்கள் சாம்ராஜ்யமும்

சேடிகளும் அந்தபுரங்களும்

எனக்கு தேவைப்படாது

நீங்கள் எழுப்பிய

காவல் கோபுரங்கள்

மந்திரிகள் ஒற்றர்கள்

எல்லாம் பெருமைக்குரியவை ....

எல்லாமும் உங்களுக்கு தேவை

துயர் அறியா உங்கள் நெஞ்சமும்

துளி அறியா விழிகளும்

இந்த உலகத்துக்கு தேவை.

மன்னர்களே !

மன்னர்களே !

உங்கள் மனதின் சுவர்களை மட்டும்

அகற்றி விடுக!

நான் புறப்பட்டு விட்டேன் .

Tuesday, April 17, 2012

உண்மை



பொன் காந்தன்

வலிய கிளைகளில் வந்தபோதும்
கனிகள் வீழத்தான் செய்தன
நறு மண மலர்களுக்கிடையில்
தனித்திருக்கிறது எனது பயமொன்று
அது எல்லாவற்றையும்
இறுக பற்றிகொள்கிறது
 மகா பொய்யை உணர்ந்ததாக....
எல்லா உண்மைகளோடும்
நான் புறப்பட்டபோதும்
முகமூடி வியாபாரி
ஒன்று வாங்குங்கள் என்று கெஞ்சுகிறான்
நல்ல கலப்பற்ற
உண்மையான முகமூடி என்கிறான்
முகமூடி ஒன்று வாங்கினேன் ...




Monday, April 16, 2012

முள்ளிவாய்க்கால் என்ற புனித அடையாளம்

பொன்காந்தன்


ஒப்பாரி வைப்பதற்கு கூட
ஒருவரும் இல்லாமல்
செத்துப்போனார்கள் சில குடும்பங்களில்.....
 என்ற சேதியுடன்
முள்ளிவாக்காலின்
மூன்றாண்டு சிவப்பு நினைவுகள் .
மலரிட்டு மண்டியிடமுடியாத
எம் மாதவர்களின் மண்திட்டுகளில்
இன்று செம்படையர்களும்
ஆரியர்களும் ஆளுக்கொரு பக்கமாக நின்று
கொம்புக்கு மண்ணெடுக்கின்றார்கள்.
உலகின் மாதா முடிகள் என்று பெயரெடுத்த
பெரு மல்லர்கள்
எங்கள் பூக்களை அறுப்பதற்கு
புத்தி கெட்டவர்களுக்கு வாள் கொடுத்த கயமையை
நாம் மறந்திலோம்.
கனவுடன் புதைக்கப்பட்ட கற்பகங்களின்
திரு நிலம்மீது பன்னீர் தெளித்து
யாரும் புண்ணியர்கள் ஆகமுடியாது.
பூமி ஒரு போதும் மன்னிக்காது.
நேற்று
சண்டியர்களின்சரித்திரம் தானென
தண்டிகைமீதேறி தான்தான் என்றவன்
இன்று
தர்மத்தின் தண்டனையில் சிக்குண்டு
மெல்ல மெலிகிறான்.
தமிழரின் இரத்தம் காயாத வலியின்
வதையது.
ஆத்மஓலம் அடங்கா அதர்மசங்காரமது.
என்ன கேட்டோம் நாம்
காலியில் கால் பங்கா
அம்பாந்தோட்டையில்  அரைவாசியா
அலரி மாளிகையின் அந்தப்புரமா
என்ன கேட்டோம் நாம்
ஒரு நிலாக்காலம்
நெடும்பனையின் சரசரப்பு
நீட்டி நிமிர்ந்து படுக்க ஒரு காற்று வருடும்
நம் காதல் நிலம்.
குச்சவெளியிலும் கொக்கட்டிச்சோலையிலும்
கல்லடியிலும் கணுக்கேணியிலும்
கைதடியிலும் கரவெட்டியிலும்
சின்னத்தீவுகளிலும்
அடம்பனிலும் ஆட்காட்டிவெளியிலும்
இந்த கைவிரித்து நாம் நடந்த கட்டற்ற சுகம்
முன்பொருகால் இருந்தது உண்மைதானே!
பிறகேன் சிங்களர்க்கு
எம் நிலம் தின்னும் இயமம் வந்தது.
மூவேந்தரை படித்துத்தான் மீண்டும்
தேரேறினோம் நாம்.
தெளிவில்லாமல் புலி ஒரு போதும் பிறக்கவில்லை
எமக்கு அழிவில்லாமல்
ஆயுதம்தூக்க ஆசைவரவில்லை
அகிம்சையில் அதர்மம் அடங்க மறுத்தபோதுதான்
விடங்களை அணிந்த விந்தைகள் எழுந்தது.
வயலும் புலமும் வாழைத்தோட்டமும்
பாலும் பசும்புல்வெளியும்
பாட்டும் கவிதையுமென்று
நீட்டிமுழக்கி நெளிவெளிடுத்து கிடந்தவரின்
வீட்டுக்குள் புடையன் பாம்பாக மடையர்கள் நுழைந்து
இன நிம்மதிக்கு இடையூறு சிங்களன்செய்த பிழை
சிங்கள ராசர்களின் நெடுந்தவறு.
நீட்டோலையில் நிரம்பி வழிகின்றது
கைமுனு பரம்பரையின் கசப்பான அனுபவங்கள்.
கைமுனு பரம்பரையென்றுரைக்கக்கூட
கையாலாகாதவராக காலப்பழி சுமந்து
சிங்கள இனம்


துட்டகைமுனு
எல்லாள மன்னனை
எல்லோரும் மதித்துப்போங்கள் என்று
பண்பாடு அமைத்தவன்.பண்பானவன்.
இந்த பின்னணி தெரியாமல்
சிங்காசனங்களை சீர்கெடுத்தவர்கள்
பின்வந்தவர்கள்
இன்றிருக்கும் சிவப்புத்துண்டு
இதற்கெல்லாம் மாமுடி.
சிங்கள தேசத்தில் நல்லவரை
நாகரிகமுள்ளவரை
மென்காற்றென வருடும் உள்ளங்களை
நம்மினம் என்றுமறியும்
அவகளுக்கொரு வணக்கம் என்றும்
தமிழினத்துள் தளிர்த்தபடி இருக்கும்.
வருத்தமென்னவெனில்
முல்லையில் வைத்து எல்லாம் முடித்துவிட்டேனென்று
மங்களம் பாடிய மடையனின் வார்த்தைகளை
மந்திரமென ஏந்தி உல்லாசப்பயணிகளாய்
சிங்கள நண்பர்கள்
எங்கள் செத்தவீடுகளை
சிதிலங்களை
கொத்தாய்
எம் சித்திரங்கள் புதைந்த மேடுகளை
பார்த்துக்களிக்க வந்ததுதான்.
உலாசமாய் திரிந்த காலடிக்கு
சாபங்கள்தான் மிச்சம்.
வாழ நினைத்த எத்தனையாயிரம் வாழ்க்கை
ஈழ மண்ணிலே இடை நடுவிலே
கதைமுடிந்து போய் கிடக்கின்றது.
இன்றைக்கும் அர்த்தசாமத்தில்
எத்தனை அன்னையர்கள்
அடிக்கடி திடுக்கிட்டெழுந்து தன் பிள்ளை
அழைத்ததாய் புலம்புகிறார்கள்
அந்த அன்பு விடலைகள்
எறிகணைகளில் பல நூறுதுண்டுகளாய்
அன்னையுர் பார்த்திருக்க சிதறியது
காலப்பேருண்மை.
தமிழகம் வெறுக்கும் ஆரியக்குழு
ஈழ மண்ணுக்கு மீண்டும் இளவு சொல்ல வருகிறதா
பண்டைய உறவு அண்டைய நாடு என்று
நாம் எத்தனை மதிப்புற்றோம் முன்பு.
நம் மக்கள் தலையில் இடிவீழ
காரணங்கள் அதிகம் டெல்லிதான் என்று
இங்கு சொல்லித்தான் தெரிவதில்லை.
அடுத்தமுறை ஆட்சியை காப்பாற்றபோடும்
தமிழர் மீதான அன்புவெள்ளம் அவ்வளவுதான்.
இந்திரா காந்தி இறந்தபோது
எங்கள் மூத்த சோதரி முடிந்ததாக
மூன்றுநான் உலையேற்றாமல்
ஆற்றாமல் அழுத நம் மண்ணுக்கு
பார்த்தசாரதிகளையும்
டிக்சிற் நாராயணன்களையும்
கிருஸ்ணலீலைகளையும்
நாச்சியப்பர்களையும் மோந்துபிடிக்க
நம் தம்பி நன்றாக கற்றுத்தந்துள்ளான்.
காடேறிகளுக்கு எதிராக முதன்முதலாய்
கைதூக்கியது காலநெருக்கடி
சீனா விழுங்குகின்றது என்று
சிதம்பரம் சொன்னதன் விளைவு
தன்மானம் உணர்ந்த தமிழகம் எடுத்த
தனிப்பெரும் முடிவு.

தர்மத்தின் தண்டனைப்பார்வை
காங்கிரஸ் மீதும்தான் கவிழ்ந்திருக்கிறது.
நேற்று தமிழகத்தில் தலைகுனிவு
அடுத்து இனிய தமிழருக்கு இழைத்த கொடுரத்துக்காக
இரண்டு அரசுகள் கவிழும்
சிங்கும் சிங்கங்களும் முடியிழந்து போகிற காட்சி
நாம் வாழும் காலத்தில் நிகழும்.
முள்ளிவாய்க்கால் சாபத்தில் கல்லாய் போகும் காங்கிரஸ்
எந்த இராமனும் சாபவிமோசனம் தரப்போவதில்லை.
நண்பர்களே!
முள்ளிவாய்க்கால் முடிந்துபோனவர்களின் புத்தகம்
முடிவுறாத கதையின் மறுபாகம்.
பெரும் வேதப்பொருளாக
நந்திக்கடலின்
நாம் நேசிக்கும் முல்லை பெருநிலத்தின்
நெய்தல் தோன்றுகின்றது.
இனியொரு முறை கால்புதைய நடக்கும்
காதலர்க்கெல்லாம் நேசிக்கும் மாண்பை அது
கற்றுத்தரும்
அது மண்ணை நேசித்த மனிதர்களின்
மாபெரும் காதல் பூமி.
பின்னொருகால் பேரழகுபெற்ற இதழ்களோடு
மலர்கள் பூத்துக்குலுங்கும்
அதற்குள் கண்ணீர் வழிந்தோடி
சிங்கள காமுகர்களால் கசக்கி எறியப்பட்ட கதைசொல்லும்.
அரசு வளரா
நிலமாய் விரயும் அது.
வீரம் சாயா மண்ணில் வீரர்கள் சாய்வது இயல்பு
அதுவே அந்த உப்புவெளியில் நடந்தேறியது.


நாங்கள் கல்லறைப்பாடல்களை
பாடவில்லை
மலர்கள் அள்ளிசொரியவில்லை
மார்பில் அடித்து அழவில்லை
அதன் மறுபெயர்தான் எம் பெருநெருப்பு.
முள்ளிவாய்க்கால் நினைவுகளின்போது அந்நெருப்பு எரிகிறது.
அப்பெருநெருப்பில்
திருக்கைவால் போன்ற பெரிய மீசையும்
சுறாவின் வாயோடும்
வேடர்களின் பார்வையோடும்
வகிடுஎடுத்த சுடலை போன்ற
பெரிய நெற்றியோடும்
யாரும ;இனி அணிய வெட்கப்படும் சிவந்த
சால்வையோடும் நிற்கும் அரக்கனை
தெளிவுறபார்க்கிறோம்.
அவன் கண்களில் ஏக்கம் ஒன்று
நந்திக்கடலின் அலையைபோல் மோதுகின்றது
அரக்கனின் தோல்வியும் மரணமும்
எமது நிரந்தர சுதந்திரம் ஆகாது
எமது சுதந்திரம்தான் அரக்கர்களின்
நிரந்தர தோல்வி.
முள்ளிவாய்க்கால் என்ற புனித அடையாளம்
தன் கைகளை நீட்டுகின்றது
சத்தியம் எடுத்துக்கொள்ளுங்கள்.

Friday, April 13, 2012

ஞானம்

 பொன்காந்தன்


கல்லறையில் மோதி
இறந்து கிடக்கின்றன
சில வண்ணத்து பூச்சிகள்
சுற்றி
மலர்ந்து கிடக்கின்றன
பலவண்ண பூக்கள்
அப்பாவுக்காக அழவும்
என் பிள்ளைக்காக சிரிக்கவும்
நான் எழுதப்படுவதாய் உணர்கிறேன்

பதினாறு

  -பொன்காந்தன்


பக்குவமாய் சொன்னேன்
பதினாறு கேட்கவில்லை
சொர்க்கமென எதை நினைத்தோ
சுழல்கிறது மயக்கத்தில்
வெட்கமென சொன்னேன்
... வீண் பேச்சு என்றது
துக்கம் வரும் என்றேன்
தூ நாயே என்றது
பக்குவமாய் சொன்னேன்
பதினாறு கேட்கவில்லை
அக்கம் பக்கம் பார்த்தேன்
அறைந்தேன் பளாரென்று !

வருடங்கள் வந்து போகும்


-பொன்காந்தன்


ஓட்டைகைகள் நூறு குடிசை
ஒவொரு வீடும் பிச்சை
தேட்டங்கள் ஏதுமில்லை
தெளிந்திட வழியுமில்லை
கூற்றுவன் ஆட்சி இங்கு
குனிந்துதான் நடக்கவேண்டும்
மாற்றிட வழிகள் கண்டால்
மர்மமாய் மரணம் கூடும்
ஏறிய விலையின் வாசி
எதிலுமே சிரமம் சிரமம்
... காய்ந்த மண்ணில் வந்து
கவட்டினை காட்டிக்கொண்டு
களிப்பு நடனமிட்டு
விழாக்கள் தினமெடுத்தால்
உரிமை பிரைச்சனைகள்
ஓடி மறைந்திடுமோ
வறண்டு கிடப்பவர்க்கு
வழிகள் ஏதுமில்லை
வாட்டி எடுக்கிறது
வஞ்சகர் ஆட்சி இங்கு
பரவசம் ஆவதற்கு
இப்பா எழுதவில்லை
விதியினை நொந்து வரும்
வேதனை வரிகள் இவை
மடையர்கள் ஆளும் மண்ணில்
புதியன என்று நின்று
பூரிக்க முடியவில்லை
வருடங்கள் வந்து போகும்
எம் வாழ்க்கையோ அன்றும் வேகும்

சிரமம்


  -பொன் காந்தன்


ஓட்டைகைகள் நூறு குடிசை
ஒவொரு வீடும் பிச்சை
தேட்டங்கள் ஏதுமில்லை
தெளிந்திட வழியுமில்லை
கூற்றுவன் ஆட்சி இங்கு
குனிந்துதான் நடக்கவேண்டும்
மாற்றிட வழிகள் கண்டால்
மர்மமாய் மரணம் கூடும்
ஏறிய விலையின் வாசி
எதிலுமே சிரமம் சிரமம்
... காய்ந்த மண்ணில் வந்து
கவட்டினை காட்டிக்கொண்டு
களிப்பு நடனமிட்டு
விழாக்கள் தினமெடுத்தால்
உரிமை பிரைச்சனைகள்
ஓடி மறைந்திடுமோ
வறண்டு கிடப்பவர்க்கு
வழிகள் ஏதுமில்லை
வாட்டி எடுக்கிறது
வஞ்சகர் ஆட்சி இங்கு
பரவசம் ஆவதற்கு
இப்பா எழுதவில்ரும்
வேதனை வரிகள் இவை
மடையர்கள் ஆளும் மண்ணில்
புதியன என்று நின்று
பூரிக்க முடியவில்லை
வருடங்கள் வந்து போகும்
எம் வாழ்க்கையோ அன்றும் வேகும்

Thursday, March 29, 2012

ஞானப்பழம்

பொன். காந்தன்


டெனிம் குட்டை பாவாடை
டீசெட் அணிந்து
அவள்
டயனாவையோ
கேட்டையோ
ப்ரிட்னியையோ
மனசில் நிரப்பிக்கொன்டிருந்தாள்.
பாடுவதற்காக
அரங்கில் பளபளத்த அவள்
அறிமுகத்தில்
தமிழில் பேச அதிகம் ஆசைப்பட்டாள்
அவள் தமிழ் பெண்தான்

மியூசிக் ஸ்டாட்
"பழம் நீ அப்பா ஞான பழம் நீ அப்பா
தமிழ் ஞான பழம் நீ அப்பா "
கே பி சுந்தராம்பாள்
அவளுக்குள் இருந்து வெளியே வந்து
நதியென ஒடினாள்.
.................................
முருகா !

 

Tuesday, March 27, 2012

மல்லிகை சாம்பல்

 பொன். காந்தன்    




ஒவொரு இரவிலும்
சாம்பலாகிறாள் அவள்
நதிகள் இல்லா இரவில் நடக்கிற
நெருப்பின் சங்கீதமென
வாசலை பார்த்து பார்த்து
முடிகிறது அவளின்
வாழ்வின் எச்ச சொச்சங்கள்

பஸ்பமான எமது நாட்களில்
எமது முதுசமென
கறை படிந்த நாக்குகளையும்
கண்களையும்
விட்டுவிடாமல் கொணர்ந்தோம்
அநேக காலங்களில்
நாம் வெட்க்கப்பட தயாராய் இருந்ததில்லை
இன்றும் அப்படிதான்
அவள் வாசலிலும் தெருக்களிலும்
நாம் காவி வந்த கஞ்சல்களுக்குள்
வாசனை இழந்துகொண்டிருகிறாள்

அவள் மண்ணுக்குள் தலை புதைத்து
போகிறபோதெல்லாம்
எதையோ தூக்கி வீசி
நொறுக்க வேண்டும்போலிருக்கிறது.
இழக்க வேண்டியதை
கொண்டு வந்திருக்கிறோம்
நம் சோதரிகளை வதை செய்ய..

அடுத்து வரும் காலமொன்றில்
நம் அழகிகள்
பொட்டும் பூவும் புன்னகையும் இழந்து
எல்லா வீடுகளிலும் நிறைந்திருப்பர்
அப்போது நாம் என்ன செய்ய வேண்டும்
என்றுரைக்க
ஒரு கடவுளும் வேதவாக்கும்
முன்பொரு காலத்தில் இருந்திருக்க வேண்டுமா


 
 


Friday, March 16, 2012

ஞாபகங்களின் கீதமும்


-பொன்.காந்தன்





இப்போதுதான் உலகம் சுற்றுவதை
முதன்முதலாய் உணர்கிறேன்.
ஏக்கம் நிறைந்த எம் நெடுங்கால முகங்களையும்
மானுட சமுதாயம்
ஏறெடுத்துப்பார்கிறது.
இதற்காக எத்தனை உயிர்களை கொடுக்கவேண்டியதாயிற்று.
எத்தனை இரவுகளை
பட்டிணியும் பதட்டமுமாய் கடக்கவேண்டியதாயிற்று
வாழும் நாட்களை
வதைக்கென்று கொடுக்கவேண்டியதாயிற்று
நீண்ட பிரவுகளை நெஞ்சை இறுகப்பற்றி
தாங்கவேண்டியதாயிற்று
இன்றைக்கும் எங்கள் நாதமிழந்து கிடக்கின்ற இரவில்
எங்கள் தெருவில் நரமாமிசபட்சிகளை உலவிட்டு
வேதனை இடிகளென இதயம்துடிக்க
தூங்காமல் எழுவேண்டியதாயிற்று
இன்னமும்தான்
எம் வாசல் காத்திருக்கிறது விடுதலைக்காய்
வெறி கண்ணை மறைக்க எம்வீட்டுக்குள்
கர்வத்தோடு நுழைந்தவன்
வீசி எறிந்தான் ஒழிந்துபோவென்று
உலகத்தின் செவிப்பறை கிழிய.
அவனறியான் அப்போது எறிந்தது
வீரியம் மிக்க விதைகள் என்பதை.
இப்போது தூக்கமற்ற இரவுகளோடு
தோலைந்துகொண்டிருக்கின்றான்
அந்த துட்டன்.

என் அழகிய தாய் தேசத்தின் காடுகளையும்
கடலின் அலைகளையும்
மணல்வெளியையும்
பனங்காடுகளையும்
அற்புதமான மொழிகொண்டு பார்க்கின்றேன்.
காடு மண்டிக்கிடக்கிற
எங்கள் கற்பகங்களின்
கல்லறைகளையும்
நினைகளை தாங்கி நின்று
கற்குவியல்களான சுவர்களையும்;
திரும்ப திரும்ப கடந்துபோகின்றேன்.
வல்லமைகளே! வல்லமைகளே!என்று
உரத்தகுரல்கொண்டு சொல்லவேண்டும்போல் இருக்கின்றது.

மாவிலாற்றில் தொடங்கி முள்ளிவாய்க்கால் வரை
எங்கள் உயிர்கள் கதறகதற பிடுங்கப்பட்ட
பாதை எங்கணும் தொட்டு முத்தமிடவேண்டும்
அதுவே உலகம் விழித்துக்கொண்டதற்கான உயர்மொழிகள்
எல்லா ஞாபகங்களும்
இதயமெங்கும் நிறைந்து வழிகின்ற
தமிழரின் பொழுதுகள் என பிரகடனம் செய்கிறேன்.
எதுவும் எனக்கு பெரிதாக தெரியவில்லை
மிகமிக சிறிது எனது உயிரெனவும் எழுதிவைக்கின்றேன்.
மூங்கிலாற்று வயல்வெளி வீதி மிகப்பெரிது
அங்கு
எறிகணைமழையில் எங்கள் பிணவயல்கள்
பரந்துகிடந்தன.
அதற்கு முன் பல காலமாய் மனதுக்கினிய
வயல்வெளி
கோபம் தணிக்கும் குளிர்காற்று அங்கிருந்தது
காதல் பிறக்கும் ஒரு கவிதையூற்று கலந்திருந்தது
மூங்கிலாற்று வெளி மிகப்பெரிது
மிகப்பெரும் இன்பத்துக்கும் மிகப்பெரும் துன்பத்துக்கும்
கிளிநொச்சியில் இருந்து எழுந்து நடந்து நகர
மறுத்த மனதின் ஏம்பலிப்பை எப்படிச்சொல்வேன்
நாம் மலையாய் நம்பியிருந்த நகரம் இழந்து போகபோக
எமது இனத்துக்கு ஏதோ நடக்கப்போவதாக மனம்
சொன்னது. நடந்தும்தான் ஆயிற்று.
நம்பிக்கையோடு சிவந்த மனிதர்களான எனது
உயிர்செல்வங்களை
தர்மம் கையெடுத்து வணங்குவதாக தோன்றுகின்றது.

உடையார்கட்டில்
தாள்வாரங்களில் குருதி ஓடிக்கொண்டிருந்தது
ஒரு பொழுது
இன்றுமது ஓலமடங்காக்கிராமம்
அது மிகப்பெரிது.
நந்திக்கடலை நோக்கி சாப்பயணம்
என்றுமில்லாதவாறு சுதந்திரதேவி
எங்களிடம் அதிகவிலைகேட்டாள்
என்றுமில்லாதவாறு அரக்கன்
வெறியோடு நின்றான்
என்றுமில்லாதவாறு மழை
கடலை பெய்தது
காலம் என்றுமில்லாதவாறு எங்களிடம்
எல்லாவற்றையும் கேட்டது.
குழந்தையின் புன்னகையில் இரங்காத
துட்டர்கள்
இரணைப்பாலையை பொக்கணையை
வலைஞர்மடத்தை முள்ளிவாய்க்காலை
சூழ்ந்து நின்றனர்.
இரட்டை வாய்க்காலில் ஒரு காலைப்பொழுதொன்றில்
புளுதி எழுந்தடங்கியது
கந்தக வெடில் சூழ்ந்து கிடந்தது
சதைத்துண்டங்கள் என்மேலும் விழுந்திருந்தன
தும்புகளான ஆடைகளின் துண்டுகளும்
என் மேல் ஒட்டிக்கிடந்தன
சில கணங்களின் முன்தான்
என் அருகே குழந்தையும் தாயும்
போகக்கண்டேன்.
எங்கள் குழந்தைகள் மீது
அன்றில் இருந்து மிகப்பிரியம்

இரணைப்பாலைக்கு அப்பால்
வெண் மணல் சூழ்ந்தவெளி
மணல் குழந்தைகளின் நண்பன்
மணல் குழந்தைகளின் கவிதை
மணல் குழந்தைகளின் கனவு
எனினும்
அவ்வினிய மணல்களால்
எங்கள் பிஞ்சுகளை மூடி
மணலில் துடித்தோம்
மணல்சாட்சியாக கடல் சாட்சியாக
நாம் தொழும் பெருங்கோயில்
வற்றாப்பளை கண்ணகையைச்சுற்றிய
உப்பு வெளியெங்கும் விரிந்துகிடக்கின்றது.

பெரு வலிமை மிக்க கண்ணகை
தன் பிள்ளைகளை
சன்னிதானத்திலே செந்துணியும்
சிவந்த கண்ணுமாக வந்த
கொடுரன் குதறி எறிய
கையாலாகாதவளாக நின்றிருந்தாளா
தீயை கொப்பளிக்க வல்ல காளி ஏன்
மெனமாய் பார்த்திருந்தாள்
சிங்கள குருதிவெறிக்கு இருண்ட வருமென்பதை
உணர்ந்திருந்தாளா
மதுரையை எரிக்க வல்ல மார்புகளைதான்
இரக்கமற்றவன்
வரலாறு உணராமல் வதைத்து
இன்று
தெருவுக்கு வரஇருக்கின்ற ஆண்டியானான்
என்று கண்ணகை சொல்கிறாளா.
இம்முறை வற்றாப்பளை அம்மனின்
உப்பு நீரில் எரியும் விளக்கு
என்றுமில்லாதவாறு சிவந்து ஒளிரும்
நந்திக்கடலில் கலந்த உயிர்களின்
இரத்தத்தின் சாட்சியாக
நீதியின் நெருப்பாக கிளருமது.

எங்கள் கண்களில் நிறைந்த பெருமைகளென
இனிமைளென
கவிதைகளென நாம் ஏந்திவைத்திருந்த
இசைப்பிரியாக்களே தராசுகளை ஏந்தியிருக்கிறார்கள்.
தமிழிச்சிகளின் சபதம் சிங்கள இராச்சியத்தின்
கனவுகளுக்குள் தீயென புகுந்துள்ளது.
சிங்காசனத்தில் இருப்பவன்
தன்னின பெண்களால் அருவருக்கப்படுபவன் ஆவான்
அவன் தெருவில் அவன் மொழியால் சித்திரவதை செய்யப்படுவான்
அவன் முகம் இருண்டு கறுத்து அசிங்கப்படுவான்
நீதியின் முன் அவன் ஒடுங்கிக்கிடப்பான்
காறி உமிழப்பட்ட எச்சில்களின் நடுவே
இறுதியாக அவன் முடிவு எழுதப்படும்.
நண்பர்களே!
உலகத்திசையெலாம்
இன்று நாம் உயர்ந்த பொருளானோம்
எமது விலை மிகப்பெரிது
எல்லையற்றது.
எமது இரத்தத்திற்கும் உயிரிற்கும்
அத்தனை வலிமையா!
அத்தனை வலிமைதான்
உலகின் எல்லா வியாபாரிகளையும்
அது காட்டித்தந்துவிட்டது.
எல்லா நடிகர்களையும் கண்டு வியக்கின்றோம்.
ஆயினும் காரியம் ஆகட்டும்
புலத்திலும் நிலத்திலும்
என்ன ஆகுவேண்டுமென்பதை கணித்துசென்றுவிட்டான் கரிகாலன்
வல்லவர்களுக்கு மட்டும்
இந்த வரிகள் புரியும்
இன்னும் பல யுகங்களுக்கும் ஆதர்சதலைமை
அவனே என்பதை அவன் அர்ப்பணிப்பு
ஆழ எழுதிவிட்டது.
தான் பெற்ற இளவல்களையெல்லாம்
இனத்திற்காய் கொடுத்த மாண்பைவிட
வேறென்னவேண்டும்
இத்தனை ஆண்டுகள் இனத்திற்காய்
தேய்ந்ததை விட
ஒரு திண்ணியம் வேண்டுமா
அவனை மூடிவைத்துவிட்டு தமிழர் விடுதலைபற்றி
பேசுதல் கூடுமா
அவன் வளர்த்தெடுத்த ராஜபாதையில்
உலகத்தின் நடுவில் தமிழினம்
உட்கார்ந்திருந்து நீதி கேட்கிறது
கறுப்பினத்துக்கும் வெள்ளை இனத்துக்கும்
எங்கள் வேட்கையை
அவன் வளர்த்த வீரியம் கொண்டுசேர்த்திருக்கின்றது.
மறைந்தாலும் உறைந்தாலும் மகாவீரன்
ஈழத்தமிழர் இதயங்களில் நிமிர்ந்திருக்கிறான்
வெற்றி என்பதற்கு புது வேதாந்தத்தை
அவன் இந்த பூமிக்கு விட்டுச்செல்வான்
ஒலிவ் கிளைகளுக்குப்பின்னும்
பனந்தோப்புக்களுக்கு பின்னும்
அவன் கரைந்துகிடக்கிறான்
பேரமைதியில் பிரமாண்டமாக ஒரு யாகத்தை வளர்த்து
உச்சமாகிறான்
நெடுங்கால பெட்டகமாய் காவிச்செல்லுங்கள்
பிரபாகரன் தமிழர் அடையாளம்.

தமிழர் இரத்தம் தமிழர் குருதி
தமிழினத்தின் இதயத்துக்குள் கரைந்து
ஒன்றாக இழுத்து வரலாற்றை எழுதென்று
எழுந்துநிற்கின்றது.
தமிழர் சக்தியை பூமி பார்;த்து புல்லரிக்க
திரள்கிறதா தமிழ்ச்சாதி
திரள்க!
இக்காலத்தை விட்டால் இடியின் மின்னலின்
சக்தியை உலகம் ஒருபோதும் அறிய வாய்ப்பில்லை
கொடிய இருளை ஊதித்தள்ளி நிலவை
நெடுஞ்சூரியனை தமிழர் வானில்
ஒளிரவிட ஒருபோதும் இடமில்லை
இனிக்கொடுக்க ஈழத்தமிழரிடம் உயிருமில்லை
முள்ளிவாய்க்காலை
அள்ளி உள்ளங்களில் ஏற்றிவையுங்கள்
தூங்கிக்கிடக்கிற தூய்மையான இனப்பற்றை
தாங்கு சக்தியாக களமிறக்குங்கள்.
அரசியலுக்காகவும்
அடுத்த பதவிக்காலத்துக்காகவும்
தயவுசெய்து குழந்தைகளின் மரணங்களை
சகோதரிகளின் சாக்கோலத்தை
மூலதனமாக்கி விடாதீர்கள்
உண்மையான இனப்பற்றுக்காக சுகபோகங்களை

கதிரைகளை துறந்து புறப்படுங்கள்
காலம் இமயங்களில் ஏற்றிவைத்து கிரீடங்களை சூட்டும்.
வரலாற்றுக்காலங்களில்
கடமைகளை கைநழுவவிட்டால்
பிறகெல்லாம் வெறும் பிதற்றலாகவே முடியும்.
தாயின் கடமை
தலைநிமிரச்செய்யும்.
நண்பர்களே!
விடுதலைப்பயணத்தில் வீரிய காலமொன்றில் நிற்கிறோம்
கவனம்!
இனியும் ஏமாறக்கூடாது.





பெருங்கொடுரர்களின் ஊழிக்கூத்தை
காட்சிகளை காவிச்சென்று
உலகமகா சபையில் உலவக்காரணமான
மனச்சாட்சிகளை உலுப்ப உதவிய
மானுட நேசத்தை
அந்த மகா கரங்களை
கண்ணில் ஒற்றிக்கொள்கிறேன்.
இன்றைய சக்தி அது.








Monday, March 5, 2012

பிணங்கள் பற்றிய பேச்சு..............


பொன்.காந்தன்.







இன்றையைப் பொறுத்தமட்டில்
தமிழர்களின் மரணங்கள் என்பது ஒரு பொருட்டே அல்ல
அவர்களின் உடல்கள் துண்டு துண்டாக சிதறி இருக்கலாம்

அவை ஒன்றும் பெரிதே அல்ல
எமது இளம் பிஞ்சுகள்

சுதந்திரம் வேண்டுமென முப்பது நாற்பது வருடங்களாக
ஒவ்வொரு களத்திலும் மடிந்திருக்கலாம்
உண்மையாக அவையெல்லாம்
முட்டாள்களின் முடிவு
காணாமல் போனவர்களை கடத்தப்பட்டவர்களை
தேடி தேடி தேய்ந்த தமிழ் உறவுகளின் வலி
அவையெல்லாம் வெறும் தூசு
எனக்கு ஞாபகம் இருக்கின்றது
ஐ.நா சபையே! சர்வதேசமே!
எமைப்பார்க்காயே பேசாயோ என்று
இன்று அந்த சபை முழுக்க
எமைப்பற்றி பேசுகின்றது
எம் பிரதிநிதிகளோ
ஈழ மண்ணில் நடந்த மரணங்களைவிட
இன்னும் அதிகம் நடந்திருக்கவேண்டுமென்று
எண்ணுகிறார்கள்போல்.





நண்பர்களே!
மரணத்தைவிட
கொலைகளைவிட
ஒரு மனிதன் போபமுறுவதற்கும்
ஒவென்று அழுவதற்கும் வேறேதும் உண்டா!
இன்று ஜெனிவா என்ற வார்த்தையும்
ஐ.நா என்ற வார்த்தையும்

தமிழர் பிரதிநிதிகளின்
காலடியிலும் சிங்கள பிரதிநிதிகள் காலடியிலும்
அர்;த்தமற்றதொன்றாக அவமானப்பட்டுக்கிடக்கின்றது.
ஐ.நா சபையையும் விட நமது மனித உரிமைகள்
பற்றி பேசுவதற்கு வேறு சபைகள் உண்டா
எமது பிரதிநிதிகளிடம் கேட்டுப்பார்க்கின்றேன.;
சிங்களவர்கள் எம்மை கொல்லும்போது
அதுதான் அதிகவலி என்று நினைத்தோம்.
ஆனால்
எமது பிரதிநிதிகள் எம்மைபற்றி பேசாதபோது
அதைவிட வலிக்கிறது இப்போது
என்கிறார்கள் எமது மக்கள்.






நாங்கள் நம்பிக்கையுடன் தெரிவுசெய்த

நம் பிரதிநிதிகளே!
உங்கள் உயிர்கள் மீதும்
உங்கள் குடும்பம் மீதும்
அதிக பிரியமாய் இருக்கிறீர்கள்
எவ்வளவு அற்புதமானது.
அப்படித்தான் கொல்லப்பட்ட
ஆயிரமாயிரம் தமிழ் உயிர்களும்
தங்கள் உயிர்கள் மீதும்
தங்கள் மீதும் மிகவும் பிரியமாய் இருந்தார்கள்.
எம் மக்களின் மரணங்கள் பற்றி பேசாத
அக்கணமே
உங்கள் மரணங்கள் நடந்தேறிவிட்டது
மக்கள் உங்கள் பிணங்கள் பற்றி
பேச ஆரம்பித்துவிட்டார்கள்

 

Friday, February 3, 2012

நம் பூக்களை பரவுக..............



-பொன்.காந்தன்

தூக்கம் வரா இரவொன்றில்
துடிக்கின்றன  இந்த வார்த்தைகள்.
ஏக்கப்பெருவெளியில்
மாற்றம் ஒன்று வேண்டுமென்று
மண்மீது ஒரு முறை மண்டியிடுகின்றேன்.
ஆயிரம் வரலாறுகளை அடக்கு வைத்த அன்னைக்கு
அதன் அர்த்தம் புரியுமென்று நினைக்கின்றேன்.
நான் மட்டும் புலம்புகிறேனா
இல்லை இந்த நாடே
புலம்புவதாக எனக்கு படுகின்றது.
ஏட மடயா
உன் பாட்டில் போவென்று யாரும் சொல்கிறானா
ஊர் சோலி ஏனென்று எரிகிறானா
இல்லை
இதை நிச்சயம் எழுதென்று
இடுகின்ற காலக்கட்டளை ஒன்று
என் காதில் விழுகின்றது.
மானம் கெட்டவனே மாற்றானின் கேவலங்கள்
மலையாய் ஏறுகையில்
உன் கவிதையென்ன ஊர்விட்டுப்போயிற்றாவென
வேரடியில் கிடக்கின்ற வேதனை பாய்கிறது.
கோடிக்குள் வந்து கொடியவன் குப்பைகளை கொட்டுகிறான்.
கடைசிவார்த்தைகளால் திட்டினாலும்
இந்தக்கயவர்கள் மீதா ஆத்திரம் அடங்காது
முந்தநாள் எங்கள் ஊரிலொரு கல்யாணம் நடந்தது
தெருவில் நின்ற விசநாகத்தை வீட்டுக்கு அழைத்துவந்து
விருந்துபடைத்தாள் ஒருத்தி.
இன்னும் ஆறாப்புண்ணாக வலிக்கிறது
முள்ளிவாய்க்காலில் மூர்க்கம்.
எண்ணிப்பாருங்கள் எங்கள் கன்னிகளையெல்லாம்
கடல் மணல்வெளியெங்கும் குதறியவர் குலத்தோடு
மலையாளபுரத்தில் குலவுகிறாள் எமதொருத்தி.
கல்லூரி மண்டபமொன்று கல்யாணமண்டபமாகி
இரணியன் ஒருவனுக்கு இளையவள் ஒருத்தி
வாழ்க்கைப்பட்ட பாடத்தை
நம் வெள்ளை சட்டைகளுக்கு விதைக்கிறான்
தென்னிலங்கை தெருநாய்.
நேற்று கல்லறைவரிகளை பாடி காதுக்கு வந்த
குடும்பமொன்று இன்று எல்லாம் சுபமென்று
எட்டப்பர் வட்டத்துள் விழுந்து மல்லாரி இசைக்கிறது.
என்ன நடக்கிறது தெரியுமா
கன்னிகளே கவனம்!
சிங்களக்குட்டிகளை கருக்களில் விதைக்க
பொல்லாத திட்டமொன்று பூக்க ஆரம்பித்துவட்டது.
இன ஒற்றுமை இங்கே எழுந்து நிற்கிறது என்று
உலக ஒப்பனைக்குரைக்க
ஓத்திகை நடக்கிறது.
கொள்ளி வைத்தவனுக்கு எம் வள்ளிமயில்களை
வரைந்துகொடுக்க
எம் வரலாற்று இனம் வயிரம் இழந்துவிட்டதா
மௌனமாய் இருக்கிறார்கள்
எம் மாமேதைகள் பலர்
எதற்கு வாய்திறக்கப்போகிறார்கள்
பள்ளிறைக்கு அனுப்ப வாழ்த்துகிற
கேவலம்
கல்வி அறைகளில் நடக்கிறது
கல்விச்சமுகமோ கண்மூடிக்கிடக்கின்றது.
எதற்குத்திறப்பீர்கள் வாய்
பதவி உயர்வு
இடமாற்றம்
சுற்றறிக்கைகள் பல சுயநலன்களுக்கே வடிவமைக்கப்பட்டிருக்pன்றன.
கற்றவர்கள் கல்வியியலாள்கள்
எம் சமுகம் கையெடுத்துக்கும்பிடுகிற மகாபீடங்கள்
என்று நினைக்கின்ற அனைவரும் செத்துவிட்டார்களா!
ஊமை வருத்தம் பிடித்து ஒடுங்கிப்போய்விட்டார்களா!
கனவுகளோடு வளர்கின்ற பொக்கிசங்களை கயவர்க்கு
கட்டிக்கொடுத்து மாமனாக சம்மதமான மௌனமா இது.
சந்திக்காவலரணில் சிங்கள சிப்பாய்கள் எல்லாம்
தாமெல்லாம் மாப்பிள்ளைகள் என்றுதான்
மனதுக்குள் நினைக்கின்றார்கள்.
என்ன நினைக்கின்றீர்கள் எம் பெருமான்களே!
பதவிகளில் இருக்கும்வரை
தமிழ்தேசியம் பேசுதல் நினைத்தல்
துடக்கென்று முடிவெடுத்து விட்டீர்களா
சரி தேசியம் வேண்டாம்
அது ஏழைகளும் படிக்காதவர்களும்
பேசுகிறதாய் இருக்கட்டும்
அதன் உலகப்புகழை ஓர் வரலாறுரைக்கட்டும்
உங்கள் புதல்விகளில் கைபடாமல்இருக்கவாவது
சமுகச்சீரழிவுக்கு எதிராய் கண்டனங்கள் விடமாட்டீர்களா
தூண்டல் துலங்கல் பற்றி
வுpடியும் வரை விரிவுரை நடத்தக்கூடிய
விண்ணர்கள் எல்லாம்
அலவாங்கால் குத்தினாலும்
ஆடாமல் இருக்கிறார்கள்.
சுரி பிழை சொல்லவேண்டியர்கள்
இப்போது நரி வேசம் போட்டிருக்கின்றார்கள்.
இத்தனை உயிர்களை காவு கொண்டவரை
மெத்தையில் மேனிவருட சம்மதமாவதைவிட
சாக்காட்டில் போய் கட்டையிலேறி கரியாகிவிடலாம்
காலக்குரலெழுப்பாத எல்லாக்குரல்வளைகளை
அறுத்துவிடலாம்
பயந்தால் எம்பைங்கிளிகளுக்கு ஆபத்து நிச்சயம்
இன்று மலையாளபுரத்தில் நாளை நம்மண்முழுக்க
நம்மினம் கலந்துபோகும்
எம்மினம் அழிந்துபோகும்.
எம் பெடியனாருவன் ஒரு பெட்டையின் பின்னால்
போனாலே கொடுக்குக்கட்டிக்கொண்டு
கோடு வழக்கென்று இன்றும் போகிற
எம்பண்பாடிகள்
எம்முடக்கில் நின்ற மூதேவியொன்று
வீட்டுக்குள்வந்து மருமகனாகிறபோது
ஒரு முனகல்கூட இல்லாமல் இருக்கிறார்கள.;
இசைப்பிரயாக்களை ஏப்பம்விட்டவர்க்கு
எம் வீட்டில் என்ன விருந்து
நச்சுப்பாம்புகளோடு நமக்கென்ன உறவு
எம் ஊர்பெடியளுக்கு என்ன
ஆண்மையில்லையா
அழகில்லையா
வலிமிகுந்த தோளில்லையா
பிறகெதற்கு சில குமரிகளுக்கு
சிங்கள இராணுவத்தோடு இஸ்டம்.
உங்கள் சோதரனை நிர்வாணமாக்கி
நிற்கவைத்து சுட்டவனுக்கு
நீ இன்பம் படைக்க நினைப்பது
எத்தனைகேடு
உன் அங்கங்களை அறுத்தெறிய வேண்டாமா
தங்கைகளே!
உங்கள் கொங்கைகளுக்கும் கூந்தலுக்கும்
தவமிருந்து கவிபடைத்து
காதலிக்கும் பரம்பரை நம்வாலிபர்கள்
எம் பெடியன்களை உயிரின் அடிவரை
காதலியுங்கள்.
அகன்றஅவன் தோள்களின் மீது சாய்ந்து
எம்மினத்தின் பூக்களை பரவுங்கள்.
சிங்கள இனத்தின் மீது எமக்கு கோபமில்லை
அங்கேயும் எம்மைபுரிந்து கொண்ட புனிதர்கள் இருக்கின்றார்கள்
கோபமெல்லாம் சிங்கள இராணுவத்தின் மீதே
காதலும் அன்பும் அவனுக்கிருந்திருந்தால்
முள்ளிவாய்க்காலில் எங்கள் முத்துக்களை
சிதைத்து சிரித்திருக்கமாட்டார்கள்.
மிருகங்களுக்கு எம்வாசலில் என்றும்
விருந்து கிடையாது.
எம் வேதனைக்கு காரணமான வெறியர்கள்
நீதி தேவதையின் முன் மண்டியிடுகிற நாளுக்காக
காத்திருக்கிறோம் நாம்.
காலம் கனிகிற நாட்களில்
நண்பர்களே!
இன நல்லிணக்கம் என்ற பெயரில்
தென்னிலங்கை விடுகிற
தேனிலங்கை நாடகத்தில் பலியாகிவிடாதீர்கள்.
மௌனம் கலையுங்கள்
தீமைகள் நிகழும்போது தீயாய் இருங்கள்.
காணாமல் போனவர்களை இன்றும்
தேடிக்கண்ணீராகும் எங்கள் உறவுகள் ஆயிரமாயிரம்
இளவயதில் களைஇழந்து கனவுகள் உடைந்து
காத்திருக்கு விதவைகள் ஆயிரம் ஆயிரம்
வேதனை நிரம்பிக்கிடக்கிறது நம் சமுகத்தில்
அன்னிய அசிங்கங்களுக்கு அனுமதிக்காதீர்கள்.
நாம் எண்ணிய நாட்களை நோக்கி போகிற போது
திண்ணியங்களை இழந்துவிடாதீர்கள்.


Wednesday, January 25, 2012

கல்லும் மண்ணும் தாரும் என் கண்ணீரும்........

-பொன்.காந்தன்


நான் கிளிநொச்சியை சேர்ந்தவன்
தமிழர் வரலாற்றில் முக்கியமான நகரம்
எனது சொந்த நகரம்
அதன் ஆழ அகலங்களை
சரியாக நானறிவேன்
அதன் உண்மையான புன்னகையை
எனக்கு நன்றாகத் தெரியும்
ஏனெனில் நானொரு கிளிநொச்சியான்
கிளிநொச்சி
பாரறிந்த நகரமாயிற்று
பாழடைந்த நகரமாயிற்று
இப்போது நான் தேடுகிற நகரமாயிற்று
வீதிகள் அகலமாகிறது
என் புளியடியில் சீனாக்காரன்
தார்ப்பீப்பாய்களோடு கரைந்து கிடக்கிறான்
என் தெரு
சீனர்களாலும்
இந்தியர்களாலும்
அமெரிக்கர்களாலும்
நெரிசல்படுகின்றது.
சுப்பனையும் சுப்பியையும்
காண்தல் தவமாகிறது.
2010களில் விரிந்த வீதி அபிவித்தி
அதிகார படலங்களின்
புதிய மொழி
என் சாலை பற்றிய சில
வரிளை கீழே
எழுதவைத்திருக்கின்றது.



கல்லும் மண்ணும் தாரும் என் கண்ணீரும்........
இந்தச்சாலையில்தான்


எல்லாம் நடந்து முடிந்திற்று
கடைசி ஒருவன் கூட
இல்லாது போன நிசப்தம் மட்டும்
இன்றுவரை
என்னுள் உறைந்து கிடக்கின்றது.
மெல்ல மெல்ல இச்சாலையில்
நடக்கத்தொடங்கிய
ஒவ்வொரு பயங்கரம்
ஏக்கம்
முகங்களை தேடிக்களைத்து
முகங்களினால்
எழுதப்பட்ட
அப்பெரும் ஏமாற்றமும்
மிக நீளமானது மிக அகலமானது
மிகவேகமானது
எதிர்பார்க்கப்பட்ட எந்தச்சந்திப்பையும் தராத
வெறும்சாலை வெறும்சாலை
இப்பெரும் சாலையில்
அவன் வராத பயணங்களில்
எப்போதும் அவள்
காலத்தோடு மோதுண்டு விபத்துக்குள்ளாகிறாள்.
எனக்குத்தெரியும்
கூந்தலின் நறுமணமலர் உதிர்ந்த
தடங்கள் இல்லா
இச்சாலையின் அபத்தம்.
என் சாலை எப்படி ஆயிற்று
எதற்கும் பதிலற்று நீண்டுகி;க்கின்றது.
ஆனந்த உலாக்களின் நாட்களை
எண்ணிபார்க்கின்றேன்.
ஓரமாய் நில் என்று
அதட்டிப்போகிறான்
அவன்மொழியில் ஒருவன்.
என் தாண்டவ மொழி
கைகட்டி கிடக்கின்றது
சாலை ஓரமெங்கும்..............
ஓற்றையடிப்பாதையில் கூட
என் மௌனம் கலைத்து
ஒரு உண்மையை பேசமுடியவில்லையே.