Saturday, February 5, 2011

நமது கடன்

பொன்.காந்தன்

 
வீட்டில் வளர்த்த நாய்க்குட்டி
ஆடு செத்ததற்காய்
விம்மி அழுதிருக்கிறேன்.
மாட்டினை கையாலும்
பூனையின் மேனியை காலாலும்
வருடிவிட்டிருக்கிறேன் சிறுவயதில்.
இப்போது நான் ஒரு குழந்தைக்குத் தந்தை.
இப்போது
நாய்க்குட்டிக்காக
ஆட்டுக்காக அழுவதில்லை
ஆனால்
நிச்சயமாக
அவைக்காக அழுது
கல்லறை கட்டி கும்பிட்டிருப்பேன்
என் காலடியில்
என் ஒவ்வொரு வயதில்
என் மனிதர்களின் மரணங்கள் மலியாதுவிட்டிருந்தால்.

இன்று காலையும் அரசின் விமானங்கள்
எங்கள் கிராமத்தின் மேல் சுற்றின
சிலர் பதுங்கு குழிக்குள் போனார்கள்
பலர் வெளியில் நின்று வானைப்பார்த்தார்கள்
சிலர் தெருவிலே
வழமைபோலவே போய்க்கொண்டிருந்தார்கள்
குண்டுகள் வீசப்பட்டன
கிராமத்தின் ஒருதிசையில் புகைமண்டலம்
சிலர் காயப்பட்டு தெருவால் வேகமாக கொண்டுசெல்லப்பட்டார்கள்
எத்தனைபேர் செத்தார்கள்
பலருக்கு அந்தக்கணக்குத் தான் தேவையாய் இருந்தது.

எனத மனிதர்கள்
நான்
எவ்வளவு மாறிவிட்டோம்
பெருமிதப்படுகின்றேன்.
முடியும்
இந்த மரத்துப்போன எங்கள் மனசால்
எமது உரிமைகளை
மிக விரைவில் யாரிடம் இருந்து
பெற்றுக்கொள்ள முடியும்.
அரசால் எங்கள் மனிதர்களின் மரணங்கள் மலிய மலிய
மரத்துப்போன எங்கள் மனசால்
முடியும்
நாம் நினைக்கின்ற எல்லாவற்றையும் சாதிக்க முடியும்.

சிலவேளைகளில்
அரசின் குண்டுவீச்சில்
மாடுகளும் ஆடுகளும்
நாய்;களும்
சிதறிச்செத்தன.
சொல்லிச் சிரித்தார்கள் எம் மனிதர்கள்
நானும் தான்.
முடியும்
எல்லாம் முடியும்
மரத்துப்போன இந்த மனசால்.
எமக்கான எல்லாவற்றையும் கொண்டுவரமுடியும்
எல்லாம்
எங்கள் குழந்தைகளின் கண்ணில் படாதபடி.

றோசாப்பு ஏன் சிவப்பாக இருக்கிறது என்ற
என் குழந்தையின்
வாழ்வின் முதல் கேள்வியில்
என்னுள் ஆயிரமாயிரம் முட்கள் தைத்தன.
எங்கள் குழந்தைகளின் கண்களை
பலமுறை பொத்தவேண்டியவர்களாய் இருக்கிறோம்.
சிலவேளை
எங்கள் முகங்களையும் பார்க்காதபடி
ஆனாலும்
எங்கள் முகங்கள் எங்களுக்கு மட்டுமே.
நியாயமாக இருக்கட்டும்
இந்த முகத்தை வைத்துக்கொண்டு
முடியும்
இழந்த எல்லாவற்றையும் கொண்டுவரமுடியும்
எங்கள் குழந்தையின் கண்ணில்
நாய்க்குட்டிக்காகவும்
ஆட்டுக்காகவும் கண்ணீரையும்
மாட்டின் மீதான பூனையின் மீதான வருடலையும்
கொண்டுவர முடியும்.
இல்லையெனில்
நாம் மரணித்துக் கிடக்கையில்
எமது பிணம் எதிர்பார்க்கக்கூடிய
எமது குழந்தையின்
மாபெரும் அழுகை இல்லாதிருக்கும் சாபக்கேடு
எமை சிதையில் வதைத்தெரிக்கும்.
--------------------------------------------------

இன்றைக்கும் நாளைக்குமாக

பொன்.காந்தன்

 
இது எமது கடைசிப் போசனமாக இருக்கலாம்
இதை எப்படி உண்ணவேண்டும் என்பதற்கு
எங்கள் ஒவ்வொருவருக்கும்
இதுவரை இல்லாத சிந்தனை தேவையாய் இருக்கிறது.
முன்னைய பொழுதுகளில் இதுவும்
பற்றாக்குறையான
புரட்சிக்காரர்களுக்குரிய பழஞ்சோறுதான்
ஆனாலும்
இதை பிசைகிற விரல்கள் ஒவ்வொன்றும்
பேனாக்களாக இருக்கவேண்டியது
நமது வாழ்வின்
இறுதிப்பெரும் உச்சரிப்பாக இருக்கும்.
கவளம் ஒவ்வொன்றுக்காகவும்
உதடுகளைத் திறக்கிறபோது
முகங்களை முகங்கள் பார்க்காமல்
இருந்துவிடப்போவதில்லை
நாம் எத்தனை சவால்களை
ஆட்டிவைத்தவர்கள்.
ஆனால்
இக்கணங்களை ஏனோ
எம்மால் எதுவும் செய்யமுடியவில்லை.
பிரிவின் வரவேற்பறையில் இருந்துதான்
நாம் உணவருந்துகிறோம்
இங்கேதான்
வாழ்வின் மிக ஆனந்தமான கணங்களை
உருவாக்க முடியும்.
இக்கணத்தில் வருகின்ற சிரிப்புக்கும்
வராத அழுகைக்கும்
சவால் நிறைந்த மனிதர்களாகிய நாம்
சவால் விடாதிருப்போமாக.
ஆனால்
எமது பிணம்கூட
பூமிக்கு சவால் நிறைந்ததாக
நீட்டி நிமிர்ந்து படுத்திருக்கவேண்டும்.
எமை எரிக்கும் தீ கூட
தோற்றபடி எரியவேண்டுமென்று
நினைக்கும் பக்குவம் உடையவர் நாமெனில்
இந்தக்கடைசிப் போசனம்
எவ்வளவு இனிப்பானதாக இருக்கும்.
நண்பர்களே நண்பிகளே
இந்தப்பொழுதுகளில் எமது உறுப்புகள் எல்லாமே
வார்த்தைகளுக்காகப் படைக்கப்பட்டவை.
-------------------------------------------------------------

காத்திருப்பின் கடைசிக்காலம்

பொன்.காந்தன்

 
வரவேண்டிய பொழுதில் வா
நீயாக வா
அப்பெரும் இரைச்சலுக்குள் இல்லாத
எனது குரலும்
உன்னை அழைக்கிறது
இப்பெரும் அமைதிக்குள் இல்லாத
என் மெளனமும்
உன்னை அழைக்கிறது
உன் முதல் பார்வைவயில்
எல்லாம் விழித்துக்கொள்ளவா
அப்போது புயலை பிடித்துலுப்பி
நிறுத்திற நிறுத்தில்
எனது கிளைகள் நிரம்பிய வெற்றியிடம்
அழகிய கண்களாகலாம்
எனக்குள் இருக்கும் உன்னை பற்றியவை
என்னை மீறியவை
காற்றில் அடித்துச்செல்லப்பட்டும் இருக்கிறது
இந்தப்பறவை சிலவேளை
எனினும் பறவைக்கென்று சிலதுண்டு
அது எப்போதும் பறவையோடு பறந்து வரும்
பறக்காதபோதும் பறந்துகொண்டிருக்கும்
சிறகுகளுக்குள் சிக்காமலும் காத்திருக்கும் அது
பார்த்தீர்களா
இப்போது எங்கேயோ எதிலோ
குந்தியிருக்கிறேன் நான்
புரிந்துகொள்க
எதையோ புரிந்துகொள்க
வா வரவேண்டிய பொழுதில் வா
பச்சைக்குள் பச்சையாக
கறுப்புக்குள் கறுப்பாக
வர்ணங்களின் வேடமின்றி வா
குளத்தில் புளுதி பறக்கிறது
மரத்தில் கிளைகள் ஒடிகிறது
வந்து பார்த்துவிட்டு
ஏமாந்து ஏமாந்து போகின்றன
எல்லாவற்றிலும் மேலாக
மிக மிகப் பசுமையாக
காத்திருப்பு மட்டும்
அது முற்றிப்பழுத்து
நீயும் முற்றிப்பழுத்து
நடக்கிற சந்திப்பில்
கனி கனியை உண்ணுமெனில்
இன்றைய பல என்னவாகும்

உனது வரவுக்குறிப்பு


பொன்.காந்தன்

ஏது மற்றதில் நீ துணிந்து மலர்ந்தாய்
நம்பிக்கையோடு
உன்னிடம் எல்லாவற்றையும் ஒப்படைக்கலாம்
எல்லாப்பின்னணியிலும் நீஅழகாகவே இருப்பாய்
இதுவரை வெளிகளில் ஒளி நிரம்பியிருந்தது
காற்று நிரம்பியிருந்தது
யாரும் கண்டிலர்.
எல்லார் கண்களிலும்
வெளி நிரம்பியிருந்தது ஏதுமற்று
உனது வரவிற்கு நன்றி
இப்போது கனவு காண்பதற்கு
ஏதுமில்லாமல் போய்கொண்டிருக்கிறது
நீ அருளுமல்ல
மந்திரமுமல்ல
பூச்சியமுமல்ல
ஆச்சரியமுமல்ல
நீ விரலும் விரலும்
பாதமும் பாதமும்
கண்களும் கண்களும்
தெரியாமல் கரையும் புரிதல்
நிரம்பி வழியும் நிசம்
எப்போதும் ஒரு வெற்றிடத்தோடு
உனதருகில் வருகிறேன்
நீ நிரப்புவதில்தான் அழகு அர்த்தம்
இப்போது தண்ணீருமுண்டு தாகமுமுண்டு
தண்ணீருமில்லை தாகமுமில்லை
உனது வரவால் வாசல்கள் அழகுபெற்றன
ஓ வரவே கவிதையற்ற மனசில் சாய்கிறாய்
எங்கிருந்தோ தொடங்கி
எங்கேயோ முடிக்கப்போகிறேன்
அந்தக் கண்ணீரையும்
இந்த இன்பங்களையும்.
-----------------------------------------

ஒரு ஊரின் நாட்குறிப்பு

பொன்.காந்தன்

ஏரிக்கரையில்
படுவான்கரையில்
சூரியன்
மொய்ப்பதாக
அங்கு
வேர் வாசம்கொண்ட மலர்கள்
நோவாவின் பேழைக்கு
விண்ணப்பித்தன
பி.பி.சி காற்றில்.

தூளிக்கும்
ஊஞ்சலுக்குமான கயிறுகள்
தூக்குக்கயிறாகிறது
மீன்பாடுகிறது
தேன் நாட்டில்.

அரிதாரத்தோடு
அதிகம் பழக்கப்பட்டவர்கள்முன்
ஒட்டுப்புன்னகைகள்
எப்படி செல்லுபடியாகும்.

கறவைகள்
மடிநொந்து அலறவும்
தேன் கூடுகள்
வீங்கிப்பெருத்து
நிலத்தில் விழுந்து சிதறவும்
வரம்புகள்
புற்களில் மறையவும்
வசந்தன் பாட்டுக்கள்
வாயிழந்து போகவும்
ஒரு
ஊரின் நாட்குறிப்பு
கனக்கிறது
செருகப்பட்ட வாசகங்களால்.

வர்ணக்கொடிகளோடு
முகவரி இழந்த ஊருக்கு
அணிவகுப்போரே
புண்ணிருக்கும் இடத்துக்கு
காகங்களாய்
போவதென்ன!
முகங்களொடு
பேசத்தெரிந்தவர்கள்தான்
முண்டியடிக்கின்றார்கள்
இதயங்களொடு
இரண்டறக் கலக்கத்தெரிந்தவர்கள்
உலக சிம்மாசனங்களில்
எங்கேனும்
எழுந்தருளியுள்ளாரா!


இதுவரை
கண்ணை மூடிக்கொண்டு
காடுகளில்
தேனெடுத்த தேவதை
நேற்று
தாந்தாமலையில்
உடலெல்லாம்
கண்திறந்து அழுதாள்
சிங்கத்துக்கு
அவர்கள் பிறந்த
உண்மையை
நகங்கள்
மகாவம்சமாய்
அவள் உடலில் எழுதியிருந்தன.

ஏரிக்கரையில்
வாகரையில்
நிலவு நித்தியமாவதாக
அங்கு
மெழுகுதிரிகள்
நோவாவின் பேழைக்கு
ஏங்கித் தவிக்கின்றன.
___________________________________________________
குறிப்பு:- ஏரிக்கரை - அரசின் அதிகாரபூர்வ ஊடக ஊதுகுழல்