Monday, December 19, 2016

சிறுத்தைகள் பணிந்த ஒரே ஒரு சிங்கம்















கண்ணோடு நிற்கின்ற
காலத்தின் உருவம்
நீ மண் வந்து போனாலே
நிம்மதி பிறக்கும்
விண்ணேறிக் கடந்து
வேதங்கள் சொன்னீர்
கண்ணீரில் எமைவிட்டு
ஏனய்யா போனீர்
முன்னின்று நீர் நடத்தும்
முழக்கத்தில் எதிரே
தன்னிலை தளர்ந்து
தடுமாற்றம் இருக்கும்
சிறுத்தைகள் பணிந்த
ஒரே ஒரு சிங்கம்
தேசத்தில் குரல்
அன்ரன் பாலசிங்கம்
வருத்தங்கள் உனை தின்ன
வானேறி வந்தீர்
தம்பி கரம்பற்றி அழைக்க
பாசத்தில் கரைந்தீர்
வருகின்ற வஞ்சக
சூழ்ச்சியை சொன்னீர்
இனி வரமாட்டேன்
சொல்லாமல் நெடும்தூரம் ஆனீர்
பரணிக்கு வழி சொல்லி
பக்கத்தில் இருந்து
நீர் பட்ட இன்னல்கள்
ஒன்றல்ல கோடி
தரணிக்கு எங்களின்
முகமாயும் இருந்தீர்
தலைமகன் இதயக்
குரலாயும் ஆனீர்
மரணம் பலமுறை
ஒத்திகை பார்த்தது
மலரும் தேசத்தை
பார்த்திட உயிர்த்தீர்
விலகும் பனியென
விதி நொந்து நின்றோம்
விடியல் கானலாய்
விடைபெற்றுபோனீர்
பூமி ரேகையில்
சாத்திரம் பார்த்தீர்
புலர்வுக்கு வழியிட
பூதலம் அளந்தீர்
புலத்துக்கும் நிலத்துக்கும்
புலரியின் தூதரே
நிலைத்தது நின்புகழ்
நீள் துயில் கொள்வீர்
தமிழர் தந்திரம் மந்திரம்
அன்ரன் பாலசிங்கம்
தமிழர் ராஜதந்திரி என்பது
உம் மங்கா நிரந்தரம்
வெள்ளைச்சியடலொடு
வேப்பமரக்காற்று
வேண்டிய நினதுளம்
நிச்சயம்
இங்குதான் எங்கேனும்
இளைப்பாறித்தூங்கும்

இன்று ஈழக்கவியரசு கவிஞர்புதுவை அப்பாவின் பிறந்த நாள்














எனக்கு கவிதை பிச்சை இட்ட பெருமானாரை
எப்படி நான் வாழ்த்துவேன்
உலைக்களம் உருக்கொள்ளவேண்டிய காலத்தில்
நீ இல்லையோ என்ற கேள்வி
நெஞ்சை கொல்லும் கவிதையே
புதுவை எனக்கு மதுவை ஊற்றியவர்
அதற்குள் நாவண்ணன் நெருப்பை ஊற்றி
நீறு பூக்க வைத்தவர்
புதுவை தந்த விரல்கள்
எப்போதும் வெட்டியாய் இருப்பதாய் தெரியவில்லை
விரல் விட்டு எவர்எவருக்கோ ஆட்டிக்கொண்டே இருக்கிறது.
தமிழை
காங்கிரீட் கலவை ஆக்காதவர் நீர்
மாசிப்பனியெனவும்
மார்கழி தூறல் எனவும்
காப்பணிந்த மகளிர்
களமேகிய வழியின் முத்துப்பரல்கள் எனவும்
பள்ளம் திட்டியென நெளிந்த வன்னி தெருக்களின்
கலவி மயக்கமெனவும்
தன் தலைவனை சாலையோரப்பூவரசின்
பூவில் பிசைந்து
காலத்தில் தீட்டிய மகரந்த வருடலெனவும்
காட்டியவன்
உன் தமிழில் எனக்கும் ஒரு கவளம் ஊட்டியவன்
உன் கர்வத்தில் ஒன்றாய்
உன் முற்றத்துப்பந்தலோரத்தில்
என்னையும் பதியமிட்டாய்
உன் காலடியில் இருந்து
கனவுகளை எடுத்துவைத்தேன்
வாங்கிப்பார்த்து
வகிடெடுத்து தலைசீவி
சிற்ப நுணக்கங்கள் பார்த்து
ஆங்காங்கு தொங்கிய குஞ்சங்களை அறுத்தெறிந்து
நெற்றியில் ஒரு பொட்டுவைத்து
உனக்கேயுரிய நக்கல் நளினங்களுடன்
என்னையும் பார்த்து
நீரும் வெளிக்கிட்டீரோவென
சிலாவி
கருணாகரனை அழைத்து
இதை வெளிச்சத்தில் இடுவென உரைத்த
தொண்ணூறுகளை மீண்டும் தொட்டு வணங்குகிறேன்
வாழ்ந்து முடிக்க வேண்டியிருக்கிறது
உங்களோடிருந்த
ஈரமும் எரிமலையுமான நினைவுகளுக்குள்
காலப்பாதையில்
கழிவு வாய்க்கால்களுக்கும் நடந்து
கடக்கவேண்டிய இத்தருணத்தில்
சாக்கடைப்புளுக்களின் படங்களையும்
இடைச்செருகி இடைஞ்சல்படுகிற இடர்பாடு
வெடியும் மருந்துமான வெள்ளையுள்ளங்களோடு
கவிதை வேள்வி செய்தாய் நீ
நானோ நடிகர் திலகங்களுக்கு மத்தியில்
அடிக்கடி என் மீதும் ஒட்டிக்கொள்கின்ற
அரிதாரங்களை தட்டி ஊதி தடுமாறுகிறபோது
உன் பாதிக்கவிதைதான் வருகின்றது
மீதி ஒரு விசரனின் விடியலுக்கான விஸ்வரூபமாகின்றது
நல்ல வேளை நீ இல்லை என் பிதாவே
இருந்திருந்தால்
நீ அன்று உலைக்களத்தில்
தம்பி விம்மி அழுகிறாள் ஈழத்தாய்
இன்றுன் வேலைகளை ஒதுக்கி
வெளிக்கிட்டுவா
விடுதலைத்தேரின் வடத்தில்
நீயும் ஓர் இடம்பிடி நாளைக்காயென்று
நாரி வலிக்க எழுதி அழைத்தபோது
ஊருக்குள் சேலைக்குள் ஒளித்திருந்த
செட்டியார்கள் எல்லாம்
இன்றுனக்கு பொற்கிழியும் பொன்னாடையும் அளிக்க
இதயம் கருகியிருக்கும் உனக்கு
தப்பிவிட்டாய் கவித்தலைமகனே!
வாழ்க நின் புகழ்

நான் யாரிடமும் பேசவில்லை!












மரணங்களுக்கும் மரணங்களுக்குமான உரையாடல்
தொடரும் விநாடியில்
உயிர்கசியும் ஏக்கத்துக்கும் உயிர்கசியும் ஏக்கத்துக்குமான சந்திப்பு
சிதறுண்ட குழந்தைகளின்
பிஞ்சு விரல்களுக்கும் பிஞ்சுவிரல்களுக்குமான கைகுலுக்கல்
தான்யாவின் குடும்பத்தில்
தான்யாவைத்தவிர எல்லோரும் மடிந்துவிட்டார்கள்
இறுதிச் செய்தி ஸ்ரலின்கிராட்டில் இருந்து முள்ளிவாய்க்காலிற்கு
முள்ளிவாய்க்காலில் இருந்து அலப்போவிற்கு....
முன்னெப்போதும் அறியப்படாத முள்ளிவாய்க்கால்
முன்னேப்போதும் அறியப்படாத அலப்போ
உலகின் சக மனிதர்களுக்கு
ரத்தஆற்றாலும் உயிர்கள் கொட்டுண்ட நிலத்தாலுமே
அறியப்படுத்துவதில்
மிக்க மகிழ்ச்சி உடையவர்களே
உங்கள் முகங்களினால் ஆன இந்த உலகத்தில்
ஒரு குழந்தையின் ஒரு நூற்றாண்டு கால மூச்சை
பனிமலைகள் இடையேயும்
பாலைவனங்களிடையேயும்
நதிக்கரைகளிலும்
கைகோர்த்து இடைதழுவி அணைத்து
ஓடித்திரிந்து ஒட்டிவைக்கும் காதல் இதயங்களை
பூமியை குளிர்விக்கும் மாயவிரல்களை
இதுவரை பார்த்திராத
ஆச்சர்ய கோல்களை உதைக்கப்போகும் பாதங்களை
உங்கள் பிள்ளைகளின் பிரியமான நண்பர்களை
நீங்கள் உங்களுக்கு பிடித்த கட்டளைகளால் கொன்றுவிட்டீர்கள்
வாழ்கிறவர்களுக்காக வணங்கப்படுகின்ற கடவுள் போல்
இறந்தவர்களுக்காக வரும் கடவுள்
இரக்கமுள்ளவனாக இரக்கமாட்டான்
மரங்களும் கட்டிடங்களும் மின் ஒளிச்சாரல்களும் நிறைந்து
நந்திக்கடலோரத்தில் ரம்மியமாக மாறியிருக்கும் இயற்கை
எதுவும் நடவாததுபோல
முளைத்திருக்கும் காட்சிகள்
அலப்போவிலும் நடந்தேறும்.....
அலப்போ என பெரிய எழுத்தில் கரும்பச்சை நிறத்தில்
ஒரு வரவேற்பு பலகையை நட்டுவையுங்கள்
எப்போதாது நான் வரும்போது
ஒரு செல்பி எடுத்துக்கொள்கிறேன்
கைப்பற்றப்பட்டவை
வெற்றிக்கொள்ளப்பட்டவை
எல்லாவற்றையும் அலப்போ வரும் வழியில்
எங்காவது காட்சிக்கு வையுங்கள்
மனதாபிமானத்துக்கான யுத்தத்தை விளக்கமளியுங்கள்
ஏன்சாகுறோம்
எதற்கு சாகிறோம்
எதனால் சாகிறோம்
என்று தெரியாமலே
இன்னும் எத்தனை நூற்றாண்டுகள்
எத்தனை இலட்சம் உயிர்கள்!!
எல்லோரும் ஒரே மாதிரியே இருக்கிறார்கள்
அலேப்போ பற்றி யாரிடமும் நான் பேசவில்லை!!!

வெரிகுட் !

நெற்றியில் சரிந்துவிழும்
முடிகளை கோதிவிட்டு கோதிவிட்டு
சின்னவயசில்
கூட்டவும் கழிக்கவும்
மனசுக்குள் வைத்து தொடங்கி
பத்துக்கும் பத்தெடுக்கவைத்து
ரீச்சரிடம்
வெரி குட் வாங்கித்தந்த விரல்கள்
இப்போதும்
தலைகோதிவிடும் பழக்கமுடைய எனக்கு
நரைகளின் கணக்கை சொல்லாமல்
எப்பொழுதும் பிழை விடுகின்றன
வெரிகுட் !