Tuesday, July 24, 2012

கண்களின் விருந்து


பொன்.காந்தன்



இதயத்தை தொடும் வரை இருந்தேன் -உன்
இரு விழி அசைவினில் கலந்தேன்
உனக்கென மறுமுறை பிறந்தேன் -உன்
முகவரி எதுவென அலைந்தேன்

விழியினில் ஒரு நதியோடும் -என்
விடுமுறை நாட்களை தேடும்
கனவுகள் ஆயிரம் கோடி -உனை
சேர்ந்திடும் வாசல்கள் தேடி


சுகமென நானுனை வரைந்தேன்
சொர்க்கங்கள் ரசித்தன என்னை
இனிமைகள் இறைவனின் பரிசு -அதில்
உயர்ந்தது உன்னிடம் இருக்கிற மனசு

பொழிவது மழையென இருந்தேன் -உன்
பூமுகம் சில்லிட வியந்தேன்
விழிகளில் இத்தனை மலரா -நீ
வெண் மதி சூடிடும் அழகா
உன் விடை எழுத கேள்விகள் கோடி
உருகுது கவிதை உன் மடி தேடி


அர்ச்சுனன் வில்லை திருடிய கண்கள் 
ஆதாம் இன்னும் சுவைத்திடும் கனிகள்
காமன் எழுதிய கடைசி கவிதை
காதல் கொடுத்த காதல் பரிசு
யாதும் நீயே ஆனதினாலே
ஆண்களின் தவங்கள் அழகென ஆச்சு


நீ இந்திர லோக தேவதை இல்லை
மந்திரம் செய்த மாயமும் இல்லை
தூரிகை செய்த ஜாலமும் இல்லை
காதல் தந்த கண்களின் விருந்து

 

Friday, July 20, 2012

உனது மழையும்
எனது வெறிச்சோடிய வானமும்

பொன் காந்தன்


மெய் விழியே ! மெய் விழியே !
நீ எங்கு போனாய்
மெய் மனிதர் வீழ்கையிலே
பொய்யுடுத்து கிடந்தாயோ
இன்றுன் பெயர் என்ன
சாக்காடு முழுதும்
பூக்காடு எழுத
இன்றுதிரும் உன் புன்னகையை
குரங்கு தின்னி பழம் என்று
நம் காலப்போடியன்
கணித்து போவான் .


தாகத்தில் நீ பொழியா மழை
பாவத்தின் அடையாளம்
எனினும்
நீ பொழிவாய்
பூப்பாய்
கனியென இனிப்பாய்
இரக்கத்தின் கடவுள்
இதயம் தொடும் கருணை
எல்லாம் சுமப்பாய்
மானுடம் கரைய
ஊழியை பார்த்து
உட்கார்ந்திருந்த உனதவதாரம்
தேவலோகத்தை சிருஷ்டிக்கும் சக்தியை
எப்போதோ இழந்துவிட்டதை நீ அறியாய்

என்றோ உன்னை சங்கரிக்கப்போகும்
அஸ்திரங்கள்
காலடி மண்ணில் கருத்தரிக்க
நீ எதற்கோ காத்துகிடக்கிறாய்
நான் எதற்கோ காத்து கிடக்கிறேன்

பூமியின் தேகமெங்கும்
உன் நகங்களின் காயங்கள்
காயங்களின் மீது
சில கால சகுனிகள்
மகுடங்களோடு திளைத்து கிடப்பது
உன்கால பூக்களென தெரியும் சிலருக்கு
புளுக்களென நெளியும் எமக்கு .


என் வாசலில் நீ நின்றாலும்
என் வீட்டில் நீ விருந்துண்டாலும்
நான் உனது நண்பன் அல்ல
தேநீர் குவளையும்
உணவு தட்டும்
பூங்கொத்தும்
உனக்கு விரிக்கப்படுகிற
வலையாக இருக்கலாம் .
என் பின்னாலேயே திரி
ஓயாமல் கணக்கெடு
உன் சுவர்களில் என் முகங்களை
ஒட்டிவை
எல்லா ஆலோசனைகளின் பின்னும்
உன்னால்
என் குழந்தையை தூங்க வைக்க முடியாது .


 

Wednesday, July 11, 2012

புதிய இதயத்தின் நாட்கள் ..........



பொன் காந்தன்



நிரம்பிய காதலுடன்
உன்னை சந்தித்த போதெல்லாம்
எல்லாம் மோட்சமடைந்தன
எல்லாம் விடுதலை பெற்று சென்றன .
எல்லாம் கரைந்து போன கணங்கள் அவை .
எல்லாம் கொடுத்துவிட்டு
ஏவல் அற்றும்
சேவகம் அற்றும்
மன்னனாய் இருத்தலான பேரின்பம் .

உன்னை நான்
சந்தித்தேன் என்பதும்
என்னை நீ
வேரோடும்
வானத்தோடும்
பறவைகளோடும்
புரிந்துகொண்டாய்  என்பதும்
கடைசி நாளுக்கு
முதல்நாள் நடந்த
முதல் நாளின் ஆச்சரியங்களில் ஒன்று .

மொழிகளற்ற உலகின்
முதல் எழுத்தாய் தொடங்கும்
இச் சந்திப்பு
எதை எழுத போகிறதோ
அது
புரிய இயலா கொந்தளிப்பாய்
நுரை தள்ளி கிடக்கும்
பிறவியின் இறுதி கணங்களில் .....

குருவிகளும் காற்றும்
பறவைகளும்  பார்வைகளும்
விளைவித்த கனியென
பரவும்
காதலின் புதிய முற்றத்தில்
உட்கார்ந்து இருக்கிறது
நமது சந்திப்பு புதிய உலகை அழைத்தபடி ...

கடவுள்கள் ஒருநாள்
மலர்களுக்கு செய்த
அர்ச்சனை தீர்த்தத்தை
அருந்திய பரவசம்
இடையில் கள்ளருந்தி போய்
இமைகளில் ஊரும்.
திருடிசெல்லப்பட்டிருக்கும்
எல்லா நெருடல்களும் முடிவில்