Saturday, September 1, 2012

காம்புகளின் வாசம் .........




 பொன் காந்தன்



நீண்டு விரிந்து கிடக்கிறது
தாயின் மடி
தாலாட்ட  குழந்தைகள் அற்று
கண்ணீர் ஓடும் வெளியென ..........
மடியை மடியை பார்த்து
மார்பை மார்பை பார்த்து
ஓடி வரும் கன்று
தொலைவிலும் ஒரு புள்ளியென
இல்லை என சாகும் தாய்மை ..

இன்றும் நேற்றும்
அதற்க்கு முன்னான நாட்களிலும்
வந்து போவாள் அவள்
பிள்ளை இருக்கிறானா ? இல்லையா ?
இந்த கேள்விகள் கண்ணீரோடு
நிரம்பி வழிய !

ஒரு மகன் என இருந்து
இடித்து விழும் வானம் தாங்கி
உடைந்து விழும் நட்சத்திரங்கள் விழுங்கி
அறுந்து தொங்கும் சிறகுகள் உடுத்து நான் ....

கனவுகளில் அவள் நடத்திய
பிள்ளைகளின்
திருமண அழைப்பிதழ்கள்
என் மேசை முழுக்க பரவி கிடக்கிறது
கற்பனைகள் பெற்றெடுத்த
பேர குழந்தைகளின் கொஞ்சல்கள்
அளைகிறது அவளின் முற்றமெங்கும் ....
காம்புகளின் வலி
மகரந்தங்களை மலடாக இருந்து விட
மன்றாடுகிறது ........

நூறு தங்க ரதங்கள் சூழ
பல்லக்கில்
அவளை ஏற்றி மலர் சொரிய
தேவ லோக பவனிக்கு தயாரான போதும்
அவள் கேட்க்கிறாள்
பிள்ளை எங்கே ?
இருக்கிறானா? இல்லையா?
பதில் இல்லா ஒவ்வொரு கணமும்
நரகத்தில்
உழல்கிறாள் அம்மா !


எலும்பு அழைத்தாலும்
சாம்பல் அழைத்தாலும்
காற்று அழைத்தாலும்
தன் பிள்ளையின் அழைப்பு
அறிவாள் அம்மா
அறிந்தால் சொல்லுங்கள்
அவள் பிள்ளையை .......