Saturday, December 10, 2011

எனக்கான தருணம்



பொன்.காந்தன்

நேற்றும்தான் மெல்லியதாக சுண்டிவிட்டேன்
சகஜமாகிவிட்ட பிரிவுகளில்
மலைகளும் கூட
மெனமாக விழுந்து கிடக்கின்றன.
முன்பொரு பொழுதுகளில் இருந்த
இழக்கும்போதான
பாரம் நெருடல் இப்போது இல்லை.
ரொம்ப மகிழ்ச்சி!
நான் ஒரு மலர்செடியாகியிருக்கிறேன்
மழை வானமாகி இருக்கிறேன்
இலையுதிர்கால மரங்கள் என்னுள் முளைத்துக்கொள்கின்றன.
அந்த பதின்ம வயதுகளில்
எங்கே போயிற்று இந்த
வசந்த காலத்தின் உண்மைகள்.
இன்னமும் என்னை
வெறித்துப்பார்த்துக்கொண்டிருக்கும் சிலரை
என்னோடு அழைத்துச்செல்ல தயாராகிவிட்டேன்.
ஆச்சரியப்படும் படியாக எதுவும் நடந்துவிடவில்லை.
எனக்கான தருணமாகஇது இருக்கிறது.
சிலவேளைகளில் சாலையில்
ஒருவர் மட்டுமே நடந்துபோவது
எவ்வளவு அழகாக இருக்கும்.
முற்றிலுமாக என்னை நான் சுமந்து செல்வதாக உணர்கிறேன்
இது எனக்கான தருணம் என்பதால்.

Friday, December 2, 2011

தேய் பிறை



பொன்.காந்தன்



கட்டழகியென
கண்ணுக்குள் நிற்கிறாய் நேற்று
இன்று
பொட்டற்று போய்விட்ட
உன் முகமும்
புன்னகை தொலைந்த
உன் பொலிவுமாய்
விட்டு விடுதலையாக
புறப்பட்ட சிறகுகள்
கொட்டுண்டு
பட்டு பூச்சிகள் இரண்டை
பாசத்துள் அணைத்தபடி
கொட்டுகிற கண்ணீரை
குனிந்த மறைத்தபடி
முன்னே நிற்கிறாய் முழுமதியே!
என்னே விதியதுவோ
உன்னைப்போல் கண்ணீரால்
ஊர் நிறைந்து கிடக்கின்றது
மின்னல்போல் மறைந்த
உன் மிடுக்கான கனவுகள்
மீண்டும் இனிவருமா
இல்லை நீ தனி மரமா
இல்லை இல்லையென
சொல்லத்துடிக்கிறேன் நான்
இச்சொல்
மொத்தத்தமிழினத்தின் மொழியாகுமா!

Monday, November 21, 2011

புழுதி: சாவற்ற சந்நிதியின் பாடல்

புழுதி: சாவற்ற சந்நிதியின் பாடல்: -பொன்.காந்தன் கார்த்திகை எங்கள் இனத்துக்கும் மனத்துக்கும் எழுதுகிற கதையை சொல்லத்தவித்து துவழும் உள்ளங்களில் இருந்து ஓங்குகிற உருவம...

சாவற்ற சந்நிதியின் பாடல்


-பொன்.காந்தன்



கார்த்திகை
 எங்கள் இனத்துக்கும் மனத்துக்கும்
எழுதுகிற கதையை
சொல்லத்தவித்து துவழும்
உள்ளங்களில் இருந்து ஓங்குகிற உருவம் இது.
புல்லரிக்கிற ஒரு கவிதையை பொழிவதற்கு
புதுவை இல்லையென்றும்
புனிதர்களை பல்லக்கில் ஏற்றிவைத்து பாடுதற்கு
ஒரு பாவலனும்
இல்லையென்றான ஏக்கவெளியில் நின்றுகொண்டு
கல்லறைத்துண்டுகளை கவியாக்கி
காலக்கடமையை
அந்தக் காவல்தெய்வங்களின் நித்திய கடனை
நிறைவேற்ற நெஞ்சம் பதறிடுமாம.;
எருக்கலைக்காடாய்
எவனோ மிதித்து எச்சில்படுத்தும்
குப்பைகளின் மேடாய்
என் சொத்தென்று பத்திரங்கள் நிரப்பி
பாழாய்ப்போனவர்கள் வேலியிடும்
வம்சப்பெருவடுவாய்
எம் குஞ்சுகளை மலர்தூவி
மார்பில் இறுமாந்து
மண்ணள்ளித்தூவி
மலையாய் நிமிர்ந்த சத்தியமைந்தர்கள்pன்
சாவற்ற சந்நிதி
நித்தியம் பார்த்து நாம் நெகிழ்ந்த
நெருப்புகளின் இருப்பு
தொழுதிடமுடியா துரதிஸ்டமாயிற்று.
ஒன்றா இரண்டா ஓராயிரம் கனவல்லவா கண்டார்
நிச்சயம் ஒரு நினைவழியா நாள் வருமென்றுதானே
கொற்றவைதேவியின் கோயிலில்
இத்தனை செல்வங்களும்
இரத்தபுஸ்ங்களாய்
சத்திய வரிகளை எழுதிச்சாய்ந்தனர்.
பற்றி எரிகிறது வயிறு
இத்தனை பெரிய அடிமை இருளில்
ஏங்கித்திரியவா
பச்சைக்குழந்தைகள் பாடை ஏறினர்.
ஆற்றலின் உறைவிடமாய் இருந்த வீடு
தோற்றதன் மாயமென்ன
தோற்றதா இல்லை தொலைந்ததா
அல்லது அஸ்த்தமன திசையின்
அகங்கார வெறிக்குள் வீழ்த்தப்பட்டதா
உலகாதிக்கத்தின் உன்னதம் அறியாத்தனத்தில்
உறைந்து  போனதா
என்ன நடந்தது.
என்ன நடந்தது.
ஏன் நடந்தது.
எப்படி நடந்தது.
இந்தக் கேள்விகளை கேட்கும்போதெல்லாம்
ஈழத்தமிழன் செத்துப்போகிறான்.





கல்லறைகள் தழுவி
கண்ணீர் விட்டழுது
என் மனக்கிடக்கைகளை
மருந்திட்டு மனமாறிப்போகலாம்
எங்கே என் திருக்குழந்தைகளின்
திண்ணிய மேனி நீள் துயில்கொண்ட
திருநிலம்
இல்லையே
கண்ணெதிரில் கிடக்கிறது
கசக்கி எறியப்பட்ட
கனவுகளின் விளைநிலம்
எண்ணமுடியாத்துயரில்
என் கார்த்திகை கடக்கின்றது.
கண்ணீர் விட்டு
ஓவென்று அழுதால்
காவல் நிலையங்களுக்கு காரணம் சொல்லவேண்டும்
அடக்கிக்கொள்கிறேன்.
மரணித்தவர்களை நினைப்பது கூட
மகா குற்றம் என்ற நிலையில்
இன்றைய நாட்களில்
என் பெயரை மரக்கட்டை என்று மாற்றிக்கொண்டேன்.
ஈகத்தின் இமயத்தை தொட்டவர்க்கு
நெய் விளக்குகள்
ஏற்றமுடியவில்லை
மெய் விளக்குகள்
உள்ளே ஓங்கி எரிகின்றன.
மடியில் இருக்கும் போதும்
மண்ணுக்குள் இருக்கும்போதும்
தன் பிள்ளையின் எண்ணம் தாயறிவாள்
அம்மாவின் அரவணைப்பை பிள்ளை
ஆதர்சமாய் அடையும்
அதை எந்த வல்லரசாலும்
வெல்லமுடியாது.
உயர்ந்த காதலின் மொழியை
எங்கள் ஊருக்குள் எழுதினால்
விசாரிக்கப்படுவேன்
வெறித்தனத்தால் முறைக்கப்படுவேன்
இழுத்தேற்றப்படுவேன்
எலும்புகள் முறிக்கப்படுவேன்
கல்லறையை பாடியதற்காய்
கதை முடிக்கப்படுவேன்
என்பதனால்
நான் மட்டும் பாடுகின்றேன்.
கல்லறைக்குப்போன காவியங்களே!
நீங்கள் மட்டும் தமிழர்கள்.
நீங்களே தமிழர்கள.;
அன்றாடம் ரணப்படுகிறோம்
தமிழர்களா நாம்.
நேற்றுத்தான் உங்களை
நெஞ்சமெலாம் வைத்து போற்றுவதாய்
புளுகினோம் புளகாங்கிதம் அடைந்தோம்.
முந்திக்கொண்டு முறுக்கேற பேசினோம்
இன்று
எல்லாம் வீண்வேலை என்கிறோம்.
கதிரை அரசியலே கடவுள் என்கிறோம்.
எங்கள் கடைக்கோடி வரை வந்து எவன்எவனொ
களவெடுக்கிறான் கற்பை உருவுகிறான்
கன்னத்தின் அறைகிறான்
செத்தபிணம்போல திரிகிறோம்.
எங்களில் சில பேருக்கு நேற்றுஅப்பிடியும்
இன்று இப்படியும் எப்படி முடிகிறது.
இவர்கள் இருக்கும் வரைகூடஇனிய நிலம் விடியாது
நினைவுகளை நெருங்க முடியாது.
புல்முளைப்பதற்கா புண்ணியர்கள் எருவானார்கள.;
தலைகுனிவதற்கா தங்கைகள் வெடியானார்கள்.
புற்றெடுப்பதற்கா புதுச்சரிதம் எழுதினார்கள்.
ஓவ்வொன்றாய் இன்முகங்கள்
இதயத்தில் எழுகின்றன.
அந்த நாட்களை ஆராதிக்க தவிக்கின்றேன்.
இந்த தெருக்களுக்கு அவர்கள்தான் அழகு
எந்தப்பாடலுக்கும் அவர்கள்தான் அழகு
எந்த இரகசியத்துக்கும் அவர்கள்தான் அழகு
எந்த பேரொலிக்கும் அவர்கள்தான் அழகு
எந்த புன்னகைக்கும் அவர்கள்தான் அழகு
அவர்கள் இல்லாத நாட்கள் சூனியம்தான்.
கார்த்திகையே! ஏன் எனை தீண்டுகிறாய்
எத்தனை இரவுகள்
எத்தனை விழிப்புகள்
எத்தனை ஆச்சரியங்கள்
எத்தனை தவிப்புகள்
எத்தனை சத்தியங்கள்
எத்தனைபிரிவுகள்
எத்தனை சந்திப்புகள்
எத்தனை  நட்புகள்
எத்தனை காதல்கள்
எத்தனை தவங்கள்
எத்தனை மௌனங்கள்
எத்தனை காயங்கள்
எத்தனை வருடல்கள்
எத்தனை எதிர்பார்ப்புகள்
ஓர் அழகிய சாலை பாதங்களை இழந்து
பாழடைந்து கிடக்கின்றது
ஒற்றைக்கண்ணீரில்
விழுந்துடைகின்றது ஒரு இராச்சியத்தின் கனவு
எத்தனை நாட்களை கொண்டாட
நாம் சித்தங்கொண்டிருந்தோம்
இன்று
ஓற்றை நாளைக்கூட கண்ணிலொற்ற
மறுக்கப்பட்டோம்.
கொள்கை பற்றி கொளுத்தி எறிந்தவர்கள்
எல்லாம் முடிந்ததென்று
எதிரிகள் காலடிக்கு
சரணம்பாட சம்மதமானபோது
நம் குலத்து இளவல்கள் இருவர்
வானமேறி
வதம்செய்ய போனார்கள்..
பொக்கணையின் உப்புவெளியே
இரணைப்பாலையின் இதயமே
எடுத்துரை
ஈகம் செய்த எம் தேவமைந்தர்களின்
வுpடியலின் நம்பிக்கையை.
வானவியலை
எங்கள் வரலாற்றை
அகிலத்தின்மொழிகளை
ஆழப்படித்தவர்கள்தான் அவர்கள்
இறுதி வேளையிலும் உறுதிகுலையாதிருந்தார்
எழுந்தார் பறந்தார்
மடிந்தார்
எங்கள் மானக்கொடி பறக்குமென்று.
நாங்கள் எல்லாம்
நடப்பதறிந்த ஞானிகள் என்று
உயிர்கொண்டோடிவந்து
இன்று சந்தியிலும் சபையிலும்
முந்திக்கொண்டுபேசுகிறது.
தன்மானம் இழந்து
தாய்மானம் விற்று
அடிமைச்சாசனத்தை ஆரத்தழுவியதன்
அடையாளம்.
நாம் இழந்தது எப்பெருமிடுக்கென்று
எவரேனும் உணர்ந்தீரா
காலத்தின் கண்ணுக்கெட்டிய தூரத்தில்
ஈழத்தமிழனுக்கு இனியொரு தலைவனில்லை
என்பதுணர்ந்தீரா
எல்லாமுகங்களிலும் ஏகப்பட்டகுறைபாடுகள்.
சின்னத்துரோகங்களுக்கே சீறிய நாங்கள்
இப்போது எண்ணற்ற துரோகங்களோடு
வாழ்க்கை நடத்த வஞ்சிக்கப்பட்டோம்.
அர்ப்பணிப்புக்கெல்லாம் ஆயிரம் ஆயிரம் வரைவிலக்கணம்
எழுதிய பிரம்மாக்கள்
இப்போது அடிவருடுவதும் ஒரு வகை அழகென்று
முடிவெடுத்து திரிகின்றார்.
கொடி பிடித்து கூட்டம் நடத்தியவர்கள் எல்லாம்
கொள்கை என்ன கொள்கை எல்லாம்
குடுக்கிறதை வாங்கிக்கொண்டு அடங்கிறதுதான் அறிவென்று
அலட்டுவதை
இப்போது வீரம்விளைந்த மண்ணில்
மலிவாககேட்டு மனம்வேகலாம்.
பாவம் அந்த வாலிபத்தை தொலைத்து
வாழ்க்கையை முடித்து ஈழம் காணப்போன
இதயதெய்வங்கள்.
கார்த்திகை
 எங்கள் இனத்துக்கும் மனத்துக்கும்
எழுதுகிற கதையை
சொல்லத்தவித்து துவழும்
உள்ளங்களில் இருந்து ஓங்குகிற உருவம் இது


ஓ! உள்ளுறையும் உற்பவங்களே!
நேற்று நடந்தவற்றுள் தோற்றுப்போன கதைதான்
பலரின் ஞானத்துக்கு எட்டியது
வென்ற கதை நூறு இருந்ததை அறிய
நாளைவரை காத்திருக்கவேண்டும்.
விடுதலைப்போர்களில் நிச்சயம் இந்த விந்தைகள் இருக்கும்.
ஆயுத்ததோடு சம்மந்தப்பட்டதாக
அறியப்பட்டாலும்
ஆழ் மனதோடும் பிரிக்கமுடியாத பேராற்றல்பெற்றது
விடுதலைதேடல்.
இந்த இடத்தில் உலகம் தமிழர்களிடம்
தோற்றுக்கிடக்கின்றது.
பிரபாகரனை பிடிக்காத மேதாவிகளுக்கு
தமிழர்களை பிடிக்கிறது என்பது
கோமாளித்தனம்.
புpரபாகரனை சொல்லவும்முடியாமல்
சொல்லாமல் இருக்கவும் முடியாமல்
அரசியல் நடத்துகிற நாகரிகம் இப்போது.
மாவீரர்கள் என்ற வரலாற்றுச்சொல்லை
உச்சத்தால்
தங்கள் அரசியலுக்கு தள்ளாட்டமே
இல்லையென்பது
மக்களை நாடிபிடித்தவர்களுக்கு நன்றாக தெரியும்
கல்லறைகளும்
கறைபடிந்த இலங்கை அரசியலுக்கு சில்லறைகளாக
மாறிவிட்டன என்பது ஒரு புறம் கவலைதான்.
தியாகங்களை பேசுகின்றவர்கள்
எங்கள் தாயகம் வடக்குகிழக்கு இணைந்தது என்பதை
எண்ணத்தில் வைக்கவேண்டும்.
பிரிக்கப்பட்ட எமது இராச்சியத்தில்
முதல் அமைச்சராக வருவது யார் என்பதற்கு
அடிபடுவதல்ல வரலாற்றுக்கடமை.
முள்ளிவாய்க்காலில் ஈழத்தமிழர்களின்
இரத்தஓலம் உயரக்கிளம்பியபோது
கொன்றவன் கூத்துக்கு தாளமிட்டவர்களையெல்லாம்
தண்ணிதெளித்தவிட்டு துரோகத்துடக்கு போயிற்றென்று
அடிவீட்டில் வைத்துவிருந்தளித்து
அர்ப்பணிப்பு நிறைந்த மண்ணில் ஆழ
இடங்கொடுத்தால் வரலாறு மன்னிக்காது.
தியாகங்களை வைத்து நடத்துகிற அரசியல்
புனிதமற்று போய்முடியும்.
மக்களின் மாவீரர்களின் குருதியில் விரிந்தது
ஒரு செங்கம்பளம்
அதில் அமெரிக்க இராசாங்கம் போனது
எங்கள் மன்றம் இன்று.
வென்றவர்கள் மண்ணுறைந்துள்ளார்கள்
விண்ணாய் எழுதிய அவர்களின் வீரியத்தின்
விளைவுகளை ஒன்றாய் நின்று
உயர்ந்த எண்ணங்களோடு வாங்குகஎன்பதுதான்
எங்கள் வாசலில் கேட்கிற அறைகூவல்.
அகில இலங்கைக்குள் அடிக்கடி சத்திய பிரமாணங்கள்
செய்து கொண்டு உரிமை பற்றி பேசுவதில்
எந்த உரப்பும் கிடையாது.
செத்தவர்களின் மேடுகளில் நின்றுகொண்டு
இன்னும் பத்தோ இருபது வருடங்கள்
தமிழர்களின் வரைவிலக்கண வகுப்பு எடுத்தால்
அரசமர விழுதுகளில் நம் அரசியல் சிக்குண்டு
நம் இனம் தொலைந்துபோகிற துரதிஸ்டம் நிகழும்.
என் ஊரில்ஒருவன் தமிழ்ச்சங்க கடிதத் தலைப்பில் இருந்து
புலிச்சின்னத்தை அகற்றி
தன் சிங்க விசுவாசத்தை செதுக்கியிருப்பது
இனிவரும் காலத்தின் எம் இன இழி நிலைமைக்கான
முன்னோட்டம்.
சோழன் மன்னன் இருந்தான் என்று
ஈழத்தமிழ்சங்கங்களில் எவனும் இனி பேசானாக்கும்.
நம் கண்ணெதிரில் நிகழ்ந்த நெருப்பு வரலாற்றை
தமிழன் சாதித்த சரித்திரத்தை
தூக்கி எறிந்துவிட்டு
பாட்டி வடை சுட்ட கதைசொல்லும்
கலாச்சார மேடைகளும்
மண்ணாடை இல்லாத மாநாடுகளும்
பொன்னடைக்குள் மினுங்கும்
போராட்டத்தில் பங்கொன்றும் எடுக்காத பெருந்தியாகிகளும்
என்று ஊர் தெரு நரிகளின் ஊளையால் நாறிக்கிடக்கின்றது.
ஈக வர்ணங்களால் எழுந்திருந்த நம் தேசம்
இன்று நாச வர்ணங்களால் நலிவுற்றுக்கிடக்கின்றது.
இப்படி எல்லாம் எழுதுவதால்
துப்பாக்கிக்கு துதிபாடுதல் என்று பொருளல்ல
மரணமே என் வாசலில் மீண்டும் மலிந்திடுக
என்ற வலிந்த அழைப்பல்ல
மீண்டும் ஒரு பதினாறு வயது இளவல்
தன் வாழ்  நாளை
இனத்துக்காக கொடுத்து
தன் வசந்தங்களை துறந்து
காட்டிலும் மேட்டிலும்
இரவுகள் நூறை துறந்து
இனிமைகள் கோடி துறந்து
இறுதியில் கொடுந்துயர் ஒன்றை தன்னினத்துகாக
சுமக்காதிருக்க.
காலவெளியில் கரிகாலன்போல்(பிரபாகரன்)
அவன் சேனை நடத்திய வீரமறவர்போல்
மங்கையர்போல்
இனியொருபோதும் தமிழனுக்கில்லை தனிநிமிர்வு


கார்த்திகை
தனிதிருந்தெழுதும்
என் புலம்பல்வெளியாயினும்
தமிழன் மனச்சாட்சியை
உரசிப்பார்க்கும் உன்னத இடம்.
பாதைகளை சரிபார்க்கும்
கலங்கரை.
அந்த நாளில்
அக்கணத்தில்
அச்சுடர்கள் எரியும்
எவர் கண்ணும் அறியா
எம்மண் அறியும்
அந்த அக்கினிச்சுவாலையின் அர்த்தத்தை.
எங்களில் ஒவ்வொருவர் வீழும் போதும்
நாம் ஓவென்றழுதோம்
அவ்வொலி
ஓர் நாள் எரிமலையின் குமுறலாய் ஒலிக்கும்.
எம் மனங்களை சரி செய்வோம்
அதுவே இனத்துக்கு தரப்படுகின்ற ஆயுதம்.
மாவீரர்களே!
மரணத்தின் பின்னும்
உறங்க இடம் மறுக்கப்பட்டதிலிருந்து
உங்கள் வீரத்தின் உச்சமும்
அது தரும் அச்சமும் உணரப்படுகின்றது

Monday, November 7, 2011

தீக்குச்சிகளின் வானம்


பொன்.காந்தன்

எமது மக்களுக்கு முன்பு சில சந்தேகங்கள் இருந்திருக்கலாம்
இருண்ட காலம் பற்றி
இப்போது தெளிந்திருக்கிறார்கள்
அவர்களின் எல்லா இடுக்குகளிலும்
இருள் குடிகொண்டிருக்கின்றது
ஒரு சிறு பொறிக்காக
எல்லா திசைகளிலும் துவள்கிறார்கள்
முன்பு இவர்கள் எல்லா இடுக்குகளாலும்தான்
சூரியனை இழத்திருத்தல் கூடும்
இக்காலம் இலையுதிர் காலம் என்று
எழுத மனம் ஒப்பவில்லை
ஏனெனில்
எமது மக்கள் ஒரு வாளுக்கு இருக்கவேண்டிய
கூர்மை பற்றியும்
ஒரு புரவிக்கு இருக்கவேண்டிய வேகம் பற்றியும்
போதிக்கிற மௌனத்தை கொண்டுள்ளார்கள்
நசிபடும் ஒலிகளில் இருந்து
ஒரு உண்மை காயங்கள் அடிக்கடி தப்பித்துக்கொள்வதை
உணர முடிகின்றது
அடிமைகளின் தூய்மை
எல்லா கரும்புள்ளிகளிலும் அம்பலப்படுகின்றது
சூரியனைப்பற்றி யாரும் போதனை செய்யவேண்டியதில்லை
ஆரியாசனங்களை தீக்குச்சிகள்
நிரப்புவதில் உள்ள அசிங்கத்தையும்
மனம் சமாதானப்படுத்திக்கொள்கின்றது
எந்த மரத்தின் கீழும்
புத்தர் இருக்க பழக்கப்பட்ட காலத்தின்
காலத்தின் சாபத்தையும்
சோம பானமாக்கி கொடுக்கவும்
நமது ஆண்டி ஒருவன் இருக்கவே செய்கிறான்
ஒட்டப்படாத சுவரொட்டிகளோடு
அலைகிறது மிகப்பெரும் ஆத்மம்

Sunday, October 30, 2011

துளியின் கடைசி வரிகள்


-பொன்.காந்தன்



உன்னைப்பற்றிய எதிர்பார்ப்பால்
சர்ப்பமாய்
புளுதி நிரம்பிய நதியாய்
பாதம் படாத தெருக்களாய்
வெளியாய்............
நான் தவித்துக்கொண்டிருக்கின்றேன்
எனக்குள்
பெருங்கடலோ
பெருங்காடோ
பெருவெளியோ
ஒரு சில்லிடும் கணத்தில்
பிறவியின் அழகை பாடப்போகின்றன.
ஒவ்வொரு பிறவிக்குள்ளும் இருக்கும்
பிரபஞ்சத்தை நிரப்பும்
அழகிய பாடலின் வரிகளை
நானுணரும் கணத்தில்
நீயெனை சந்தித்திருக்கக்கூடும்

சுவாச அறைகளுக்குள்ளும்
இமைகளுக்குள்ளும்
மலர்கள் மலரும்போது
உனை எழுதும் மொழி
என் இதயச் சுவர்களில்
தீண்டிச்செல்லும்
எல்லா இனிய கவிதைகளுக்குப் பிறகும்
எல்லா மயக்கும் ஓவியங்களுக்குப் பிறகும்
எல்லா இசைகளுக்குப் பிறகும்....
ஓர் வருடலின் சுகத்தை
பிரபஞ்சத்தின்
சகல வெண்புரவிகளையும்
என் முன்னே நிறுத்தி வைத்திருக்கின்றேன்
இறுதியாய்சொல்கிறேன்
நான் உன்னை மட்டுமே நம்புகின்றேன்

 

Tuesday, October 4, 2011

சிலகணம் -நான்

-பொன்.காந்தன்



மொழியின்றி நான் தவித்த இரவில்
காற்று
சில மழைத்துளிகள்
மற்றும் நீ
எனது பிரபஞ்சத்தின்
வாசல் திறந்தீர்கள்
முன்பொருமுறை போல
தெரிந்து கொண்டும்
மலர்கிறேனா
உதிர்வதற்காக...............
         

ஈரவிழி

பொன்.காந்தன்



அவள் கண்களின் ஸ்பரிசத்தை தவறிய நாட்கள்
ஆயிரம் குழந்தைகளை கையில் இழந்த கணப்பொழுதுகள்
பாதியில் முடிந்து போன புன்னகை முகங்கள்
பயணத்தில் தவறவிட்ட என் காற்றின்துளிகள்
மீதியின்றி ஊழி தின்ற என் சந்தோசங்கள்
மீழ வழியின்றி நான் தவிக்கும் தவிப்பு
மீண்டும் எழத்துடிக்கும் எனதேக்கம்
எனது ஆடையை தேடும் அலைச்சல்
மானத்தை காக்க நான் படும் அன்றாடம்
எனது முகவரியை எழுதமுயலும் இதயத்துடிப்பு
என் ஈரவிழிகளில் தெரிகிறதா!

Saturday, October 1, 2011

விநாயகபுரத்தில் சிறார்கள் கௌரவிப்பு





சர்தேச சிறார் தினமான ஒக்ரோபர் முதலாம் நாள் கிளிநொச்சி
விநாயகபுரத்தில் சிறுவர்கள் கௌரவிக்கப்பட்டுள்ளனர். சிறுவர்கள்
ஆலயத்தில் இருந்து மாலை அணிவிக்கப்பட்டு ஊர்வலமாக
அழைத்துவரப்பட்டு விநாயகபுரம் முன்பள்ளி மண்டபத்தில்
முன்பள்ளி ஆசிரியர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில்
பா.உறுப்பினர் சி.சிறீதரனின் செயலாளர் பொன்.காந்தன் கரைச்சி
பிரதேச சபை உப தவிசாளர் நகுலேஸ்வரன் அச்சபையின்
உறுப்பினர் சேதுபதி கிராமசேவகர் சேந்தன் கிராம அ.சங்க செயலாளர்
மற்றும் பெற்றோர்கள் நலன் விரும்பிகள் கலந்துகொண்டு
சிறுவர்களுக்கு அன்பளிப்புக்களை வழங்கிவைத்து வாழ்த்துக்களை
தெரிவித்தனர்.








 

Saturday, September 24, 2011

ஆளுமையுள்ள எமது மண்ணை நிர்வகிக்க வல்ல மாணவ சமுகத்தை


ஆளுமையுள்ள எமது மண்ணை நிர்வகிக்க வல்ல மாணவ சமுகத்தை
உருவாக்க நாம் பாடுபடுவோம்
வாழவைப்போம்  அமைப்பின் உதவிகளை கோட்டைகட்டியகுளம் பாடசாலைக்கு
வழங்கிவைத்து சிறிதரன் எம்.பியின் செயலாளர்




முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள கோட்டைகட்டி பாடசாலை
மீண்டும் அதிபர் ஆசிரியர்கள் பெற்றோர்களின் முயற்சியால் முன்னேற்ற
ஏணியில் கால்பதித்து சிகரங்களை தொட பெரும் அவாக்கொண்டுள்ளது.
கிராமப்புறப்பாடசாலையாக இருக்கின்ற இப்பாடசாலை முல்லை மாவட்ட
மற்றும் கிளிநொச்சி மாவட்ட நகர்பகுதிகளில் இருந்து மிகவும் தொலைவில்
இருக்கும் நிலையில் அது தன்னுடைய இயல்பான கல்வி மற்றும் வாழ்க்கை
சூழலை அடைவதற்கு மிகவும் சிரமங்களை சவால்களை சந்திக்க
வேண்டியிருப்பது யதார்த்தம். எனினும் தங்கள் தேவைகளை நிவர்த்தி
செய்ய இப்பள்ளிச் சமுகம் எடுத்திருக்கின்ற முயற்சியின் பயன்களில் ஒன்றாக
கிளிநொச்சி மாவட்ட பா.உறுப்பினர் சி.சிறீதரனின் ஏற்பாட்டின் கீழ் கனடா
வாழவைப்போம் அமைப்பு ஒரு தொகுதி கற்றல் உபகரணங்களை வழங்கியுள்ளது.
இந்த நிகழ்வு பாடசாலையின் ஆசிரியர் திவாகர் தலைமையில் நடைபெற்றுள்ளது.
நிகழ்வில் பா.உறுப்பினர் சி.சிறீதரனின் செயலாளர் பொன்.காந்தன் கிளிநொச்சிமாவட்ட
த.தே.கூட்டமைப்பு அமைப்பாளர் வேழமாலிகிதன் கரைச்சி பிரதேச சபையின் கௌரவ
உறுப்பினர்களான  தயாபரன் மற்றும் சுகந்தன் ஆகியோர் கலந்து கொண்டு கற்றல்
உபகரணங்களையும் பாடசாலையின் நூலகத்திற்கான ஒரு தொகுதி நூல்களையும்
வழங்கி வைத்தனர். இங்கு பா.உறுப்பினரின் செயலாளர் கருத்துரைக்கையில்
முல்லை மண் வரலாறுகளின் பெட்டகம் . அதற்கென்றொரு தனி அத்தியாயம்
தமிழர்களின் வரலாற்றில் இருக்கின்றது. அத்தகைய புகழ்வாய்ந்த ஈகம் நிறைந்த
புனித மண்ணிலே இப்பாடசாலை அமைந்திருக்கின்றது.தமிழர்களாகிய எமது
வரலாற்றில் பலமுறை பேரிழப்புக்களையும் நெருக்கடிகளையும் சந்தித்திருக்கின்றோம்.
ஆனாலும் அதிலிருந்து நாம் மீண்டெழுந்து மீண்டும் புது மிடுக்கொடு பயணித்தது
வரலாறு.இது உலகில் புகழ்பெற்ற இதையும் கடந்த போவோம் என்றவாசகத்தை நினைவுபடுத்துகின்றது.
உண்மையில் நாம் கடந்த முள்ளிவாய்க்கால் போரிலே சத்தித்த இழப்புக்கள் மானுட வரலாற்றிலே
வார்த்தைகளில் வடித்திடமுடியா கொடுரம்மிக்கவை அப்பெரும் கொலை வெளியை கடந்தே
வந்திருக்கின்றோம்.இன்று எம்மிடம் எதுவுமில்லை நினைவுகள் சுமந்த இதயங்களை தவிர.
ஆனால் அது தான் எம்மைவழிநடத்திச்செல்லும் ஆதர்சம் என்பதை நாம் விளங்கிக்கொள்ளவேண்டும்
அந்த பயணத்தில் உலகை எமது  திசையில் நிலைக்கவைக்க நாம் எமது அறிவுக்கு பொக்கிசமாக
இருக்கக்ககூடிய மாணவ சமுகத்தை கட்டியெழுப்ப முனைப்புடன் செயற்பட வேண்டும்.அதற்காக
புலம்பெயர் சமுகம் தயாராக இருக்கின்றது.அதற்கு பாலமாக பா.உறுப்பினர் சிறீதரனும் அவர்
சார்ந்தவர்களும் என்றும் பாடுபட தயாராக இருக்கின்றோம்  நாளை நமது மண்ணை
நிர்வகிக்க இருக்கும் இன்றைய மாணவர்களுக்கு உதவ வேண்டியது காலக்கடமை என்றார்.
தொடர்ந்து அங்கு கலந்து கொண்ட பெற்றார்கள் மாலை நேரக்கல்வியை மேற்கொள்வதற்கு
உதவுமாறு வேண்டுகோள் விடுத்ததுடன் க.பொ.சா.தர பரீட்சைக்கு இன்னும் சில மாதங்களே
இருக்கும் நிலையில் முக்கியமாக கணிதபாடத்திற்கு நிரந்தர ஆசிரியர் பாடசாலையில்
இல்லாது இருப்பதை மிகவும் கவலையோடு சுட்டிக்காட்டினர்.அதே வேளையில் போக்குவரத்து
வசதிகளும் குறைபாடோடு இருப்பதாக கருத்துரைத்தனர். முல்லை கோட்டைகட்டிய பாடசாலையின்
மாணவர்களின் எதிர் காலத்தில் அக்கறை செலுத்தவேணடியது எல்லோரதும் கடமையாக
இருப்பதுடன் அப்பாடசாலை அதிபர் ஆசிரியர்களின் முயற்சிகள் மெச்சத்தக்கவையாகவும்
அமைந்திருக்கின்றது.

Thursday, September 22, 2011

சாரம்

பொன்.காந்தன்



என் பாடலின் சுருதி எது
என் பாடலின் தாளம் எது
என் காதலின் கண்கள் எது
என் கால்களின் பாதை எது
என் கனவுகளின் வர்ணம் எது
இதுவரையான வாழ்வின் சாரம் இது

Saturday, September 17, 2011

தமிழ் பூகம்பம்

-பொன்.காந்தன்


பூமலர்ந்த தேசத்தில்
புயலடித்துப்போன பின்னே
சாக்குரலின் நினைவுகளோ
சதா மனம் வருத்த
பாதகரின் காலடிக்குள்
பட்டிணியும் பதட்டமுமாய்
கெட்டு வாழ்கின்ற
கேவலத்தை எண்ணியெண்ணி
நித்தம் வதைகின்ற
நிலத்தமிழர் நிலைகண்டு
கொட்டி முழக்கமிட்டு
கொதித்து குமுறிநின்று
கோலத்தமிழ் நிலத்தின்
குதூகலமாம் சுதந்திரத்தை
கொண்டுவர ஆங்கோர்
பொங்கு தமிழ் பூகம்பம்
முள்ளி வாய்க்காலில்
முடிந்த தமிழர்களின்
மூச்சின் கனவுகளை
எல்லை  தாண்டிநின்று
எழுதிவைப்பதற்கு
வல்ல தமிழர்கள்
வயிரம் ஆகிறார்கள்
வாசம் செய்வதற்கு
வண்ணத் தமிழ் மண்ணை
வசந்தக்காற்றுடனே
வல்ல உலகத்தார்
வந்து தருவதற்கு
உலகத்தமிழர்கள்
ஒன்றாகியியற்றுகிற
உயர்தவமாம் பொங்குதமிழ்
கல்லறைகள் ஏதுமற்று
காற்றவழியுறைகின்ற
சென்ற வழியெங்கும்
சிதறி மடிந்துவிட்ட
 தமிழர்களின்தாகத்தை
எங்கும் பொலியவைத்து
தங்கத்தாய் தாய் நாட்டை
தந்திடுக பொங்கு தமிழ்.

Friday, September 9, 2011

காந்தன்வர்ணம்

காந்தன்வர்ணம்

காந்தன்வர்ணம்

தாகம்



நெஞ்சோடுள்ள நெடுங்காதல் சொல்ல
பெண்ணாகப்பிறந்த பேரழகு தேடி
அந்நாள் தொட்டு அலைகிறேன் நான்
இந்நாளில் அந்த உண்மையை சொல்லி
என்னோடிணையும் நரையினை தடவி
ஏங்கினேன் இளைத்தேன்
முள்ளுடன் முகிழ்த்த மலர்களிலொன்றாய்
மோகத்தின் வேரில் சமர்ப்பணமாகும்-என்னுடன்
வந்த இதயத்தின் தாகம்

 

Saturday, September 3, 2011

தீராத புரட்சிக்காரி




-பொன்.காந்தன்

செங்காடி தீராத புரட்சிக்காரி
எரி மலைகளின் புறப்பாட்டை
மற்றும்
எல்லையற்ற தாகத்தை
இன்னும்
தன் இதயத்தை
எல்லோரது உதட்டருகில் வைத்து
சொல்லக்கூடிய செய்தியை
நினைவுபடுத்தியிருக்கிறாள்.
பெண்'சே'யாக

சிலைகளோடு
சில மேடைகளோடு
செங்கொடி அடங்கிவிடக்கூடியவள் அல்ல
வழியற்ற காலத்தின் வழியவள்
தமிழர்கள்
அவளுக்கு எதைக் கொடுக்கப்போகிறார்கள்
அவள் இன்னும்
பல இலட்சம் பேரையும்
பல்லாயிரம் ஆண்டுகளையும்
பல நூறு மாளிகைகளையும்
பல நூறு அஸ்திரங்களையும்
அப்படியே பொத்திப்பிடித்து
ஒரு சில கணங்களில்
காட்டிச்சென்றிருக்கிறாள்.
செங்கொடியும்
இருண்ட காலத்தின் உயர்ந்த பாடல்
என் தாய் செங்கொடியையும்
பெற்றெடுத்தாள் என்று நினைக்கும்போது
மகிழ்ச்சி
அங்கயற்கண்ணி வெடித்த போதும்
இப்படித்தான்  நிமிர்ந்து நின்றோம்.
அங்கயற்கண்ணிக்கு ஆணையிட
ஓரு அரசனாவது இருந்தான்.
செங்கொடிக்கு ஆணையிட யாரிருந்தார்
அதனால் அரசியாகியிருக்கிறாள் அவள்
செங்கொடியின் இறப்பில் மகிழவில்லை
பிறப்பில் மகிழ்கிறேன்
அவளின் மரணம்
தமிழ் தலைவர்களின் பலயீனம்
தமிழர்கள் இன்னும்
ஒன்றாதல் உணரா வெளிப்பாடு
செங்கொடிகளுக்காய்
தலைவர்கள் எப்போது
தீக்குளிப்பார்கள்
 

Friday, September 2, 2011

எருக்கலைகளின் காலம்



-nghd;.fhe;jd;


இக்காலத்தை
எருக்கலைகளின் காலம் என்று எழுதிவையுங்கள் நண்பர்களே!
ஒவ்வொரு தமிழனுக்குள்ளும்
எருக்கலை அடர்ந்து வளரட்டும்
சிறு வயதில்
எருக்கலைகளின் மலர்களில இருக்கும் ;மூக்குத்தியை
அணிந்து மகிழ்ந்ததுண்டு
ஆயினும் எருக்கலைகள் ஆழமாக என்னை
வசீகரித்ததில்லை
சில ஞாபகங்கள் இருக்கின்றன 
எருக்கலைகள் பற்றி
எங்கள் வீட்டில் ஆடுகள்
குட்டி ஈன்றபொழுதுகளில்
இளங்கொடிகளை ஒரு பையில் கட்டி
பின் எருக்கலைகளில் கட்டி விட்டதுண்டு
அநேகமாக ஊர் வழமை இது
எருக்கலைகளில் இளங்கொடிகளை கட்டினால்
அதிகம் மடிகளில் பால் சுரக்குமாம் என்பது அய்தீகம்

எருக்கலை பால் மரம்தான்
இருந்தபோதும் ஆழமாக அது;;
முன்பு என்னை வசீகரித்ததில்லை
அதற்குள் இருக்கின்ற ஆழங்கள் பற்றி
உண்மையில் உணரத்தவறிவிட்டேனோ
என்று மனம் அங்கலாய்க்கின்றது.
ஆத்மாக்கள் பேசிக்கொள்ளக்கூடிய
ஒரு உன்னத மொழியை
உணரும் வல்லமை
எருக்கலைகளுக்கு மட்டும்தான்
கைவரப்பெற்றதோ என்று
ஆச்சரியமுறுகிறேன்.
நண்பர்களே!
வெட்கத்தைவிட்டு
அச்சத்தை விட்டு
இருளின;;y; பெரும் சுவர்களில் மோதுண்டு
பிரகடனம் செய்கிறேன்
தமிழர்களின் இக்காலத்தை
எருக்கலைகளின் காலமென்று எழுதிவையுங்கள்.

எங்கள் சொர்க்கம்
கண்டக்கோடரிகளால் பிளக்கப்பட்டு
முத்துப்பரல்களும்
ஓம குண்டங்களும்
தர்ம சாத்திரங்களும்
புதையல்களும்
புனிதங்களும்
இன்பக்கலசங்களும்
ஒப்பாரி ஆற்றிலே மிதந்து போக
சதைத்துண்டங்களையும்
கட்டியழ முடியா
அகதி வெளியில் 
பாறுண்ட விருட்சத்தின் பாடலை
பாடிட நிர்ப்பந்தமான
எனது இனத்தின் ஏதோ ஒன்று செத்துநாறும்
காலத்தில்
எருக்கலைகளின் காலத்தை
நான் எழுதத்துணிந்தேன்.

ஒரு காலத்தில் நாம்
கண்ணீரும்
நம்பிக்கையும்
சத்தியமும் 
நெருப்பும் 
உண்மையும ;வேகமும்
காற்றும் கடலும் வரலாறும் கலந்து
கோயில்கள் கட்டினோம.;
எங்கள் இனம் மொத்தமும்
கட்டுண்ட கிடந்த கணப்பொழுது
அங்குதான் இருந்தது.
ஒவ்வொரு கல்லறையும்
ஒவ்வொரு மூலஸ்தானம்
கோபுரமாகக்கூட இருக்கலாம்.
வானமாகக்கூட இருக்கலாம்
மலர் மேனியாகக்கூட இருக்கலாம்
என்னால் சரியாக சொல்ல முடியவில்லை
அம்மா அற்புதமாகச்சொல்லுவாள்
அவள்கருவறையில் இருந்து வருகின்ற வார்தைகள் அவை.
அம்மாவின் பிள்ளை உரிமைக்களத்தில் குதித்தது தொட்டு
விடுமுறையில் பிள்ளை வந்து போவது ஈறாக
வெடியும் குண்டொலிகளும்
கேட்கும் நாட்களுடன்
பிள்ளை வித்துடலாக வந்த நாட்களுடன்
கோயில்களில் பிள்ளை விதைக்கப்பட்டு
கல்லறை எழுந்த காலம் வரை
அதன்பின்னும்....
அம்மாக்களின் எழுதமுடியாத கவிதைதான் அற்புதம்
அம்மா நல்லாச் சொல்லுவாள்
முள்ளிவாய்க்காலில் சாகாமல்
இருந்திருந்தாy;.
நானும் சிறிது சொல்ல முடிந்தது
என் தங்கச்சியையும் ஒரு நாள்
அப் புனித கோயிலில் விதைத்து வந்தோம்.

வரலாறுகளில்
இன்னொரு தேசத்துள்
படைகள் புகுத்தன
போர் செய்தன.
என்று படித்திருக்கிNறேன்.
எனது மண்ணிலும்
சிங்களப்படைகள் புகுந்தன என்றும்
பிரபாகரனை வெற்றி கொண்டன என்றும்
என்றும் ஏராளம் செய்திகள் வந்துவிட்டன.
நிச்சயம்
அது பொய்
மிருகங்கள் போர் செய்ததற்கான சாட்சியங்களே அதிகம்.
ஒரு மனிதன் இன்னொரு மனிதனின் கல்லறையை உடைப்பானா
நிச்சயமாக இல்லை
எவன் கல்லறையாக இருந்தாலும்
எவ்வளவு கொடுர எதிரியாக இருந்தாலும்
என் தங்கச்சி உண்மையாக ஒரு செவ்விரத்தம்
மலரை என்றாலும்
காணிக்கை ஆக்கியிருப்பாள்.

கனகபுரம்  போகின்றபோது
துயிலுமில்லத்தை ஒரு முறை
திரும்பிப்பார்ப்பேன்
என் தங்கச்சியின் உடைத்துக்கிளறப்பட்ட
கற்களேனும்
எருக்கலைகளின் கீழ்தெரிகிறதா என அங்கலாய்க்கும் மனம்
தினமும் மனங்கள் அங்கலாய்த்துச் செல்லும் வீதியது
தினமும் மனிதர்கள் மனங்களால் மட்டும் மலர்கள்
தூவிச்செல்லும் வீதியது.
பார்க்கும் இடமெங்கும் சிங்கள சிப்பாய்களின்
அரண்கள்.
யாருக்கு யார் காவல்?
ஒன்றும் இன்றுவரை தமிழர்களின் மனங்களுக்குள்
வெற்றி கொண்டு ஒரு காவலரணையேனும்
அவர்களால் அமைக்க முடியவில்லை.
ஏனெனில் இது எருக்கலைகளின் காலம்
முன்பெல்லாம் எருக்கலைகள் எங்கெங்கோ வளரும்
இப்போது கல்லறைகள் உடைக்கப்பட்டு
புனித உடல்கள் அவமதிக்கப்பட்ட இடங்களில்தான்
வளர்ந்திருக்கின்றன.
எருக்கலைகளை நான் இப்போது அதிகம் நேசிக்கின்றேன்
எருக்கலைகள் கோபத்தின் மொழியாக
சாபமிடுவதன் அடையாளமாக இருக்கலாம்
தமிழர்களின் வரலாற்றில்
இது எருக்கலைகளின் காலம்
எழுதிவையுங்கள் நண்பர்களே!