Sunday, July 17, 2016

பழைய சொற்கள்

இன்று நேரம் இரவு 11 மணி 
ஜெட் விமானங்கள் போய் கொண்டிருந்தன வானில்
யாருடையதோ தெரியவில்லை 
வெளியே போய் பார்த்தேன் 
பழைய சொற்கள் நினைவில் 
பங்கர்
பரா லைட்
போட்டிடான்
ஐயோ
பிள்ளைகளை பார்த்தேன்
ஆழ்ந்து தூங்கி கொண்டிருந்தார்கள்
புத்தக பைகள் சுவரில் தொங்கி கொண்டிருந்தன .......

தீர்க்கமற்ற பாடல்



காற்றில் அலைந்து சென்றேன்
கடதாசியாய்
துண்டு பிரசுரமென
ஒருவன் பார்த்தான் கிழித்தான்
இன்னொருவன்
பொறுக்கி பத்திரப்படுத்தினான்
மலராய் ஒரு செடியில்
இருந்து பார்த்தேன்
சம்பிரதாயங்கள் பறித்துச் சென்றன
ஒருநாள் வாழ்க்கையும் இல்லை
தெரு நாயாய்
எல்லா வீதியும் திரிந்தேன்
அங்கங்கு நக்கினேன்
ஏகப்பட்ட கல்லெறிகள்
காயங்கள்
ஏகப்பட்ட கேள்விகள்
தலைப்புக்களில் நான்
தீர்க்கமற்ற
பிறவியின்அச்சம் பரவுகிறது

யாழ்ப்பாண பஸ்



பரலோகம் போகும்
பாய்ச்சலில் வந்த
ப துளை யாழ்ப்பாண
பஸ்ஸினை மறித்து
இளம்பெடியொண்டு
இயக்கச்சியடியில்
ஏறினான் உள்ளே
இலங்கை வரைபடத்தின்
ஆறு நதிகள் போல்
தம்பி தலையிலும்
கோடு வளைவுகள்
உச்சி எது எண்டு
ஊகிக்க இயலாதபடி
தலையை பிச்சு எடுப்பதர்க்கு
குயில் அஞ்சு கொடுத்திருப்பான்
அப்பால் இருக்கையில்
ஆவரங்கால் போகும் அப்புவுக்கு
இவன் மீதொரு கண்
தன் பேரனின் நினைவு வந்திற்றோ
இல்லை
அரை மீதிருந்து தரை மீது
விழ வழுக்கும் இவனின்
அளவில்லா ஜீன்ஸ் மீது
அடிக்கடி தம்பி
வழுக்கி விழும் ஜீன்சை
இழுத்து விடும்
புதிய பண்பாட்டில்
ஆப்பிள் ரகமொன்றின்
ஆரஞ்சு நிறம்
பஸ்சுக்குள் இருப்போரின்
பார்வையை திருப்புகிறது
தம்பியோ தன் பாட்டில்
காதுக்குள் வயர்விட்டு
கைத்தாளம் போடுகிறான்
வரணி போறதுகள்
கொடி காமத்தில்
குதித்து விட
குங்கும் பூ நிறத்தில்
பிறப்பு கொழும்பா கொடி - காமமா
என அறிய முடியாதபடிக்கு
அலங்கார தேவதையாய்
ஏறி ஒன்றுஅலமந்து நிக்க
தம்பி முகத்தில் ஒரு தவிப்பு
கொஞ்ச நேரத்தில்
எங்க என்று கதையை தொடக்கி
கைதடிக்குள் காதலுருவாக்கி
அடுத்த பஸ் தரிப்பில்
கைகோர்த்து இறங்கி
காட்டிவிட்டான் புதிதொன்று
வேர்த்துக் கிடக்கிறது
பண்பாடு பிறந்த
பழைய பூமி

மரம்

ஒரு சிறு நேரம் கிடைத்தது 
முற்றத்தில் ஒழித்து பிடித்து விளையாடிய சிறுவர்களிடம் 
நானும் வாறேன் என்றேன் 
ஒரே சிரிப்பு அவர்களுக்கு 
ஓடி போய் 
ஒரு மரத்தின் பின் ஒழித்தேன்
நான் உன்னிடம் ஒழிக்கலாம்
என்றது மரம் !

ஓடிப்போனவனின் கதையிலிருந்து



ஓ! 
டாட்ரா கானகங்களே
ஹோ வன் லங்
ஹோ வன் தானை
வெளியே காட்டினீர்
எமக்காகவுமா
எமக்கும்
இரண்டு பேனாக்கள் தருகிறாயா
மூர்க்கத்துடன்
எதிர்த்து நின்றதும் வியட்நாம்
போருக்கு பயந்து
கைக்குழந்தை ஹோவன் லங்கை ஏந்தியபடி ஓடிய
ஹோவன் தானும் வியட்நாம்.
வியட்நாமை எழுதும் இரண்டு பேனாக்கள்
டாட்ரா முழுக்க
ஊரிழந்தவனின்ஏக்கம்
மனச்சாட்சிகளுக்கு இடையில்
நடந்தபோரில் இறந்து போன
ஹோவன் தானின் பிணங்கள்
டாட்ரா நிரம்ப
ஓடிப்போனவனை
வியட்நாமின் வீரர்களின் கல்லறைகள்
எழுந்து நின்று பார்க்கின்றன
ஹோவன் தன்
உணர்ச்சி மேலிட நிற்கின்றார்
ஹோவன் லங்
கானகங்களை பார்க்கின்றார்
ஓடிப்போனவனின்கதையில் இருந்தும்
தொடங்குகிறது ஒரு விடுதலை கீதம்
குறிப்பு...
வியட்நாமின் போர்க்காலத்தில் காட்டுக்குள் தன் கைகுழந்தையுடன் ஓடி தந்தையும் மகனும் நாற்பது ஆண்டு கழித்து சொந்த ஊர் வர நேர்ந்தபோது.

வானம்



அவ்வப்போது பறக்கும் பட்டாம்பூச்சிகள்
வாலறுந்து
மின்சாரக் கம்பியில் தொங்கும் பட்டங்கள்
டவர்களின் உச்சியில் ஒளிரும்
மஞ்சள் சிவப்பு வெளிச்சங்கள்
திடிரென எழுந்து பறக்கும் கடதாசி
குளத்து வெளியில் காயும்
சலவைத் தொழிலாளியிடம் கொடுத்த
நம் எல்லோரதும் பல வர்ண ஆடைகள்
திருவள்ளுவர் சிலையின்
தலையிலிருக்கும் காகம்
மணிக்கூட்டுக் கோபுரத்தில் உச்சியில்
கூடு கட்டிக்கொண்டிருக்கும் புறாக்கள்
காதலிக்காக
கைக்குள்
பொத்தி வைத்திருக்கும் மின்மினி
வானம்
என் கையிலிருந்து தொடங்குகிறது

கடை


காற்றுக்கடை ஒன்று திறந்தேன்
நல்ல வியாபாரம்
வரிசையில் நின்று
வாங்கினர் புயற்காற்று
இன்னும் பல நூறு ஓடர் செய்துள்ளது
புயற்காற்றுக்குத்தான்!
ஒரு பதினாறு பதினேழு பருவங்கள் சில
தென்றல் காற்று வாங்கிச்சென்றன
வயற்காற்றின் விலையை
ஒரு சில விசாரித்துச்சென்றுள்ளன
டயானாவின் கூந்தலை வருடிய காற்று
கிளியோபற்றாவின்
கன்னத்தை தொட்ட தென்றல்
நயன்தாராவின் புன்னகையில் குளிர்ந்த காற்று
சமந்தாவின் துப்பட்டாவை தீண்டிய காற்று
எமி ஜாக்சனின் இடையை தழுவிய காற்று
ஆஸ் மலைக்காற்று
இப்படியும் கேள்விகள் தொடர்கின்றன.
நீண்ட நேரம் துலாவி விட்டு
காந்தி பெரியார் சேகுவராவின்
கடைசி மூச்சிருக்கா என கேட்டு
எங்காவது ஒன்று
அடிப்பெட்டிகளை கிளறவைக்கின்றன
ஒரு பக்கத்தில்
மணலாற்று காற்று
கோணமலைக்காற்று
இரணைமடுக்காற்று
கற்சிலைமடு காற்று நந்திக்கடல் காற்றையும்
அடுக்கி வைத்து காத்திருக்கின்றேன்
புதிய காற்றொன்றை நோக்கி.....

வீடு




பாதிக்கப்பட்டோர்க்கு பரிகாரமாய்
பக்கத்து நாடு தந்த பணத்தில்
ஊருக்குள் ஒரே மாதிரி வீடுகள்
ஒன்று ஒரு பத்து லட்சம் வரும்
ஒரு சதமும் கூடாது
கதவு தொட்டு கக்கூசு வரை
எல்லா ம் ஒரே அளவு
கந்தப்பு வீடெது
கயிலாய பிள்ளை வீடெது எண்டு
கண்டு பிடிக்க கால் நாள் கழியும்
ஒண்ட முன்னுக்கு நீட்டி
மற்றதை பின்னால் பெருப்பிச்சு
இன்னொன்றை வாசலை மாத்தி
எழுப்பி பதிச்சு கட்டியிருக்கலாம்
கட்டியிருக்கலாம்
அகட்டினதுக்கு ஒரு சன்னதம்
நீட்டினதுக்கொரு சன்னதம்
ஆடியிருப்பார் ரீ ஓ
வேண்டாம் வில்லங்கமெண்டு
மகிளிர் கல்லூரி சீருடை போல
எல்லாம் ஒரே மாதிரி
இ டபம் சிங்கம் மீனம் மிதுனம்
கன்னி துலாம் எல்லாம்
இங்கதானே இருக்குது.

பாதம்



நேற்று தாய் வீடு சென்றபோது
நாற்பது ஆண்டுகளுக்கு முன்
கட்டப்பட்ட கிணற்றின்
வாசல் படியில் பதிந்திருந்த
குழந்தைப் பாதங்களின் மேல்
கால் வைத்தபோது
பின்னாளில் களத்தில் வீழ்ந்த
அயல் வீட்டு குட்டியின் குரல் கேட்டு
விளையாட சென்றுவிட்டன.

வல்லாரை




மரக்கறி வாங்க
மனுசி அனுப்பி விட்டாள்
மதாளித்த கீரை
மனசுக்கு விருப்பம்
விசாரித்துப் பார்ப்போமென
வீற்றூட் கரட் கத்தரிக்காய்
முள்ளங்கி வெங்காயம்
வாங்கோ வாங்கோவென
வரிசையாய்
அழைத்த குரல் கேட்டு
அங்கு போய்
வெண்டைக்காய் தக்காளி கரட்
கையிலெடுத்து
நல்லதோ என்றேன்
என்ன கதையிது
எல்லாம் தம்புள்ள
தரம் என்றான் நம்மாள்
முந்தி ஒரு காலத்தில்
முத்தவெளியில் கூடும்
சனி புதன் சந்தையிலே
தென்னக்கோன் லொறியில் வந்து
கப்பல் மொந்தன் கதலி
கறிமிளகாய் கத்தரிக்காய்
என்ன விலை முதலாளி
இறக்கி தாங்க விலையை
எல்லாத்தையும் ஏத்திறமே
என்றுதானே நின்றார்
பவளத்தின் தோட்டத்தில்
படைபடையாய் காய்த்து
பாகற்காய் கூட
முன்பொரு கால் இனித்ததெனக்கு
இன்றென் இதயத்தில் ஏதோ வலி
சந்தை வாசலுக்கு வந்து
எங்கள் வாய்க்காலோரத்திலும்
வயற் கரையிலும்
தேடித்திரிந்து பிடுங்கி
பிடியாய் கட்டி
காலை முதல் காய்கின்ற
காது கிழிந்த கிழவியிடம்
வாங்கினேன்
இரண்டு பிடி வல்லாரை
இன்று நம் பொருளாதாரம்.

Wednesday, July 6, 2016

சுயநலம்



மெல்லிடையாளாய் உனைக்கண்டேன்
மழை மேகத்திரள் போல
கன்னியுன் கூந்தலுக்கு
ஓர் கவிதை சூடவும்
ஏனோ மனம் ஒப்பவில்லை
வெண்ணிலவாக்கி உன் விழியில் நீந்தும்
எண்ணிலா மீன்களுக்கும்
ஏனோ நான் வலை வீசவில்லை
விண்ணிலா மண்ணிலா நீயுதித்தாயென
ஒரு வினாக் கூட நான் எழுப்பவில்லை
இன்பநாள் அருகி
ஏறுபோலொரு காளை பற்றி
தேனிலா காணும் திகட்டாத
நாள் பொழுதில்
இணையராகி நெருங்கி
நீ திரிய கண்டுநான்
உனை கடுகளவும் நினைத்தில்லை
இன்று நான் உனக்கு எழுதுகிறேன்
ஏன்
அது சுயநலம்தான்
முந்தநாள் உன் மேனி
முன்னே பெருத்து
முகமும் கொஞ்சம் மொளுமொளுத்து
சொன்னதுபார் சேதி
கர்ப்பமாய் இருக்கிறேன் என
கரம் பற்றியவனுக்கில்லா எழுச்சி எனக்கு
மெல்லமாய் நட
உள்ளத்தில் நல்ல உவகை கொள்;
கள்ளமாயும் கனக்க சாப்பிடு
முடிந்தால் பொன்னியின் செல்வனை
கொஞ்சம் புரட்டிப்பார்
பூவரசம் பூவை ரசி
சங்கிலியன் தோப்பு பக்கம் போய்வா
பாரதியின் பாடல்கள் கேள்
கணணியில் இருந்து விளையாடு
என்னவோ எனக்குத் தெரியாது
உன்னை நான் இப்பொழுது
பெண்ணென்று நினைக்கவில்லை
எம் மண்ணை நிரப்பப்போகும்
நல்ல மழையென பார்க்கிறேன்
நல்ல தமிழ் பிள்ளை பெற்றுத்தா
பெற்றுத்தா பெற்றுத்தா பெற்றுத்தா!

எனது நாள்



இன்று 
உங்கள் பிறந்த நாளாக இருக்கலாம்
உங்கள் காதலை சொன்ன நாள்
மற்றும் ஏமாந்த நாளாக கூட இருக்கலாம்
உங்கள் திருமண நாள்
மற்றும்
கனவுகள் தொலைந்த நாளாகவும் இருக்கலாம்
நீங்கள் பட்டம் பெற்ற மற்றும்
வேலைக்கு அலையத் தொடங்கிய
நாளாக கூட இருக்கலாம்
உங்கள் நேசத்துக்குரியவர்கள்
உயிர் பிரிந்த நாளாக கூட இருக்கலாம்
மன்னித்துக் கொள்ளுங்கள் என்னை
இன்று
சிறு வயதில் முதன்முதலில்
நான் வானவில்லை கண்ட நாள்
அது எங்கே முடிகிறதென
எட்டியும் பார்த்திருக்கிறேன்

யூலை 5




மூக்குக்கண்ணாடியோ
கண்ணாடிக்குவளையோ
கைத்தொலைபேசியோ
கைதவறி விழுகின்றபோது
பதறிப்போகின்ற எங்களின் மத்தியில்
நேற்று
உயிர் குவளையை வெடிக்கச்செய்தீர்கள்
சாக்கடையால் நிரம்பியிருக்கும்
எங்கள் வாழ்வின் மத்தியில்
உன்னத்தை எப்படி
எங்கே வைத்து அழகு பார்ப்பது
வாய்நிரம்ப எப்படி
அதை பாடுவது
கைபிசைந்து நிற்கிறேன்
எரிமலைக்குழம்புகள் மேல்
மயிலிறகால் எழுதப்படும்
இந்த புனித புராணத்தை
சீண்டப்பட்டுக்கொண்டிருக்கும்
காற்று வாங்கிக்கொண்டிருக்கும் காதலர்களோ
பனிமழையின் கீழ்
உதடு வெடித்துக்கொண்டிருக்கும் ஏதிலியோ
முடிவற்ற பிரிவுத்துயரத்தில்
பிறக்கும் சிலம்புச்சாலைகளோ
எழுதி முடிக்கும் என்பது நம்பிக்கை
வணங்க முடியாதவர்களின் புலம்பல்களாலும்
குமுற முடியாதவர்களின் மௌனத்தாலும்
இந்நாள் நிறைந்திருக்கிறது.....
பௌர்ணமியை மறைத்தெழுகிற வரிகள்
பிறைகளின் சாபங்களால் நிறைகிறது

பேய்கள்



ஒரு வித நிசப்தம்
சின்னாக்கள்
தள்ளிப்போங்கோ
ஆளாளுக்கு ஒரு பார்வை உறுக்கல்
பந்தத்துடன்
கறுத்த பருத்த ஒருவர்
அடுத்து கத்தியுடன் மற்றவர்
நடுவில்
உருசிபட ஆக்கிய
ஆக்கியகோழி ஆடு நண்டு இறால் கணவாய் பொரியல் துவையல்
பிட்டு இடியப்பம்
பழங்கள் அறுவகை பாக்கு வெத்திலை
பீடி சுருட்டு அரைப்போத்தல் சாராயம்
பெட்டியில் வைத்து
ஒற்றைப்பட ஒரு கூட்டம்
சந்திக்கு வந்து
பேய்க்கு படைத்து விட்டு திரும்புகையில்
காத்திருந்த நண்பர் கைவரிசையில்
கைக்கு வந்தது படையல்
உண்டு மகிழ்ந்தோம்
இன்றுவரை
அந்த இனிய நினைவுகளுடன்
மண்ணில் பல பேய்கள்
சந்திக்கழிப்புக்கள் கண்டால்
ஒரு நமட்டு சிரிப்புடன்.........

செம்மண் கறுப்பு



செம்மண்
எப்பொழுது பார்த்தாலும்
இச்சை தருவது
எதையாவது விதையென்று
எழுச்சி கொள்ளவைப்பது
தக்காளி வைத்துப்பார்
தங்கச்சங்கிலி தருவேன் என்றும்
பொயிலை வைத்துப்பார்
புதிய வீடு கட்டுவாய் என்றும்
வெங்காயம் வைத்துப்பார்
வெளிநாட்டு வாழ்க்கைதான் என்றும்
ஆசைதூண்டுவது போலிருக்கும்
ஓ! உண்மைதான்
கத்தரி வைப்போம் காடுபோல்
நடுவே கஞ்சா நடுவோம்
பக்கத்திலேய விற்றுக்
கோடி சம்பாதிக்க
காலம் கனிந்துளது இன்று என
தன் பத்தினியாள் கழுத்தில்
பளபளக்கும்
பத்துப்பவுண் தாலியை
பார்க்கிறது இக்கால பெருச்சாளி!

அதிஸ்டம்



பிரபல கணித வாத்தியார்
பென்சனியர் பேரம்பலம் எழுதுவது
வரம்பு கட்டி
நான் வளர்த்தெடுத்த
வணக்கத்துகுரிய மாணாக்கரே
எங்கெங்கோ உள்ளபோதும்
என் இதயத்தில் உள்ளீர்
உள்ளத்தைவிட்டு உதிர்கிறேன்
உங்களை நான் உயர் வரமென்பேன்
என் கைக்கடிகாரம் கழற்றி கறுவி
உங்கள் கன்னத்தில் மின்னிய
என் கைகளை ஒருமுறை பார்க்கிறேன்
எண்ணத்தில் உயர்ந்த நீங்கள் எழுதப்பட்டுள்ளீர்கள்
மடக்கை மனனத்தில்
தடக்கிவிழுந்த உங்களுக்கு
இடக்கை வலக்கை என்று
என் பிரம்பால்
தழும்புவர தாக்கியதும்
பின் ஓடிவந்து நீங்கள்
சேர் என்றழைக்க என் மனம் இளகியதும்
ஏன் அடித்தேன் என்று
இருத்திவைத்து உங்களுக்கு
மனம் திறந்து பேசியதும்
கடைசிவரை உங்கள்
தாயும் தந்தையும்
சேர் உங்களை நம்பித்தான்
இராப்பகலாய் இவர்களுக்காய்
ஓடாய்த்தேய்கிறோம்
அடித்தாலும் உதைத்தாலும்
ஏன் என்று கேட்கோம்
உருப்படியாய் இவர்களை
உய்வித்தால் போதுமென்பதும்
இப்பொழுது நினைத்தால் இனிக்கிறது
எப்பேற்பட்டது அந்த உறவு
காக்கட்டையில் என்னை காணும்போதே
தெருவில் ஒதுங்கி நின்று
வணக்கம் சொன்ன வளர்ப்பினில்
இன்று உங்களை வைத்தியனாய்
வாத்தியாராய் எக்கவுண்டன் எஞ்சினியராய்
சிந்தனை செயற்பாட்டாளராய் காணும்போது
வேளைக்கே நான் வாத்தியாராயும்
நீங்கள் மாணாக்கராயும் இருக்க வாய்த்தது
இப்பிறவி அதிஸ்டம் என்பேன்!

வேதம்




தெய்வங்கள் விரும்பிய உணவை
நாம் அறிந்திருந்தோம்
கடவுளருக்கு
எந்த ஆடை அழகென்றும்
அளவு அழகு பார்த்து அறிந்திருந்தோம்
இதயம் தொடும்வரை
தெய்வங்களோடு பேசிபேசி
அன்பு மொழியொன்று ஆக்கியிருந்தோம்
நினைத்து நினைத்துப் போனோம்
நாங்கள் போகும்போதுதான்
அந்த ஆலயங்களில் மணியொலி
அந்தக்கடவுளருக்கு பள்ளியெழுச்சி
நெக்குருக கசிந்து நின்றோம்
மூலஸ்தானத்தையும் தாண்டி
எமக்கு ஒரு இடம்
தெய்வங்கள் தந்திருந்தன
ஆரத்தழுவி
அந்த முற்றத்தில்
முழுநாளும் நாம் பூஜை செய்திருந்தோம்
அந்த ஆலயத்தில்
நாங்கள் எல்லோரும்அர்ச்சகர்கள்
கற்பூர ஆராத்தி காட்டினோம்
கொன்றையிலை
புன்னையிலை
வில்வமிலை
வேப்பிலை
மாவிலை வரிசையில்
எருக்கலையை சேர்க்கிறேன் நான்.......
எருக்கலை மாடத்தை வணங்கிய முனியென
வரலாறு அமையட்டும்....

Sunday, July 3, 2016


பெருங்கோபுரம்





ராஜராஜசோழன்
பெருங்கோபுரத்தை கட்ட
எத்தனை பேர்
எத்தனை நாட்கள்...
எப்படிகட்டினார்கள்
படித்ததுபோதும்.
பெருமையடித்து பீற்றியதுபோதும்
ராஜராஜசோழனின் பேரனின்
பல்லாயிரம் கல்லறைகளை
உடைத்தெறிந்தார்கள்  எப்படி
யார் உடைத்தார்கள்
எங்கு உடைத்தார்கள்
தேடுங்கள்
கண்ணீர்விடுங்கள்
கோபப்படுங்கள்
ராஜராஜசோழனின் கோபுரத்தையாவது
காப்பாற்றவேண்டாமா

வரலாறு









               சிலர் கடவுளும் தாமும்
              ஒரே காலத்தவர்கள் என்று மகிழ்ந்தார்கள்.
             வேறு சிலர்
              உலகத்தின் முதல் வார்த்தை
             தம்முடையதென்று பெருமிதப்படுகின்றார்கள்.
இன்னும் கிறிஸ்த்துவுக்கு முன் பின் என்று
உலக மாந்தர்கள்
தமக்கு வரலாற்றுக்குறிப்பு வைத்துக்கொள்கிறார்கள்.
நம்மில் சிலருக்கோ
நேற்று நடந்ததே ஞாபகத்தில் இல்லை
இப்படி யாரும்
உலகத்தில் யாரும் தடுமாறியதில்லைப்போல்..

துரதிஸ்டம்








நங்கூரமிட முடியவில்லை
துறைகளில் வரவேற்க யாருமில்லை
எங்கோ கரைகளில்
ஒதுங்கின்றது நம் கண்ணீர்.
குமுதினிப்படகாய்
கிளாலிக்கடலின் இரவுப்பயணங்களாய்
இன்னமும் நம்துயர்
நவுறுதீவிலும் பப்புவாநியுகினியிலும்
ஒதுங்குகின்றது ஒரு சொட்டுசூரியனுடன்..
அகதியாய்
சொல்லக்கூடியது இப்போது எதுவாய் இருக்கிறது
இராமேசுவரத்தையும் கடந்துபோவதுதான்
சோழர்பரம்பரையின் துரதிஸ்டம் என்பதை தவிர...

உன்னைப்போல்






எவளோ ஒருத்தி பேரழகியென்று
யார்யாரோ பிரமிக்கும்போது
அவள் உன்னைப்போல இருப்பாளா என்று கேட்டேன்.
உன்னைப்போல அழகிக்காக
ஏங்குகிறது நிலம்.
நீ அழகாய் இருந்த கணத்தில்
நீ  அழகாய் நடந்த நிலத்தில்
நீ அழகாய் பேசிய வார்த்தைகளோடு
ஒரு ஓவியத்துக்கும்ஓவியனுக்குமான துாரத்தில்
நானுமிருந்தேன்.
நான் பிரமித்த நாட்களில்
சொர்க்கத்துக்கு சாட்சியாய் நீயே இருந்தாய்
என் நிலம் இழக்க விரும்பாததது உன்னையும்தான்.
உன்னைப்போல பெண்கனை ஆண்கள் மணக்க விரும்பியதை
என் தெருக்களில் நான் அறிவேன்.
துரியோதனர்களிடம் நீ சிக்காதிருக்க
இதிகாசம் ஆசைப்பட்டது.
நந்திக்கடலோரத்தில்
உன்னை மான் போல துரத்தி
மலர்போல பறித்து
மயிலிறகாய் பிடுங்கி
பெரு வாய் பிளந்த   கொடூர மிருகங்கள்
உன்னை பங்குபோட்டுக்கொள்வதில்
நிச்சயம் ஒரு போர்  செய்திருக்கக்கூடும்.
உன் துயரில் இருந்து ஆறுதல் பெற
நீதான் வரவேண்டும்.
ஒருகோடி காதல்வரிகள்
உனக்கு அஞ்சலியான துயர்
பேரழகிகளை கண்ட எந்த கவிஞர்களுக்கும் வராதிருக்கட்டும்.

ஒரு ஊரின் நாட்குறிப்பு !






ஏரிக்கரையில்
படுவான்கரையில்
சூரியன்
மொய்ப்பதாக
அங்கு
வேர் வாசம்கொண்ட மலர்கள்
நோவாவின் பேழைக்கு
விண்ணப்பித்தன
பி.பி.சி காற்றில்.

தூளிக்கும்
ஊஞ்சலுக்குமான கயிறுகள்
தூக்குக்கயிறாகிறது
மீன்பாடுகிறது
தேன் நாட்டில்.

அரிதாரத்தோடு
அதிகம் பழக்கப்பட்டவர்கள்முன்
ஒட்டுப்புன்னகைகள்
எப்படி செல்லுபடியாகும்.

கறவைகள்
மடிநொந்து அலறவும்
தேன் கூடுகள்
வீங்கிப்பெருத்து
நிலத்தில் விழுந்து சிதறவும்
வரம்புகள்
புற்களில் மறையவும்
வசந்தன் பாட்டுக்கள்
வாயிழந்து போகவும்
ஒரு
ஊரின் நாட்குறிப்பு
கனக்கிறது
செருகப்பட்ட வாசகங்களால்.

வர்ணக்கொடிகளோடு
முகவரி இழந்த ஊருக்கு
அணிவகுப்போரே
புண்ணிருக்கும் இடத்துக்கு
காகங்களாய்
போவதென்ன!
முகங்களொடு
பேசத்தெரிந்தவர்கள்தான்
முண்டியடிக்கின்றார்கள்
இதயங்களொடு
இரண்டறக் கலக்கத்தெரிந்தவர்கள்
உலக சிம்மாசனங்களில்
எங்கேனும்
எழுந்தருளியுள்ளாரா!


இதுவரை
கண்ணை மூடிக்கொண்டு
காடுகளில்
தேனெடுத்த தேவதை
நேற்று
தாந்தாமலையில்
உடலெல்லாம்
கண்திறந்து அழுதாள்
சிங்கத்துக்கு
அவர்கள் பிறந்த
உண்மையை
நகங்கள்
மகாவம்சமாய்
அவள் உடலில் எழுதியிருந்தன.

ஏரிக்கரையில்
வாகரையில்
நிலவு நித்தியமாவதாக
அங்கு
மெழுகுதிரிகள்
நோவாவின் பேழைக்கு
ஏங்கித் தவிக்கின்றன

இன்றைக்கும் நாளைக்குமாக !






இது எமது கடைசிப் போசனமாக இருக்கலாம்
இதை எப்படி உண்ணவேண்டும் என்பதற்கு
எங்கள் ஒவ்வொருவருக்கும்
இதுவரை இல்லாத சிந்தனை தேவையாய் இருக்கிறது.
முன்னைய பொழுதுகளில் இதுவும்
பற்றாக்குறையான
புரட்சிக்காரர்களுக்குரிய பழஞ்சோறுதான்
ஆனாலும்
இதை பிசைகிற விரல்கள் ஒவ்வொன்றும்
பேனாக்களாக இருக்கவேண்டியது
நமது வாழ்வின்
இறுதிப்பெரும் உச்சரிப்பாக இருக்கும்.



கவளம் ஒவ்வொன்றுக்காகவும்
உதடுகளைத் திறக்கிறபோது
முகங்களை முகங்கள் பார்க்காமல்
இருந்துவிடப்போவதில்லை
நாம் எத்தனை சவால்களை
ஆட்டிவைத்தவர்கள்.
ஆனால்
இக்கணங்களை ஏனோ
எம்மால் எதுவும் செய்யமுடியவில்லை.
பிரிவின் வரவேற்பறையில் இருந்துதான்
நாம் உணவருந்துகிறோம்



இங்கேதான்
வாழ்வின் மிக ஆனந்தமான கணங்களை
உருவாக்க முடியும்.
இக்கணத்தில் வருகின்ற சிரிப்புக்கும்
வராத அழுகைக்கும்
சவால் நிறைந்த மனிதர்களாகிய நாம்
சவால் விடாதிருப்போமாக.
ஆனால்
எமது பிணம்கூட
பூமிக்கு சவால் நிறைந்ததாக
நீட்டி நிமிர்ந்து படுத்திருக்கவேண்டும்.



எமை எரிக்கும் தீ கூட
தோற்றபடி எரியவேண்டுமென்று
நினைக்கும் பக்குவம் உடையவர் நாமெனில்
இந்தக்கடைசிப் போசனம்
எவ்வளவு இனிப்பானதாக இருக்கும்.
நண்பர்களே நண்பிகளே
இந்தப்பொழுதுகளில் எமது உறுப்புகள் எல்லாமே
வார்த்தைகளுக்காகப் படைக்கப்பட்டவை.

நமது கடன் !


















வீட்டில் வளர்த்த நாய்க்குட்டி
ஆடு செத்ததற்காய்
விம்மி அழுதிருக்கிறேன்.
மாட்டினை கையாலும்
பூனையின் மேனியை காலாலும்
வருடிவிட்டிருக்கிறேன் சிறுவயதில்.
இப்போது நான் ஒரு குழந்தைக்குத் தந்தை.
இப்போது
நாய்க்குட்டிக்காக
ஆட்டுக்காக அழுவதில்லை
ஆனால்
நிச்சயமாக
அவைக்காக அழுது
கல்லறை கட்டி கும்பிட்டிருப்பேன்
என் காலடியில்
என் ஒவ்வொரு வயதில்
என் மனிதர்களின் மரணங்கள் மலியாதுவிட்டிருந்தால்.


இன்று காலையும் அரசின் விமானங்கள்
எங்கள் கிராமத்தின் மேல் சுற்றின
சிலர் பதுங்கு குழிக்குள் போனார்கள்
பலர் வெளியில் நின்று வானைப்பார்த்தார்கள்
சிலர் தெருவிலே
வழமைபோலவே போய்க்கொண்டிருந்தார்கள்
குண்டுகள் வீசப்பட்டன
கிராமத்தின் ஒருதிசையில் புகைமண்டலம்
சிலர் காயப்பட்டு தெருவால் வேகமாக கொண்டுசெல்லப்பட்டார்கள்
எத்தனைபேர் செத்தார்கள்
பலருக்கு அந்தக்கணக்குத் தான் தேவையாய் இருந்தது.


எனத மனிதர்கள்
நான்
எவ்வளவு மாறிவிட்டோம்
பெருமிதப்படுகின்றேன்.
முடியும்
இந்த மரத்துப்போன எங்கள் மனசால்
எமது உரிமைகளை
மிக விரைவில் யாரிடம் இருந்து
பெற்றுக்கொள்ள முடியும்.
அரசால் எங்கள் மனிதர்களின் மரணங்கள் மலிய மலிய
மரத்துப்போன எங்கள் மனசால்
முடியும்
நாம் நினைக்கின்ற எல்லாவற்றையும் சாதிக்க முடியும்.


சிலவேளைகளில்
அரசின் குண்டுவீச்சில்
மாடுகளும் ஆடுகளும்
நாய்களும்
சிதறிச்செத்தன.
சொல்லிச் சிரித்தார்கள் எம் மனிதர்கள்
நானும் தான்.
முடியும்
எல்லாம் முடியும்
மரத்துப்போன இந்த மனசால்.
எமக்கான எல்லாவற்றையும் கொண்டுவரமுடியும்
எல்லாம்
எங்கள் குழந்தைகளின் கண்ணில் படாதபடி.


றோசாப்பு ஏன் சிவப்பாக இருக்கிறது என்ற
என் குழந்தையின்
வாழ்வின் முதல் கேள்வியில்
என்னுள் ஆயிரமாயிரம் முட்கள் தைத்தன.
எங்கள் குழந்தைகளின் கண்களை
பலமுறை பொத்தவேண்டியவர்களாய் இருக்கிறோம்.
சிலவேளை
எங்கள் முகங்களையும் பார்க்காதபடி
ஆனாலும்
எங்கள் முகங்கள் எங்களுக்கு மட்டுமே.
நியாயமாக இருக்கட்டும்
இந்த முகத்தை வைத்துக்கொண்டு
முடியும்
இழந்த எல்லாவற்றையும் கொண்டுவரமுடியும்
எங்கள் குழந்தையின் கண்ணில்
நாய்க்குட்டிக்காகவும்
ஆட்டுக்காகவும் கண்ணீரையும்
மாட்டின் மீதான பூனையின் மீதான வருடலையும்
கொண்டுவர முடியும்.
இல்லையெனில்
நாம் மரணித்துக் கிடக்கையில்
எமது பிணம் எதிர்பார்க்கக்கூடிய
எமது குழந்தையின்
மாபெரும் அழுகை இல்லாதிருக்கும் சாபக்கேடு
எமை சிதையில் வதைத்தெரிக்கும்.

யோவ்ஸ் பிஸ்கர் கோயாக்


  2013தை-கார்த்திகைவரை சிறையில் இருந்தபோது எழுதப்பட்ட கவிதை







ஒல்காபெர்ன்கோல்ட்ஸ்

பட்டிணியாலும் மரணங்களாலும்

பதட்டத்தாலும் ஏக்கத்தாலும் உறுதியாலும்

நான் உனது சாயல்

நீ ஆரஞ்சின் நிறம்

நான் எரிந்து முடிந்த சூரியனின் நிறம்

உனக்கு பனித்துருவம்

எனக்கு நந்திகடற்கரை

உனது சனத்தைப்போலவே

எனது சனமும்

பட்டணங்களை இழக்கவிரும்பாதவர்கள்.

இந்த குறிப்புகளோடு

சுமார் எழுபது ஆண்டுகளின் பின்

உன்னை

என் சிநேகிதியென அழைக்க விருப்பமாயிருக்கின்றேன்.





இப்போது நான் காலிக்கடலோரம் பூசாவில் இருக்கின்றேன்.

சுமாராக உன்னைபோல

ஆயிரம் முற்றுகை நாட்களை  கடந்தேன்

மரணங்களின் எச்சமாய்

உப்புவெளிக்கு அப்பால் எறியப்பட்டேன்.

உயிரை கொண்டோடியவனை துரத்திப்பிடித்து

உயிர் கிழிய கிழிய பறித்து

என்னுள் சொருகிக் கொண்டது போல அந்த ஞாபகம்.

பல இலட்சம் சம்மட்டிகள் சூழ்ந்து ஓங்கியடித்தன.

‘‘ தான்யாவின் குடும்பத்தில் எல்லோரும் இறந்துவிட்டார்கள்

தான்யாவைத்தவிர‘‘என்று

குறிப்பெழுதக்கூட

என் தான்யாவுக்கு அவகாசமில்லை.

என் பட்டணங்ளை முற்றுகையிட்ட

முகங்களின் பின்

நான் காணக்கிடைத்தவைகளால்

ஓ! நீயுமா! நீயுமா!! நீயமா!!! என்று

கேட்டுகேட்டு இழந்திருந்தேன்.





உயிர்ப்பாதைகள் மூடப்பட்ட 

கடலோர மணலில் என் சனம்

பசி வருத்த ஏதோ செய்துண்டது

நாம் உண்டது உரொட்டியா மண் கட்டியா என்பதுகூட

உணராப் பசியிலிருந்தோம்.

பொருக்கவெடித்த நதியின் தாகத்தால்

மேலான ஒன்றை தனதாக்க காத்திருந்தபோது

ஓ! நீயுமா! நீயுமா!! என்ற குரல்கள்

நெஞ்சை அடைத்துவிட்டன.

பல நுாறு மைல்களில் என் தாய் நிலம்மூடி

மலர் வளையங்களை வைக்க நினைக்கும்

என் கரங்களை

ஒல்கா பெர்ன்ட் கோல்டஸ்!

என் சிநேகிதி

நீ இறுகப்பற்றக்கூடும்.





பிஸ்கர் யோவ்ஸ் கோயாக்கில் தலை சாய்த்து

நினைவுகளை வருட உன்னால் முடிகிறது

என்னால் முடியவில்லை

உடைக்கப்பட்ட கல்லறைகளை பொறுக்கியெடுத்து

பிஸ்கர் யோவ்ஸ் கோயாக் எழுப்ப கனவு காண்கிறேன்.

அதுவரை சிநேகிதி!

உன் வரிகளில் சிலதை

உச்சரிக்க அனுமதி கொடு

இதோ எடுத்துக்கொள்கிறேன்

‘‘பலர் இங்கே உறங்குகிறார்கள்

இவர்களின் பெயர்களோ

எத்தனைபேர் புதையுண்டு கிடக்கிறார்கள் என்பதோ

நமக்கு சரியாக தெரியாது

ஆனால்

எல்லோரும் தெரிந்து கொள்ளவேண்டியது இதுதான்

நாங்கள் யாரையும் எதையும் மறந்துவிடவில்லை

மறந்துவிடவும் மாட்டோம்‘‘

நன்றி என் ஆரஞ்சு நிறத்தவளே!

என் பட்டணத்தை சூழ்ந்தவர்களின்

மமதையின் பின்னால் இருந்த

முகங்களிலொன்றை கண்ட

என் மரணித்த தான்யா

நீயுமா லெனின் கிராட் என்றும்

உச்சரித்து மாண்டாள்

என்ன செய்ய!







(2013தை - கார்த்திகை வரை சிறையில் இருந்தபோது எழுதப்பட்ட கவிதை)

 -பொன்.காந்தன்-  




குறிப்புக்கள்...

லெனின்கிராட் -- ஏழு இலட்சத்துக்கு மேற்பட்ட கிட்லரின் படைகள் சூழ்ந்து கிட்டத்தட்ட தொள்ளாயிரம் நாட்கள் முற்றுகையிட்டு சுமார் 1500 டாங்கிகளாலும் விமானங்களாலும் தொடர்ந்து குண்டுகள் பொழியப்பட்டு உயிர்ப்பாதைகள் மூடப்பட்டபோது துருவப்பனிக்குள் நின்று எதிர்த்துப்போரிட்ட சோவியத் மக்களின் புரட்சி நகரம். இங்கு சுமார் பத்து இலட்சம் பேர் வரைஇறந்ததாக நம்பப்படுகிறது.


தான்யா -- லெனின் கிராட்டில் 1941-1942ல் போரில் இறந்த சிறுமி


உயிர்ப்பாதை -- முற்றுகையாளர்களது லெனின்கிராட்டில் எல்லா பாதைகளும் மூடப்பட்டபோது.பனிப்பாறைகளின் மேல் உருவாக்கப்பட்ட உணவுக்கான வரவுப்பாதை.


ஒல்காபெர்ன்கோல்ட்ஸ் -- லெனின்கிராட் முற்றுகையின்போது வாழ்ந்த பெண் கவிஞை


பிஸ்கர் யோவ்ஸ் கோயாக் -- லெனின்கிராட் முற்றுகையின்போது இறந்த அந்த நகரவாசிகளை புதைத்த பலபத்து ஹெக்டயர் பரப்பில் எழுப்பட்ட கல்லறையின் பெயர்.