Tuesday, March 27, 2012

மல்லிகை சாம்பல்

 பொன். காந்தன்    




ஒவொரு இரவிலும்
சாம்பலாகிறாள் அவள்
நதிகள் இல்லா இரவில் நடக்கிற
நெருப்பின் சங்கீதமென
வாசலை பார்த்து பார்த்து
முடிகிறது அவளின்
வாழ்வின் எச்ச சொச்சங்கள்

பஸ்பமான எமது நாட்களில்
எமது முதுசமென
கறை படிந்த நாக்குகளையும்
கண்களையும்
விட்டுவிடாமல் கொணர்ந்தோம்
அநேக காலங்களில்
நாம் வெட்க்கப்பட தயாராய் இருந்ததில்லை
இன்றும் அப்படிதான்
அவள் வாசலிலும் தெருக்களிலும்
நாம் காவி வந்த கஞ்சல்களுக்குள்
வாசனை இழந்துகொண்டிருகிறாள்

அவள் மண்ணுக்குள் தலை புதைத்து
போகிறபோதெல்லாம்
எதையோ தூக்கி வீசி
நொறுக்க வேண்டும்போலிருக்கிறது.
இழக்க வேண்டியதை
கொண்டு வந்திருக்கிறோம்
நம் சோதரிகளை வதை செய்ய..

அடுத்து வரும் காலமொன்றில்
நம் அழகிகள்
பொட்டும் பூவும் புன்னகையும் இழந்து
எல்லா வீடுகளிலும் நிறைந்திருப்பர்
அப்போது நாம் என்ன செய்ய வேண்டும்
என்றுரைக்க
ஒரு கடவுளும் வேதவாக்கும்
முன்பொரு காலத்தில் இருந்திருக்க வேண்டுமா