Monday, August 27, 2012

அஞ்சலி -நீல்அம்ஸ் ராங்







-பொன்காந்தன்




நிலவின் கண்ணீர் ஒன்று 
நேற்று என் இதயத்தில் விழுந்தது 
தன் முதல் ஸ்பரிசம் மூச்சு இழந்ததாக 
அது விம்மியது 
நீல்அம்ஸ் ராங் பற்றிய 
வானத்தின் வரி அது 

நீல் அம்ஸ் ராங் 
இப்போது நிலவையும் 
கடந்து போனார் 
வானில் தெரியும் எல்லா
நட்சத்திரங்களில்
கோள்களில்
அவர் கால் பதித்திருப்பார் .
அவரது தீரா விடாய் அதுதான் .
மானுட அறிவின்
அழகான பிரகாசம்
நீல் அம்ஸ் ராங்
துளியும் கற்பனை அற்ற
பேருண்மை அவர்
உண்மை களின் தேடலுக்காக
1960களிலோ
அதற்கு முன்போ
உயிர் கொடுக்க தயாராக இருந்தார் .
எல்லாவற்றையும் அவர் கடந்தார் .

இதை எழுதிகொண்டிருக்கும் போது
அருகில் ஒரு கோவிலில் நம்மாள் ஒருவர்
ராசிகள் பற்றியும்
இதிகாச புராண பூசாண்டிகளையும்
தேன் ஒழுக தெளிக்கின்றார்
கடவுளின் அருட் கடாட்சம் பற்றியும்
சொரிகிறார்.
நீல் அம்ஸ் ராங் அதயும் தாண்டி
நீக்கமற நிறைந்திருப்பதாய் உணர்கிறேன் .

நிலா சோறுதான்
இன்றைக்கும் நம்மில்
கோடிக்கணக்கானவர்களின் புளகாங்கிதம்
அம்ஸ் ராங்கின்
நாமம் கூட தெரியாத நம்மாள்
பல பேருள்ளார்கள்
அவர் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு
இருந்ததாக இதுவரை நினைத்தோம்
என்கிறார்கள் நேற்று சில நண்பர்கள்
வெட்கக்கேடு என்ன வென்றால்
அதில் ஆசிரியர்கள்
பட்டதாரிகள் ................

நீல் அம்ஸ் ராங்
நிலவில் பிறந்த போதும்
இப்போது அமெரிக்காவில்
இறந்தபோதும்
நம் சனம்
சாதிகளாலும்
துரோகங்களாலும் கூறுபட்டு
கோமாளிகளாக இருக்கிறார்கள் .
காலடி மண்ணையே
சரியாக மிதிக்க தெரியாத
உணர தெரியாத தமிழ் சாதிக்கு
நிலவு
ரொம்ப தூரம்
நீல் அம்ஸ் ராங்கின் வரவும் பிரிவும்
சொல்லும் சேதி புரியுமா

அமெரிக்கர் களுக்கு
நீல் அம்ஸ் ராங்
நிலவை புதிதாக அறிமுகம்
செய்தபோது
அமெரிக்கர்கள் புல்லரித்து போனார்கள்
அந்த புல்லரிப்பு
இன்று செவ்வாய் வரை ......
ருசியர்களும் தூக்கத்தை குறைத்தனர்
சீனர்களும் வானத்தை பார்த்தனர் ........
நம்மாளுக்கு
ஒரு பொன்னாடை போதும் புல்லரிக்க
நம் சபைகள்
முதுகு சொறிவதோடும்
பழைய இதிகாச புராண
கற்பனைகளை
ஒப்புவிப்பதொடும் முடிந்து விடுகின்றன
மூழ்கி முத்தெடுப்பதாய் நினைப்பு
இன்னும் பல நூற்றாண்டுகள்
புதைவது அறியாமல் .....
நீல் அம்ஸ் ராங்
நம்மாளுக்கு போது அறிவு தேர்வில்
ஒன்றோ ஐந்தோ
புள்ளி எடுப்பதற்கான விடை
அவ்வளவு தான் ....

நீல் அம்ஸ் ராங் இறந்து போனார்
அவரின் அஞ்சலி குறிப்பு
சாதாரண மனிதர்களுக்கானது அல்ல
விண்ணுக்கும் மண்ணுக்குமானது
நிலவின் குறிப்பையும்
பூமியின் குறிப்பையும்
சேர்த்து எழுதுகிற
புதிய மனிதனின் வான சஞ்சாரம் ...
சொர்க்கம் நரகம் பற்றிய
நம் புலுடாக்களுக்கு அப்பால்
ஆச்சரியம் மிக்கதாக
உண்மை நிரம்பியதாக
நிலாவுக்கான பூமியின் முதல்
கவிதை ஆகிய நீல் அம்ஸ் ராங்கின்
இறப்பின் பின்னான சஞ்சாரம் எழுதப்படும் ......

Wednesday, August 8, 2012

சிலிர்ப்பு


-பொன்காந்தன்



நித்தமும் உன்
நெடுஞ்சோலையை
நீ ரசித்தாய்
உனை மறந்தாய்
மொட்டுக்களை
அது மலரும் மென் கணங்களை
நீ அறிவாய்
முற்றமெலாம் நீ விதைத்த
செடி மலர்கள்
அவை
சட்டென கடக்கும்
வழி போக்கன் பார்வையில்
சிலிர்த்தன என்றுமிலாதவாறு......
வாடி விழும் வரை
காதலித்தன வழி போக்கனை

ஒ ! வழிபோக்கனே
நீ போய்கொண்டேயிரு




Tuesday, August 7, 2012

முடியாதவனின் குரல்


-பொன்காந்தன்


மிக மிக  தொலைவில் ஒரு பையன் நிக்கிறான்
அது மிகப்பெரும் தொலைவு
மிகவும் ஆவலாய் இருக்கிறேன்
முடியாத காரியம்
முடியவே முடியாத காரியம்
அவனை பார்க்க எல்லையற்ற ஆவல் கொண்டுள்ளேன்
இது ஒரு முடியாதவனின் குரலாக
நீங்கள் எடுத்துக்கொள்ளுங்கள்
பறவாய்இல்லை
அதை பற்றி கவலையும் இல்லை
இப்போது மட்டும்
மந்திரங்கள் மீதும்
மாந்திரிகங்கள் மீதும்
ஒரு தேடல் வந்துள்ளது
அவனை அறிந்திடல் வேண்டும்
ஏதேனும் உருவம்
என்ன வரம் வேண்டுமென கேட்காதா?
இது ஏலாவாளியின் புலம்பலாக
எடுத்துக்கொண்டாலும் எனக்கு கவலையில்லை
அவன் கண்ணில்
கைகளில் உதடுகளில்
என்ன இருக்கிறது
எனக்கு தெரிந்தாகவேண்டும்
நம்பிக்கையோடு மரணி என்று
ஓர் வார்த்தை உதிர்வானா !