Sunday, August 28, 2016

பூமிப்பாடம்




வல்லையால் வருவானென
வாய்ச்சவடால் விட்டிருக்க
கொல்லையால்  வந்தான்
குடும்பியை அறுத்துச்சென்றான்
இல்லையேல் அவனை
இரண்டாய் பிளந்திருப்பேனென
வெறும் வாய் மெல்ல
மண்டையில் மயிர் கொட்டும்
மாறிச்சிந்தி
சண்டை  என வந்தால்
சட்டை கிழியத்தான் செய்யுமென்ற
இன்றைய தத்துவத்தையேனும்
நினைவில் கொள்
கொண்டை அறும்
குரல்வளை கிழியும்
மண்டையில் நாலோட்டை வரும்
மறைந்துபோய்
மறுவடிவம் எடுத்து
சூரனார் போல்
சூட்சுமம் காணவும் வேண்டும்

மன்னர் காலமா இது
கர்ணன் படத்தில்
கர்ச்சனை செய்து
கதாயுதமும் ஈட்டியும்
கொண்டு களமாட
மாறிச்சிந்தி
இன்றுபோய் போர்க்கு
நாளைவாவென சொல்ல
இதிகாசம் இயம்பும்
இழிச்சவாயர்கள் இன்றுண்டா
வண்டு வந்து பார்த்து
படமனுப்ப
ஒண்டுக்கிருப்பவனுக்கு இலக்குவைத்து
எறிகணை பாயும் காலம்
சொண்டுக்கு மட்டும்
குறிவைத்து சிவப்படிக்கும்
சினைப்பர் யுகம்

முன்னுக்கு நிண்டு
மூவாயிரம் யானை
நாலாயிரம் குதிரை
நாலாபக்கமும் தேர் நிறுத்தி
சங்கூதி சமர்புரிந்;த மூளை
கொஞ்சம் குந்தி இருந்து
மண்டையை கசக்கினதால்
பாட்டி காலம் முன்
ஏகே போட்டி செவின்
பீகே கைக்கு வந்தது
பிஸ்டல் கனோன் பிரசவமானது
ஆட்டி ஆமட் கார்
டசின் கணக்கில் ஓட்டும் மல்ரி
மிக் மிராஜ் டோறா மிதக்கும் டாங்கி
எல்லாம் நாடுகள் தூக்கி வைத்து
நானா நீயா நாண்டு பிடித்தன

நாமென்ன சும்மாவா
ஜொனி பசிலன் அருள்
தண்டவாளத்தில் ஊர்ந்து
எதிரியின் எல்லைநுழைந்து
ஏதோ ஏக்கம் கனவை விதைக்குமொன்று
சாரை நாகமென்று
புறப்படும்போதே
அன்னியரின் அடிவயிற்றை
கலக்கி இறைக்கும் இன்னொன்று
புளி பூவரசக்குள் ஒளித்து வைத்து
ஓடிப்போயெடுத்து
பொக்கணை இரணைமடுவில்
போயெழுப்பும் புட்பக விமானங்கள்
இப்படி எல்லாம்
வேறுவடிவில் வந்து
விலாவாரியாய் பார்த்து
மூக்கில் விரலை வைத்து
முழுசிக்கொண்ட உலகம்
இதுபோல எங்கள்
ஆயுத சந்தையில் புதிதாக இல்லை
புல்லரிக்கிறது
பூத்து காய்க்க முன்னர்
பிடிங்கி எறியவேணும் என்று
பார்த்து பார்த்திருந்து
எல்லை கடந்து
கொல்லையால் வந்து
அடியோடு சாய்த்து
ஒருவாறு முடித்தார்
சண்டையா பிடித்தார்
தந்திரங்கள் செய்தார்
தடவியும் கொடுத்தார்
பலவான்கள் அவர்
பசப்புக்கள் விட்டார்
பல வாறு நடித்தார்
எம் பாய்ச்சல் முடித்தார்
தடிமாடாய் தமிழர்
இலட்சம் பேரிருக்க
ஒரு சிலரே விடிவுக்கு
விதையாகிப் போனார்
இப்போதும் பலபேர்
வாய்ச்சவடால் விண்ணர்
வேறாரோ மண்ணுக்காய்
வீழ்ந்திடும்போது
கைதட்டி வாழும்
கடை நிலைப்பிறவி
இந்நிலை தொடர
இனிவரும் காலத்தில்
வல்லையால் வந்தே
வைத்திருக்கும் கோவணத்தை
இல்லை உனக்கேதுமில்லையென்று
எடுத்தவன் செல்வான்