Sunday, October 30, 2011

துளியின் கடைசி வரிகள்


-பொன்.காந்தன்



உன்னைப்பற்றிய எதிர்பார்ப்பால்
சர்ப்பமாய்
புளுதி நிரம்பிய நதியாய்
பாதம் படாத தெருக்களாய்
வெளியாய்............
நான் தவித்துக்கொண்டிருக்கின்றேன்
எனக்குள்
பெருங்கடலோ
பெருங்காடோ
பெருவெளியோ
ஒரு சில்லிடும் கணத்தில்
பிறவியின் அழகை பாடப்போகின்றன.
ஒவ்வொரு பிறவிக்குள்ளும் இருக்கும்
பிரபஞ்சத்தை நிரப்பும்
அழகிய பாடலின் வரிகளை
நானுணரும் கணத்தில்
நீயெனை சந்தித்திருக்கக்கூடும்

சுவாச அறைகளுக்குள்ளும்
இமைகளுக்குள்ளும்
மலர்கள் மலரும்போது
உனை எழுதும் மொழி
என் இதயச் சுவர்களில்
தீண்டிச்செல்லும்
எல்லா இனிய கவிதைகளுக்குப் பிறகும்
எல்லா மயக்கும் ஓவியங்களுக்குப் பிறகும்
எல்லா இசைகளுக்குப் பிறகும்....
ஓர் வருடலின் சுகத்தை
பிரபஞ்சத்தின்
சகல வெண்புரவிகளையும்
என் முன்னே நிறுத்தி வைத்திருக்கின்றேன்
இறுதியாய்சொல்கிறேன்
நான் உன்னை மட்டுமே நம்புகின்றேன்

 

Tuesday, October 4, 2011

சிலகணம் -நான்

-பொன்.காந்தன்



மொழியின்றி நான் தவித்த இரவில்
காற்று
சில மழைத்துளிகள்
மற்றும் நீ
எனது பிரபஞ்சத்தின்
வாசல் திறந்தீர்கள்
முன்பொருமுறை போல
தெரிந்து கொண்டும்
மலர்கிறேனா
உதிர்வதற்காக...............
         

ஈரவிழி

பொன்.காந்தன்



அவள் கண்களின் ஸ்பரிசத்தை தவறிய நாட்கள்
ஆயிரம் குழந்தைகளை கையில் இழந்த கணப்பொழுதுகள்
பாதியில் முடிந்து போன புன்னகை முகங்கள்
பயணத்தில் தவறவிட்ட என் காற்றின்துளிகள்
மீதியின்றி ஊழி தின்ற என் சந்தோசங்கள்
மீழ வழியின்றி நான் தவிக்கும் தவிப்பு
மீண்டும் எழத்துடிக்கும் எனதேக்கம்
எனது ஆடையை தேடும் அலைச்சல்
மானத்தை காக்க நான் படும் அன்றாடம்
எனது முகவரியை எழுதமுயலும் இதயத்துடிப்பு
என் ஈரவிழிகளில் தெரிகிறதா!

Saturday, October 1, 2011

விநாயகபுரத்தில் சிறார்கள் கௌரவிப்பு





சர்தேச சிறார் தினமான ஒக்ரோபர் முதலாம் நாள் கிளிநொச்சி
விநாயகபுரத்தில் சிறுவர்கள் கௌரவிக்கப்பட்டுள்ளனர். சிறுவர்கள்
ஆலயத்தில் இருந்து மாலை அணிவிக்கப்பட்டு ஊர்வலமாக
அழைத்துவரப்பட்டு விநாயகபுரம் முன்பள்ளி மண்டபத்தில்
முன்பள்ளி ஆசிரியர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில்
பா.உறுப்பினர் சி.சிறீதரனின் செயலாளர் பொன்.காந்தன் கரைச்சி
பிரதேச சபை உப தவிசாளர் நகுலேஸ்வரன் அச்சபையின்
உறுப்பினர் சேதுபதி கிராமசேவகர் சேந்தன் கிராம அ.சங்க செயலாளர்
மற்றும் பெற்றோர்கள் நலன் விரும்பிகள் கலந்துகொண்டு
சிறுவர்களுக்கு அன்பளிப்புக்களை வழங்கிவைத்து வாழ்த்துக்களை
தெரிவித்தனர்.