Monday, November 7, 2011

தீக்குச்சிகளின் வானம்


பொன்.காந்தன்

எமது மக்களுக்கு முன்பு சில சந்தேகங்கள் இருந்திருக்கலாம்
இருண்ட காலம் பற்றி
இப்போது தெளிந்திருக்கிறார்கள்
அவர்களின் எல்லா இடுக்குகளிலும்
இருள் குடிகொண்டிருக்கின்றது
ஒரு சிறு பொறிக்காக
எல்லா திசைகளிலும் துவள்கிறார்கள்
முன்பு இவர்கள் எல்லா இடுக்குகளாலும்தான்
சூரியனை இழத்திருத்தல் கூடும்
இக்காலம் இலையுதிர் காலம் என்று
எழுத மனம் ஒப்பவில்லை
ஏனெனில்
எமது மக்கள் ஒரு வாளுக்கு இருக்கவேண்டிய
கூர்மை பற்றியும்
ஒரு புரவிக்கு இருக்கவேண்டிய வேகம் பற்றியும்
போதிக்கிற மௌனத்தை கொண்டுள்ளார்கள்
நசிபடும் ஒலிகளில் இருந்து
ஒரு உண்மை காயங்கள் அடிக்கடி தப்பித்துக்கொள்வதை
உணர முடிகின்றது
அடிமைகளின் தூய்மை
எல்லா கரும்புள்ளிகளிலும் அம்பலப்படுகின்றது
சூரியனைப்பற்றி யாரும் போதனை செய்யவேண்டியதில்லை
ஆரியாசனங்களை தீக்குச்சிகள்
நிரப்புவதில் உள்ள அசிங்கத்தையும்
மனம் சமாதானப்படுத்திக்கொள்கின்றது
எந்த மரத்தின் கீழும்
புத்தர் இருக்க பழக்கப்பட்ட காலத்தின்
காலத்தின் சாபத்தையும்
சோம பானமாக்கி கொடுக்கவும்
நமது ஆண்டி ஒருவன் இருக்கவே செய்கிறான்
ஒட்டப்படாத சுவரொட்டிகளோடு
அலைகிறது மிகப்பெரும் ஆத்மம்