Wednesday, January 25, 2012

கல்லும் மண்ணும் தாரும் என் கண்ணீரும்........

-பொன்.காந்தன்


நான் கிளிநொச்சியை சேர்ந்தவன்
தமிழர் வரலாற்றில் முக்கியமான நகரம்
எனது சொந்த நகரம்
அதன் ஆழ அகலங்களை
சரியாக நானறிவேன்
அதன் உண்மையான புன்னகையை
எனக்கு நன்றாகத் தெரியும்
ஏனெனில் நானொரு கிளிநொச்சியான்
கிளிநொச்சி
பாரறிந்த நகரமாயிற்று
பாழடைந்த நகரமாயிற்று
இப்போது நான் தேடுகிற நகரமாயிற்று
வீதிகள் அகலமாகிறது
என் புளியடியில் சீனாக்காரன்
தார்ப்பீப்பாய்களோடு கரைந்து கிடக்கிறான்
என் தெரு
சீனர்களாலும்
இந்தியர்களாலும்
அமெரிக்கர்களாலும்
நெரிசல்படுகின்றது.
சுப்பனையும் சுப்பியையும்
காண்தல் தவமாகிறது.
2010களில் விரிந்த வீதி அபிவித்தி
அதிகார படலங்களின்
புதிய மொழி
என் சாலை பற்றிய சில
வரிளை கீழே
எழுதவைத்திருக்கின்றது.



கல்லும் மண்ணும் தாரும் என் கண்ணீரும்........
இந்தச்சாலையில்தான்


எல்லாம் நடந்து முடிந்திற்று
கடைசி ஒருவன் கூட
இல்லாது போன நிசப்தம் மட்டும்
இன்றுவரை
என்னுள் உறைந்து கிடக்கின்றது.
மெல்ல மெல்ல இச்சாலையில்
நடக்கத்தொடங்கிய
ஒவ்வொரு பயங்கரம்
ஏக்கம்
முகங்களை தேடிக்களைத்து
முகங்களினால்
எழுதப்பட்ட
அப்பெரும் ஏமாற்றமும்
மிக நீளமானது மிக அகலமானது
மிகவேகமானது
எதிர்பார்க்கப்பட்ட எந்தச்சந்திப்பையும் தராத
வெறும்சாலை வெறும்சாலை
இப்பெரும் சாலையில்
அவன் வராத பயணங்களில்
எப்போதும் அவள்
காலத்தோடு மோதுண்டு விபத்துக்குள்ளாகிறாள்.
எனக்குத்தெரியும்
கூந்தலின் நறுமணமலர் உதிர்ந்த
தடங்கள் இல்லா
இச்சாலையின் அபத்தம்.
என் சாலை எப்படி ஆயிற்று
எதற்கும் பதிலற்று நீண்டுகி;க்கின்றது.
ஆனந்த உலாக்களின் நாட்களை
எண்ணிபார்க்கின்றேன்.
ஓரமாய் நில் என்று
அதட்டிப்போகிறான்
அவன்மொழியில் ஒருவன்.
என் தாண்டவ மொழி
கைகட்டி கிடக்கின்றது
சாலை ஓரமெங்கும்..............
ஓற்றையடிப்பாதையில் கூட
என் மௌனம் கலைத்து
ஒரு உண்மையை பேசமுடியவில்லையே.