Sunday, October 30, 2011

துளியின் கடைசி வரிகள்


-பொன்.காந்தன்



உன்னைப்பற்றிய எதிர்பார்ப்பால்
சர்ப்பமாய்
புளுதி நிரம்பிய நதியாய்
பாதம் படாத தெருக்களாய்
வெளியாய்............
நான் தவித்துக்கொண்டிருக்கின்றேன்
எனக்குள்
பெருங்கடலோ
பெருங்காடோ
பெருவெளியோ
ஒரு சில்லிடும் கணத்தில்
பிறவியின் அழகை பாடப்போகின்றன.
ஒவ்வொரு பிறவிக்குள்ளும் இருக்கும்
பிரபஞ்சத்தை நிரப்பும்
அழகிய பாடலின் வரிகளை
நானுணரும் கணத்தில்
நீயெனை சந்தித்திருக்கக்கூடும்

சுவாச அறைகளுக்குள்ளும்
இமைகளுக்குள்ளும்
மலர்கள் மலரும்போது
உனை எழுதும் மொழி
என் இதயச் சுவர்களில்
தீண்டிச்செல்லும்
எல்லா இனிய கவிதைகளுக்குப் பிறகும்
எல்லா மயக்கும் ஓவியங்களுக்குப் பிறகும்
எல்லா இசைகளுக்குப் பிறகும்....
ஓர் வருடலின் சுகத்தை
பிரபஞ்சத்தின்
சகல வெண்புரவிகளையும்
என் முன்னே நிறுத்தி வைத்திருக்கின்றேன்
இறுதியாய்சொல்கிறேன்
நான் உன்னை மட்டுமே நம்புகின்றேன்