Saturday, December 10, 2011

எனக்கான தருணம்



பொன்.காந்தன்

நேற்றும்தான் மெல்லியதாக சுண்டிவிட்டேன்
சகஜமாகிவிட்ட பிரிவுகளில்
மலைகளும் கூட
மெனமாக விழுந்து கிடக்கின்றன.
முன்பொரு பொழுதுகளில் இருந்த
இழக்கும்போதான
பாரம் நெருடல் இப்போது இல்லை.
ரொம்ப மகிழ்ச்சி!
நான் ஒரு மலர்செடியாகியிருக்கிறேன்
மழை வானமாகி இருக்கிறேன்
இலையுதிர்கால மரங்கள் என்னுள் முளைத்துக்கொள்கின்றன.
அந்த பதின்ம வயதுகளில்
எங்கே போயிற்று இந்த
வசந்த காலத்தின் உண்மைகள்.
இன்னமும் என்னை
வெறித்துப்பார்த்துக்கொண்டிருக்கும் சிலரை
என்னோடு அழைத்துச்செல்ல தயாராகிவிட்டேன்.
ஆச்சரியப்படும் படியாக எதுவும் நடந்துவிடவில்லை.
எனக்கான தருணமாகஇது இருக்கிறது.
சிலவேளைகளில் சாலையில்
ஒருவர் மட்டுமே நடந்துபோவது
எவ்வளவு அழகாக இருக்கும்.
முற்றிலுமாக என்னை நான் சுமந்து செல்வதாக உணர்கிறேன்
இது எனக்கான தருணம் என்பதால்.

Friday, December 2, 2011

தேய் பிறை



பொன்.காந்தன்



கட்டழகியென
கண்ணுக்குள் நிற்கிறாய் நேற்று
இன்று
பொட்டற்று போய்விட்ட
உன் முகமும்
புன்னகை தொலைந்த
உன் பொலிவுமாய்
விட்டு விடுதலையாக
புறப்பட்ட சிறகுகள்
கொட்டுண்டு
பட்டு பூச்சிகள் இரண்டை
பாசத்துள் அணைத்தபடி
கொட்டுகிற கண்ணீரை
குனிந்த மறைத்தபடி
முன்னே நிற்கிறாய் முழுமதியே!
என்னே விதியதுவோ
உன்னைப்போல் கண்ணீரால்
ஊர் நிறைந்து கிடக்கின்றது
மின்னல்போல் மறைந்த
உன் மிடுக்கான கனவுகள்
மீண்டும் இனிவருமா
இல்லை நீ தனி மரமா
இல்லை இல்லையென
சொல்லத்துடிக்கிறேன் நான்
இச்சொல்
மொத்தத்தமிழினத்தின் மொழியாகுமா!