Saturday, September 17, 2011

தமிழ் பூகம்பம்

-பொன்.காந்தன்


பூமலர்ந்த தேசத்தில்
புயலடித்துப்போன பின்னே
சாக்குரலின் நினைவுகளோ
சதா மனம் வருத்த
பாதகரின் காலடிக்குள்
பட்டிணியும் பதட்டமுமாய்
கெட்டு வாழ்கின்ற
கேவலத்தை எண்ணியெண்ணி
நித்தம் வதைகின்ற
நிலத்தமிழர் நிலைகண்டு
கொட்டி முழக்கமிட்டு
கொதித்து குமுறிநின்று
கோலத்தமிழ் நிலத்தின்
குதூகலமாம் சுதந்திரத்தை
கொண்டுவர ஆங்கோர்
பொங்கு தமிழ் பூகம்பம்
முள்ளி வாய்க்காலில்
முடிந்த தமிழர்களின்
மூச்சின் கனவுகளை
எல்லை  தாண்டிநின்று
எழுதிவைப்பதற்கு
வல்ல தமிழர்கள்
வயிரம் ஆகிறார்கள்
வாசம் செய்வதற்கு
வண்ணத் தமிழ் மண்ணை
வசந்தக்காற்றுடனே
வல்ல உலகத்தார்
வந்து தருவதற்கு
உலகத்தமிழர்கள்
ஒன்றாகியியற்றுகிற
உயர்தவமாம் பொங்குதமிழ்
கல்லறைகள் ஏதுமற்று
காற்றவழியுறைகின்ற
சென்ற வழியெங்கும்
சிதறி மடிந்துவிட்ட
 தமிழர்களின்தாகத்தை
எங்கும் பொலியவைத்து
தங்கத்தாய் தாய் நாட்டை
தந்திடுக பொங்கு தமிழ்.