Saturday, November 19, 2016

தூவான விரல்களால் மீசை முறுக்கும் கார்த்திகை!!



















முற்றத்திலே முகம்புதைத்திருக்கும் மழையை
கொஞ்சம் வருடிவிடுகின்றேன்
முந்தாமல் பிந்தாமல்
இம்முறை நெருக்கமாய்
அற்புத நடனமாடி என்னை ஆசுவாசப்படுத்துகின்றது
முன்னைப்போல
கொடுப்பதற்கு ஒன்றுமில்லை
மழைக்கும் தெரியும்
பாரிநிலம் பாழடைந்து போகிறது
சுப்பர் மூனை பிடித்தேன்
கைகுலுக்கி அனுப்பிவைத்தேன்
மழையே நீ அப்படி அல்ல
என் ஆழ் மனதறிந்த தேவதை
என் மயிர்க்கால்களை தொட்டு
செல்லமே என்று தீண்டும் உரிமை நீ
என் பதிகங்களுக்கு அடியெடுத்துக்கொடுக்க
எந்தக்கடவுளும் வருவதில்லை
பித்தா என்று தடுத்தாட்கொண்டதுமில்லை
மழைதான் என் கதவு தட்டி
தூவான விரல்களால்
என் மீசையை கொஞ்சம் முறுக்கி
மார்பு மயிரை கோதி
மனசோடி பேசி
இதய வீணையை வாசி என்று
மின்னல் கொடி நாட்டி
என் யன்னல் ஓரத்திலும் நின்று
பாசுரத்தின் மூலவேர்வரை குழைந்து
ஒரு யாக மயக்கத்தில் இருக்கச்செய்வது.

தாயின் கொடியை கோவணத்திலும்
செருகமுடியாத துரதிஸ்டம்
தீபாவளி சிறுவனின் சீறுவாணம்போல்
சீசனாகவும் பாசனாகவும் மாறுகிறது
மண்ணுள் விதைந்தவரின் நினைவு
வேட்டிக்கரையும்
சிவப்பு மஞ்சளாய் வரும்
ஐயப்பா சாமிகள் போல்
அதையும் உடுத்துத்திரிவார்கள்
கனவுகளின் கதை தெரியாமல்
சில காலத்தில் வெருளிகளும் அதை உடுக்கும்
மஞ்சள் சிவப்பு சாயத்தை
பரஸ்பரம் ஊத்தி
பன்றிகள் போல் உருண்டு
இதுவும் ஒரு பண்டிகை ஆகும்
தன்னை தமிழென்றே அடையாளம் செய்யாமல்
தன் பேரும் பெருமைகளும் யாருக்குத் தெரியாமல்
எங்கள் ஊருக்குள் உலவி
வேருக்கு மட்டுமே தெரிந்த
வெற்றித்திலகங்களின் முன் எம்மாத்திரம் நாம்
ஆறுவருடங்களில் பிணங்களை விற்று
காலப்பழி தாங்கும் வெட்டியான்கள் நாம்
விசஊசி கண்டு பிடித்த பெரும் விஞ்ஞானிகள் ஆனோம்
யார் அடுத்த பிரபாகரன் போட்டிவைத்தோம்
சண்டை என்றாலே
இடுப்பின் கீழ் ஈரமாகிய ஒருவர்
சாவொரு புறம் நடக்க
பென்சன்தரும் உத்தியோகமும்
புறமோசன்களும் தேடிய வேறுசிலர்
மாண்புமிகு கௌரவங்களே
எப்போவதாவது மணலாற்றின் காட்டின்
பூவாசத்தை சுவாசித்திருக்கிறீரா
மண்கிண்டியில் வீழ்ந்த பெண் பிள்ளைகளின்
ஈகம் பற்றி ஏதும் தெரியுமா
இந்தா பிடி என்று உங்கள் பிள்ளைகளை
விடுதலைக்காய் ஈந்திருக்கிறீர்களா
ஒரு மக்கள் போராட்டம்
மண்ணில் புதைந்திருந்தால்
மானத்தோடிருக்கலாம்
அப்படி நடக்கவில்லையே
பாதிப்பேர் சாதி பார்த்துக்கொண்டும்
தொடர்களுக்கு இழித்துக்கொண்டும்
நாட்டில் பிரச்சனை என்று
வீடுகளை பாழடைய விட்டுவிட்டு
வேறு தேசங்களுக்கு விசா எடுத்துக்கொண்டும்
மட்டக்களப்பு ஏழைகளின் பிள்ளைகள்
கனகராயன் ஆற்றோரத்திலும்
மாங்குளம் பெருங்காட்டுக்குள்ளும்
ஆடை மாற்றாமல் அரைவயிறோடு போராட
காற்றுவாங்கிக்கொண்டும்
காலங்களித்து விட்டு
வா விடுதலையே என்றால் எப்படி வரும்

தயவு செய்து முதலில்
பிரபாகரனையும் மாவீரர்களையும்
நாம் விடுதலை செய்யவேண்டும்
அழுக்குப்படிந்த நெஞ்சங்களோடு
புனிதர்களை
எங்கள் போகங்களுக்கு பயன்படுத்தல் அசிங்கம்
விட்ட இடத்தில் இருந்து எழுதத் தெரியாதவர்கள் நாம்
பிரபாகரன்போல
மேடையில் மிமிக்ரி செய்வதல்ல
அடுத்தகட்ட விடுதலைப்போராட்டம்
முடிந்தால் சுதுமலையில் இருந்து
இறுதிவரை விடப்பட்ட அறிக்கைகளை
வாசித்து யோசியுங்கள்
யூதர்கள் எரித்திரியா வியட்நாம்
இப்படி ஏகப்பட்ட மேற்கோள்களோடு
மேடைப்பிரசங்கம் செய்கிறவர்களுக்கு
முதல் எல்லைப்படை மாவீர்ர்
அப்பனின் வரலாறு தெரியாது
மயில்குஞ்சனின் வல்லமை தெரியாது
நான்கு மறவர்களை மண்ணுக்காய் ஈந்துவிட்டு
இம்மாரியில் குடிசையில் நனையும்
உன்னத தாயை தெரியாது
ஒற்றைக்கண்ணும் ஒற்றைக்கையும்
விடுதலைக்காய் கொடுத்துவிட்டு
இற்றைக்கு முதிர் கன்னியாய் இருக்கும்
தோழிக்கு ஒரு மண வாழ்க்கை கொடுக்க
உள்ளுரிலும் வெளியூரிலும் ஒரு தமிழன் இல்லை
வெள்ளைக்காரிக்கு கணவராக தயார்
ஆனால் அன்ரன் பாலசிங்கம் ஆக தயாரில்லை
மண்ணுக்காய் வீழ்ந்த
என் அண்ணன்கள் இருந்திருந்தால்
இப்படி இருப்பேனா நான் என ஏங்கும்
ஒரு தங்கையை எத்தனைபேர் ஸ்பொன்சர் செய்வீர்கள்

மஞ்சள் சிவப்பு துணி மாவீரர்  பிரபாகரன்
ஆறுவருடம் ஓட்டியாச்சு இனி என்ன
மாவீர்ர் துயிலுமில்ல காணிகள் விட்டாயிற்று இனி என்ன
அரசியல் யாப்புக்கு ஆலோசனைகளும் சொல்லியாயிற்று இனி என்ன
வடக்கு மாகாண சபையின் சாவியை
ஆளாளுக்கு இடுப்பில் செருகினோம் இனி என்ன
அபிவிருத்தி குழு தலைவர் பதவிகள் பெற்றோம்
ஆடர்கள் போட்டோம் இனி என்ன
எல்லாம் கொடுப்போம் விடுதலைக்கு என்று
மாவீரர் விதைகுழியில் சத்தியம் செய்துவிட்டு
என் மயிருக்கு பூண் இல்லை என்று புலம்புகின்றோம் இனி என்ன
இந்த புண்ணிய நாட்களில்
என்னைநோக்கியே ஆயிரம் கேள்விகளை கேட்கிறேன்

மறவர்களின் காலடியில் இருந்து
இரவிரவாய் கவியெழுதி
விடிந்தபொழுதில் வண்டுகள் அளையா மலராய்
மாவீரர் நாமங்களில் சூட்டியவன் நான்
எனக்கு வருத்தம் இருக்காதா என்ன
திரும்பிவருவோமா இல்லையா என்று
இறுதி வார்த்தைகளை எழுதித்தந்துவிட்டு
வாசியுங்கள் காற்றில் கலக்கட்டும் என
களத்தில் வீழ்ந்த
தம்பி தங்கைகளை நினைத்தால்
என் நெஞ்சுவெடிக்காதா என்ன
விம்மாதா என் மனம்
விழியுடைந்து பாயாதா கண்ணீர்
மண்ணை மறந்து
இன்று இரவானால் தண்ணியில் மிதக்கின்ற
தம்பிகளை அழைத்து
அறிவுரை சொல்லி எண்ணிப்பார்
உன்னைப்போல்
அந்த உத்தமர்களும் வாழ்ந்திருக்கலாம்
கண்ணை விழி மகனே
கனவுகளை சும என
சொல்லத்தோன்றாதா எனக்கு
அங்கயற்கண்ணி என்ற ஏழை மகள்
என் இளவரசி
பள்ளிபோகாமல் பலமைல் கடல்நீந்தி
எண்ணியது முடித்துக்கரைந்த
நினைவுகள் அலையாய் உரசும்
பண்ணைக்கடலோரம்
படிக்கவென்று புறப்பட்டு
சோடிகளாய் குடையின்கீழ் குலவும்
இன்றைய இழிநிலையில் இறந்துவிடுகின்றது ஈகங்கள்

குறைந்;தது தமிழராய் இருக்கவும்
இன்னும் சிலகாலத்தில் கடினமாய் தோன்றும்
தமிழை உச்சரிப்பதும் சிலருக்கு வெட்கமாய் தோன்றும்
முள்ளிவாய்க்கால் நினைவும்
முன்பு நடத்தப்பட்ட படுகொலை நினைவுகளும் புனிதமற்று
செலிபிறேசனாகவும் செல்பி படங்களாகவும் மாறும்
அன்னியர் இன்னும் எங்களை
ஆங்காங்கு வைத்து அழகுபார்ப்பதற்கே விரும்புகின்றான்
நாம் கட்டிப்புரண்டு காறி உமிழ்வதே
உள்ளுர எதிரிகளின் எதிர்பார்ப்பு
எண்பதில் இருந்து இதையே நாமும் செய்கிறோம்
எப்பிடி விடுதலை சாத்தியம்
எமக்குள்ளும் எதிர்கட்சிகள் அதற்குள்ளும் குழுக்கள்
ஆளும் கட்சிக்குள்ளும் எதிர்கட்சிகள்
இந்த அரியவகை அரசியல் சித்தாந்தை
இனத்தை இழிவுபடுத்தி உருவாக்கிய கீர்த்தி எமக்கே
ஒரு கக்கூசை கட்டுவதற்கு கூட
கயிறிழுத்தல் போட்டி
ஆயிரம் ஆய்வுக்கட்டுரைகள்
ஒரு கொடியை ஏற்றுவது எக்காலம்
மனசெல்லாம் புண்கள் வலிக்கிறது
சிலுவையில் இருக்கிறவனை
ஆளாளுக்கு வந்து ஆணி அடிப்பதுபோல் இருக்கிறது
அன்னியனை நரி என்றோம்
ஏன் அவதானமாக இருக்கத்தெரியவில்லை
அன்றி எங்களுக்குள் ஒரு நரியை வளர்த்தெடுத்து
அடிவேரோடு சரிக்கும்படியான வித்தைகளோடு
அவன் பக்கம் ஏன் அனுப்பத்தெரியவில்லை
குள்ளப்புத்தியோடு வாழ்தல் சுபம் என்பதாலா

உங்கள் தீக்குச்சிகள் இளவாளித்துவிட்டதை
இன்னும் ஏன் உணரவில்லை
இப்போதும் பலபேருக்கு
தூரத்தில் வெடிச்சத்தம் கேட்கவும்
இழுத்துப்போர்த்திக்கொண்டு படுக்கவும்
விடிந்தவுடன் கடவாய் துடைக்காமல்
சந்தியில் பேப்பர் வாங்கி
காவலரண் தகர்ப்பை எட்டாம்ப்பக்கம்வரை
பூஞ்சிப்பூஞ்சிப்பார்த்து புளுகித்தள்ளி
தங்கள் வீட்டில் வலியின்றி வாழத்தான் விருப்பம்
அடுத்தவர் பிள்ளைகள் வீழ்வதிலும்
அதன் சூட்டில் வாழ்வதிலும் இன்றுவரை
இழிபிறவி ஆசைபலருக்கு
வேடுவன் ஒருவன் எம்மை
குலம்கோத்திரம் சொல்லி
தூசணத்தால் தூற்றுகிறான்
வேலிதாண்டாமல் அகிம்சையின் இருப்பிடமாய்
கைகட்டி நின்றோமே ஏன்
இன்றல்ல பிழை வரும் வழிகளெல்லாம்
நாம் விட்ட தவறுகளுக்கு
அறுவடைகளை அறுத்துக்கொண்டிருக்கின்றோம்.
செவ்விரத்தையை செவ்வந்தியை துளிசியைகூட
சந்தேகப்படவேண்டியிருக்கின்றது
இரவு அவை பரிகள் நரிகளானதுபோல்
கஞ்சாவாய் மாறிவிட்டால்
மாணிக்கவாசகர் நிலை என்ன
மக்காள்
எஞ்சியிருக்கும் ஈழத்தமிழினத்தை
எப்பிடி சிதைவில் இருந்து மீட்கலாம்
சிந்தியும்
அதுவே உத்தமர்களுக்கு செய்யும் உன்னத கடமை
சள்ளை விழுமென
பிள்ளைபெறாமல் இருக்காதீர்கள்
ஈன்றெடுங்கள் இமயங்களை
வன்னிமகன் என்றும் வான்விழி என்றும்
நல்லினி என்றும் நாமகள் என்றும்
மலரவன் என்றும் மனுநீதி என்றும்
மனதுவிரும்ப பெயரிடுங்கள்
பெயர்களே அவர்களை பிழைவிடாது நடக்கவைக்கும்
இனமானத்தை பட்டவர்த்தன உண்மையாய்
முப்படைகளோடு காட்டிய நீங்கள்
இரவுபகலாய் இதிகாசபுரட்டுக்களை
தொலைக்காட்சிகளில் காட்டி
எங்கள் இனிய சந்ததியை
குரங்கு வரம்தரும் என பொய்மைக்குள் புதைக்காதீர்கள்
குறத்திதான் மறத்தீயாய் இருந்தாள்
அவள்தான் எங்கள் மூதாதை
அரியாத்தைதான் ஆனையை அடக்கியவள்
அவள்தான் எங்கள் றோல்மொடல்
ஒரு தமிழ்மன்னனின் மனைவியாய்
மதிவதனி என்பவள் இருந்தாள் என்பதை
சொல்லிவையுங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு
பண்டாரவன்னியனின்  படை தளகர்த்தன்
குமாசிங்க முதலியார்
வெள்ளைகளால் தூக்கிலிடப்பட்ட
வட்டுவாகல்மரமிருந்த நிலத்தில்
கரிகாலன் என்ற மன்னன்
ஈராயிரத்து ஒன்பதில் தன் குடும்பத்தையே
மண்ணுக்காய் கொடுத்தான் என்பதை
குறித்துவிடுங்கள் பிள்ளைகளின் நெஞ்சில்
நினைவுகளை அட்சரம் பிசகாமல்
அடுத்த சந்ததிக்கு கடத்துகின்ற கடமையை
இந்த புனித கார்த்திகை தருகின்றது பூசியுங்கள்!