Monday, September 12, 2016

பொன்.காந்தன் : நந்திக்கடலுக்கான பாதை

பொன்.காந்தன் : நந்திக்கடலுக்கான பாதை: நந்திக்கடலுக்கான பாதையில் புதைந்து போன குழந்தைகளின் ஒலிகள் சதை கிழிந்து தலை சிதறி கதை முடிந்த அன்னையர்களின் ஒலிகள் எனக்கு இப்போ...

பெருமூச்சு




முதலில் கொல்லாதே
என்னை கொல்லாதே
பிறகு குத்தாதே குத்தாதே
அடுத்து
அப்பனை நம்பாத
செத்தான் செத்தான்
தகரங்கள் போத்தில் கண்ணாடிகள்
தாறுமாறாய்
உடைந்து விழும் சத்தம்


பதறி எழும்பி
பக்கத்து வீட்டுக்காரரையும்
தட்டி எழுப்பி
தாழ்வாரத்தில் கிடந்த
தடி இரண்டெடுத்து
கொடுக்கு கட்டி
கூக்குரல்
சண்டை குழறல்
சத்தம் வந்த பக்கம் ஓடினேன்
ஒரு நாலைந்து முற்றத்தில்
நாரி முறித்தாட
ஊரிப்பட்டது கைதட்ட
நிண்டு பார்த்தேன்
ஒண்டுமில்லை
இண்டைய சினிமா பாட்டுத்தான்
என்னை எழுப்பி
இவ்வளவிளைக்க ஓட வைச்சிருக்கு
மண்டை குழம்பி ஒண்டும்பேசாமல்
இல்லம் திரும்பினேன்
எங்கேயோ மெல்லிதாய்
தேன் கிண்ணத்தில்
பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
பூவாடை வீசி வர பூத்த பருவமா
காற்றில் கலந்து கொண்டிருந்தது
எல்லாத்துக்குமாய் சேர்த்து
என்னிலிருந்து ஒரு பெரு மூச்சு

பக்தி



மாம்பழத்துக்கு மல்லுக்கட்டினாய்
முன் கோபம் உனக்கு
சுள் என்று மூக்கில்
கோபித்தாய்
மயிலேறிப் பறந்தாய்
மானஸ்த்தான் நீ
புலுடாக்கள் உனக்கு பிடிக்காது
உலகை சுற்றிக் காட்டினாய்
ஓர்மத்தொடு
கோவணாண்டியாய்
கிழவிக்கு தோன்றினாய்
பாடப்பெற்றாய்
பரவசமாயிருந்தது
இயல்பான குணங்களுடன்
உன் இயற்கை
எல்லோருக்கும் பிடித்திருந்தது.
முதலாம் புலிகேசி நீ
சுட்டபழம் சுடாத பழம் தந்த
முதலாம் வடிவேலு
இடைக்கிடை யார் துன்புற்றழைத்தாலும்
தலைமை தாங்கி தளபதியாகி
களமாடுவாய் தோழர் சே போல
அதுவரை எல்லாம் நலம்
உன்னை நம்பினேன்
நேற்றோ
உன் திருமுகத்தை
கையேந்திகளின் தேசத்தில்
பட்டுப் பீதாம்பரத்துள்ளும்
கொட்டிக் கிடந்த
தங்க நகை சாத்துப்படிக்குள்ளும்
தேடிக் கண்டு பிடிக்க பட்டபாட்டில்
ஒரு பணக்கார கந்தசாமி
பாடப்பெற்றான்

விலகி வழி விட்டேன்
வர்ணங்கள் கடந்து சென்று கொண்டிருந்தன
நதிகள் இரண்டு பாய்ந்துகொண்டிருந்தன
பறவைகள்
கூட்டம் கூட்டமாய்
எங்கிருந்தன!!
அருகே ஆயிரம் நிலவுகள் உரசிக்கொண்டு
இங்கேயுமா வானம்!!
இன்னும் விலகி ஓரமாய் நின்றேன்
இன்னதென்று உரைக்கமுடியா
அழகிய பட்சியொன்று
அதன் இனிய பாடலில்
நானுமிருந்தேன்..
அன்பே
இரவு திடுக்கிட்டு எழுந்துவிட்டேன்
என்
இதயத்துக்குள் இருக்கும் உன்னை
ஒரு வெள்ளை வான்
கடத்த வந்தது போல் ஒரு கனவு
நீ வந்து விட்டது போல் நிஐம் எப்போது!

குசினிக்குள் போனேன்
அடுப்புக்குள் படுத்திருந்த பூனை
அன்ரனா வழியேறி
அப்பால் ஓடியது
கொடுப்புக்குள் சிரிப்பெனக்கு

சந்திப்பு +காலம்




அவர் நீண்ட காலத்திற்கு பின்
என்னை சந்தித்தார்
கனகாலம் நலமா என்றார்
நலம் என்றேன்
காந்தன் எப்பிடியிருக்கிறான் என்றார்
அதிர்ந்து போனேன்
அது நான்தான் என்பதற்கிடையில்
பழைய மாதிரி
இப்பவும் அவன் குழப்படியா என்றார்
இல்லை இல்லை
இப்ப குறைவு என்றேன்
அரசியல் தேசியம் எண்டு
ஏதோ கத்துறான் என்றார்
எப்பவும் அதுதான் என்றேன்
கவிதையெண்டும் ஏதோ
இடைக்கிடை எழுதுறான் என்றேன்
உந்த விசர்க்குணம்
படிக்கிற காலத்திலேயே
அவனுக்கு இருந்தது என்றார்
கடுமையாக கோபம் வருமே
அவனுக்கு என்றார்
இல்லை இப்ப கொஞ்சம் சாந்தம் என்றேன்.
அப்ப அவன் சூப்பி ரவி
எங்கே என்றேன்
ஆர்.....ஹாஹா
நான் தான் அது என்றார் அவர்

நந்திக்கடலுக்கான பாதை




நந்திக்கடலுக்கான பாதையில்
புதைந்து போன குழந்தைகளின் ஒலிகள்

சதை கிழிந்து தலை சிதறி
கதை முடிந்த
அன்னையர்களின் ஒலிகள்
எனக்கு இப்போதுவரை கேட்கிறது

நந்திக்கடலுக்கான பாதையில்
காயமுற்று
மருந்துகள் இன்றி வலி பட்டு
உயிர் போன உறவுகளின் ஓலம்
குடும்பமாய் எச்சமின்றி எரிந்துவிட்ட
சாம்பலில் எழுந்த
ஏக்கக் குரல்கள் எனக்கு இதுவரை கேட்கிறது.

நந்திக்கடலுக்கான பாதையில்
ஊரிழந்தவனின் கடைசி மூச்சின் ஒலி
அகதி ஒருவனின் ஆன மட்டுமான துயரம்
எனக்கு கேட்டுக் கொண்டே இருக்கிறது

நந்திக்கடலுக்கான பாதையில்
இசைப்பிரியாவை இழுத்துச் செல்லும்
வேட்டை நாய்களின் கடிபாடு
இரைகண்ட குரைப்பு
கண்டல் நிலத்தில் விறாண்டிய நக ஒலி
ஒரு முயல் குட்டி
வெறி நாய்களை கடவுளாய் வரம் கேட்ட
வறண்ட கெஞ்சல்
எனக்கு இதுவரை கேட்கிறது

நந்தி கடலுக்கான பாதையில்
உன் திசைகளில் இருந்து
பாய்ந்த எறிகணைகளில்
உன் திசைகளில் இருந்து புறப்பட்ட
யுத்த விமானங்களில்
டாங்கிகள் கொட்டிய குண்டுகளில்
செவிப்பறை கிழிந்த
எனக்கு எல்லாம் கேட்டுக்கொண்டிருக்கும்போது

வீரனே கமால்
உமக்கு மட்டும் நந்திக்கடலுக்கான பாதையில் ஏதும் கேட்க வில்லை

துட்ட கைமுனுவின் கனவாக
சிங்கபாகுவின் வாளாக தீட்டப்பட்டு
எம்மிடம் அனுப்பப்பட்ட உங்களிடம்
தட்டு நிறைய சுமந்து செல்லும்
வெண் தாமரைகள் எந்த இரக்கத்தையும் அறிவித்திருக்கவில்லை

நந்திக்கடலுக்கான பாதை நோக்கிய
உனது நாட்களில்
உனது கிராமத்துக்கும்
உனது சுற்றங்களுக்கும்
காட்டுமிராண்டியாய்
அறிவிக்கப்பட்டிருந்த பிரபாகரனை
புனிதமாக்கும்
உன் நந்திக்கடலுக்கான பாதையில்
வெறி கொண்டிருந்த
ஆண்குறிகள் பேசாது என்றும்
மார்புகளில் விறாண்டிய நகங்கள்
எழுதாது என்றும்
யோனிகளை பிளக்கச் சொன்ன உனது
காற்றில் கலந்திருக்கும் சங்கேதங்கள்
மொழி பெயரா என்றும்
பொம்மைகளின் ஏக்கத்தோடு முடிந்த
குழ்ந்தைகளின்
மறு பிறவி உன் சந்ததிகளிடம் புகுந்து
அலைக்க
கட்டி வைக்கப்பட்ட
புனித யானைகளிடம் மதம் ஏற்றி
தெருக்களை துவம்சமாக்குமெனும்
அமானுஸ்யம் உண்மையில்லையென்றும்
நம்புகிற
உன் நந்திக்கடலுக்கான பாதை
உங்கள் படைகளால் பரிசளிக்கப்பட்ட
எமது எல்லா மரணங்களும்
நிகழ்ந்த வீடுகளிடையே
எதுவரை போகும்!