Sunday, July 3, 2016


பெருங்கோபுரம்





ராஜராஜசோழன்
பெருங்கோபுரத்தை கட்ட
எத்தனை பேர்
எத்தனை நாட்கள்...
எப்படிகட்டினார்கள்
படித்ததுபோதும்.
பெருமையடித்து பீற்றியதுபோதும்
ராஜராஜசோழனின் பேரனின்
பல்லாயிரம் கல்லறைகளை
உடைத்தெறிந்தார்கள்  எப்படி
யார் உடைத்தார்கள்
எங்கு உடைத்தார்கள்
தேடுங்கள்
கண்ணீர்விடுங்கள்
கோபப்படுங்கள்
ராஜராஜசோழனின் கோபுரத்தையாவது
காப்பாற்றவேண்டாமா

வரலாறு









               சிலர் கடவுளும் தாமும்
              ஒரே காலத்தவர்கள் என்று மகிழ்ந்தார்கள்.
             வேறு சிலர்
              உலகத்தின் முதல் வார்த்தை
             தம்முடையதென்று பெருமிதப்படுகின்றார்கள்.
இன்னும் கிறிஸ்த்துவுக்கு முன் பின் என்று
உலக மாந்தர்கள்
தமக்கு வரலாற்றுக்குறிப்பு வைத்துக்கொள்கிறார்கள்.
நம்மில் சிலருக்கோ
நேற்று நடந்ததே ஞாபகத்தில் இல்லை
இப்படி யாரும்
உலகத்தில் யாரும் தடுமாறியதில்லைப்போல்..

துரதிஸ்டம்








நங்கூரமிட முடியவில்லை
துறைகளில் வரவேற்க யாருமில்லை
எங்கோ கரைகளில்
ஒதுங்கின்றது நம் கண்ணீர்.
குமுதினிப்படகாய்
கிளாலிக்கடலின் இரவுப்பயணங்களாய்
இன்னமும் நம்துயர்
நவுறுதீவிலும் பப்புவாநியுகினியிலும்
ஒதுங்குகின்றது ஒரு சொட்டுசூரியனுடன்..
அகதியாய்
சொல்லக்கூடியது இப்போது எதுவாய் இருக்கிறது
இராமேசுவரத்தையும் கடந்துபோவதுதான்
சோழர்பரம்பரையின் துரதிஸ்டம் என்பதை தவிர...

உன்னைப்போல்






எவளோ ஒருத்தி பேரழகியென்று
யார்யாரோ பிரமிக்கும்போது
அவள் உன்னைப்போல இருப்பாளா என்று கேட்டேன்.
உன்னைப்போல அழகிக்காக
ஏங்குகிறது நிலம்.
நீ அழகாய் இருந்த கணத்தில்
நீ  அழகாய் நடந்த நிலத்தில்
நீ அழகாய் பேசிய வார்த்தைகளோடு
ஒரு ஓவியத்துக்கும்ஓவியனுக்குமான துாரத்தில்
நானுமிருந்தேன்.
நான் பிரமித்த நாட்களில்
சொர்க்கத்துக்கு சாட்சியாய் நீயே இருந்தாய்
என் நிலம் இழக்க விரும்பாததது உன்னையும்தான்.
உன்னைப்போல பெண்கனை ஆண்கள் மணக்க விரும்பியதை
என் தெருக்களில் நான் அறிவேன்.
துரியோதனர்களிடம் நீ சிக்காதிருக்க
இதிகாசம் ஆசைப்பட்டது.
நந்திக்கடலோரத்தில்
உன்னை மான் போல துரத்தி
மலர்போல பறித்து
மயிலிறகாய் பிடுங்கி
பெரு வாய் பிளந்த   கொடூர மிருகங்கள்
உன்னை பங்குபோட்டுக்கொள்வதில்
நிச்சயம் ஒரு போர்  செய்திருக்கக்கூடும்.
உன் துயரில் இருந்து ஆறுதல் பெற
நீதான் வரவேண்டும்.
ஒருகோடி காதல்வரிகள்
உனக்கு அஞ்சலியான துயர்
பேரழகிகளை கண்ட எந்த கவிஞர்களுக்கும் வராதிருக்கட்டும்.

ஒரு ஊரின் நாட்குறிப்பு !






ஏரிக்கரையில்
படுவான்கரையில்
சூரியன்
மொய்ப்பதாக
அங்கு
வேர் வாசம்கொண்ட மலர்கள்
நோவாவின் பேழைக்கு
விண்ணப்பித்தன
பி.பி.சி காற்றில்.

தூளிக்கும்
ஊஞ்சலுக்குமான கயிறுகள்
தூக்குக்கயிறாகிறது
மீன்பாடுகிறது
தேன் நாட்டில்.

அரிதாரத்தோடு
அதிகம் பழக்கப்பட்டவர்கள்முன்
ஒட்டுப்புன்னகைகள்
எப்படி செல்லுபடியாகும்.

கறவைகள்
மடிநொந்து அலறவும்
தேன் கூடுகள்
வீங்கிப்பெருத்து
நிலத்தில் விழுந்து சிதறவும்
வரம்புகள்
புற்களில் மறையவும்
வசந்தன் பாட்டுக்கள்
வாயிழந்து போகவும்
ஒரு
ஊரின் நாட்குறிப்பு
கனக்கிறது
செருகப்பட்ட வாசகங்களால்.

வர்ணக்கொடிகளோடு
முகவரி இழந்த ஊருக்கு
அணிவகுப்போரே
புண்ணிருக்கும் இடத்துக்கு
காகங்களாய்
போவதென்ன!
முகங்களொடு
பேசத்தெரிந்தவர்கள்தான்
முண்டியடிக்கின்றார்கள்
இதயங்களொடு
இரண்டறக் கலக்கத்தெரிந்தவர்கள்
உலக சிம்மாசனங்களில்
எங்கேனும்
எழுந்தருளியுள்ளாரா!


இதுவரை
கண்ணை மூடிக்கொண்டு
காடுகளில்
தேனெடுத்த தேவதை
நேற்று
தாந்தாமலையில்
உடலெல்லாம்
கண்திறந்து அழுதாள்
சிங்கத்துக்கு
அவர்கள் பிறந்த
உண்மையை
நகங்கள்
மகாவம்சமாய்
அவள் உடலில் எழுதியிருந்தன.

ஏரிக்கரையில்
வாகரையில்
நிலவு நித்தியமாவதாக
அங்கு
மெழுகுதிரிகள்
நோவாவின் பேழைக்கு
ஏங்கித் தவிக்கின்றன

இன்றைக்கும் நாளைக்குமாக !






இது எமது கடைசிப் போசனமாக இருக்கலாம்
இதை எப்படி உண்ணவேண்டும் என்பதற்கு
எங்கள் ஒவ்வொருவருக்கும்
இதுவரை இல்லாத சிந்தனை தேவையாய் இருக்கிறது.
முன்னைய பொழுதுகளில் இதுவும்
பற்றாக்குறையான
புரட்சிக்காரர்களுக்குரிய பழஞ்சோறுதான்
ஆனாலும்
இதை பிசைகிற விரல்கள் ஒவ்வொன்றும்
பேனாக்களாக இருக்கவேண்டியது
நமது வாழ்வின்
இறுதிப்பெரும் உச்சரிப்பாக இருக்கும்.



கவளம் ஒவ்வொன்றுக்காகவும்
உதடுகளைத் திறக்கிறபோது
முகங்களை முகங்கள் பார்க்காமல்
இருந்துவிடப்போவதில்லை
நாம் எத்தனை சவால்களை
ஆட்டிவைத்தவர்கள்.
ஆனால்
இக்கணங்களை ஏனோ
எம்மால் எதுவும் செய்யமுடியவில்லை.
பிரிவின் வரவேற்பறையில் இருந்துதான்
நாம் உணவருந்துகிறோம்



இங்கேதான்
வாழ்வின் மிக ஆனந்தமான கணங்களை
உருவாக்க முடியும்.
இக்கணத்தில் வருகின்ற சிரிப்புக்கும்
வராத அழுகைக்கும்
சவால் நிறைந்த மனிதர்களாகிய நாம்
சவால் விடாதிருப்போமாக.
ஆனால்
எமது பிணம்கூட
பூமிக்கு சவால் நிறைந்ததாக
நீட்டி நிமிர்ந்து படுத்திருக்கவேண்டும்.



எமை எரிக்கும் தீ கூட
தோற்றபடி எரியவேண்டுமென்று
நினைக்கும் பக்குவம் உடையவர் நாமெனில்
இந்தக்கடைசிப் போசனம்
எவ்வளவு இனிப்பானதாக இருக்கும்.
நண்பர்களே நண்பிகளே
இந்தப்பொழுதுகளில் எமது உறுப்புகள் எல்லாமே
வார்த்தைகளுக்காகப் படைக்கப்பட்டவை.

நமது கடன் !


















வீட்டில் வளர்த்த நாய்க்குட்டி
ஆடு செத்ததற்காய்
விம்மி அழுதிருக்கிறேன்.
மாட்டினை கையாலும்
பூனையின் மேனியை காலாலும்
வருடிவிட்டிருக்கிறேன் சிறுவயதில்.
இப்போது நான் ஒரு குழந்தைக்குத் தந்தை.
இப்போது
நாய்க்குட்டிக்காக
ஆட்டுக்காக அழுவதில்லை
ஆனால்
நிச்சயமாக
அவைக்காக அழுது
கல்லறை கட்டி கும்பிட்டிருப்பேன்
என் காலடியில்
என் ஒவ்வொரு வயதில்
என் மனிதர்களின் மரணங்கள் மலியாதுவிட்டிருந்தால்.


இன்று காலையும் அரசின் விமானங்கள்
எங்கள் கிராமத்தின் மேல் சுற்றின
சிலர் பதுங்கு குழிக்குள் போனார்கள்
பலர் வெளியில் நின்று வானைப்பார்த்தார்கள்
சிலர் தெருவிலே
வழமைபோலவே போய்க்கொண்டிருந்தார்கள்
குண்டுகள் வீசப்பட்டன
கிராமத்தின் ஒருதிசையில் புகைமண்டலம்
சிலர் காயப்பட்டு தெருவால் வேகமாக கொண்டுசெல்லப்பட்டார்கள்
எத்தனைபேர் செத்தார்கள்
பலருக்கு அந்தக்கணக்குத் தான் தேவையாய் இருந்தது.


எனத மனிதர்கள்
நான்
எவ்வளவு மாறிவிட்டோம்
பெருமிதப்படுகின்றேன்.
முடியும்
இந்த மரத்துப்போன எங்கள் மனசால்
எமது உரிமைகளை
மிக விரைவில் யாரிடம் இருந்து
பெற்றுக்கொள்ள முடியும்.
அரசால் எங்கள் மனிதர்களின் மரணங்கள் மலிய மலிய
மரத்துப்போன எங்கள் மனசால்
முடியும்
நாம் நினைக்கின்ற எல்லாவற்றையும் சாதிக்க முடியும்.


சிலவேளைகளில்
அரசின் குண்டுவீச்சில்
மாடுகளும் ஆடுகளும்
நாய்களும்
சிதறிச்செத்தன.
சொல்லிச் சிரித்தார்கள் எம் மனிதர்கள்
நானும் தான்.
முடியும்
எல்லாம் முடியும்
மரத்துப்போன இந்த மனசால்.
எமக்கான எல்லாவற்றையும் கொண்டுவரமுடியும்
எல்லாம்
எங்கள் குழந்தைகளின் கண்ணில் படாதபடி.


றோசாப்பு ஏன் சிவப்பாக இருக்கிறது என்ற
என் குழந்தையின்
வாழ்வின் முதல் கேள்வியில்
என்னுள் ஆயிரமாயிரம் முட்கள் தைத்தன.
எங்கள் குழந்தைகளின் கண்களை
பலமுறை பொத்தவேண்டியவர்களாய் இருக்கிறோம்.
சிலவேளை
எங்கள் முகங்களையும் பார்க்காதபடி
ஆனாலும்
எங்கள் முகங்கள் எங்களுக்கு மட்டுமே.
நியாயமாக இருக்கட்டும்
இந்த முகத்தை வைத்துக்கொண்டு
முடியும்
இழந்த எல்லாவற்றையும் கொண்டுவரமுடியும்
எங்கள் குழந்தையின் கண்ணில்
நாய்க்குட்டிக்காகவும்
ஆட்டுக்காகவும் கண்ணீரையும்
மாட்டின் மீதான பூனையின் மீதான வருடலையும்
கொண்டுவர முடியும்.
இல்லையெனில்
நாம் மரணித்துக் கிடக்கையில்
எமது பிணம் எதிர்பார்க்கக்கூடிய
எமது குழந்தையின்
மாபெரும் அழுகை இல்லாதிருக்கும் சாபக்கேடு
எமை சிதையில் வதைத்தெரிக்கும்.

யோவ்ஸ் பிஸ்கர் கோயாக்


  2013தை-கார்த்திகைவரை சிறையில் இருந்தபோது எழுதப்பட்ட கவிதை







ஒல்காபெர்ன்கோல்ட்ஸ்

பட்டிணியாலும் மரணங்களாலும்

பதட்டத்தாலும் ஏக்கத்தாலும் உறுதியாலும்

நான் உனது சாயல்

நீ ஆரஞ்சின் நிறம்

நான் எரிந்து முடிந்த சூரியனின் நிறம்

உனக்கு பனித்துருவம்

எனக்கு நந்திகடற்கரை

உனது சனத்தைப்போலவே

எனது சனமும்

பட்டணங்களை இழக்கவிரும்பாதவர்கள்.

இந்த குறிப்புகளோடு

சுமார் எழுபது ஆண்டுகளின் பின்

உன்னை

என் சிநேகிதியென அழைக்க விருப்பமாயிருக்கின்றேன்.





இப்போது நான் காலிக்கடலோரம் பூசாவில் இருக்கின்றேன்.

சுமாராக உன்னைபோல

ஆயிரம் முற்றுகை நாட்களை  கடந்தேன்

மரணங்களின் எச்சமாய்

உப்புவெளிக்கு அப்பால் எறியப்பட்டேன்.

உயிரை கொண்டோடியவனை துரத்திப்பிடித்து

உயிர் கிழிய கிழிய பறித்து

என்னுள் சொருகிக் கொண்டது போல அந்த ஞாபகம்.

பல இலட்சம் சம்மட்டிகள் சூழ்ந்து ஓங்கியடித்தன.

‘‘ தான்யாவின் குடும்பத்தில் எல்லோரும் இறந்துவிட்டார்கள்

தான்யாவைத்தவிர‘‘என்று

குறிப்பெழுதக்கூட

என் தான்யாவுக்கு அவகாசமில்லை.

என் பட்டணங்ளை முற்றுகையிட்ட

முகங்களின் பின்

நான் காணக்கிடைத்தவைகளால்

ஓ! நீயுமா! நீயுமா!! நீயமா!!! என்று

கேட்டுகேட்டு இழந்திருந்தேன்.





உயிர்ப்பாதைகள் மூடப்பட்ட 

கடலோர மணலில் என் சனம்

பசி வருத்த ஏதோ செய்துண்டது

நாம் உண்டது உரொட்டியா மண் கட்டியா என்பதுகூட

உணராப் பசியிலிருந்தோம்.

பொருக்கவெடித்த நதியின் தாகத்தால்

மேலான ஒன்றை தனதாக்க காத்திருந்தபோது

ஓ! நீயுமா! நீயுமா!! என்ற குரல்கள்

நெஞ்சை அடைத்துவிட்டன.

பல நுாறு மைல்களில் என் தாய் நிலம்மூடி

மலர் வளையங்களை வைக்க நினைக்கும்

என் கரங்களை

ஒல்கா பெர்ன்ட் கோல்டஸ்!

என் சிநேகிதி

நீ இறுகப்பற்றக்கூடும்.





பிஸ்கர் யோவ்ஸ் கோயாக்கில் தலை சாய்த்து

நினைவுகளை வருட உன்னால் முடிகிறது

என்னால் முடியவில்லை

உடைக்கப்பட்ட கல்லறைகளை பொறுக்கியெடுத்து

பிஸ்கர் யோவ்ஸ் கோயாக் எழுப்ப கனவு காண்கிறேன்.

அதுவரை சிநேகிதி!

உன் வரிகளில் சிலதை

உச்சரிக்க அனுமதி கொடு

இதோ எடுத்துக்கொள்கிறேன்

‘‘பலர் இங்கே உறங்குகிறார்கள்

இவர்களின் பெயர்களோ

எத்தனைபேர் புதையுண்டு கிடக்கிறார்கள் என்பதோ

நமக்கு சரியாக தெரியாது

ஆனால்

எல்லோரும் தெரிந்து கொள்ளவேண்டியது இதுதான்

நாங்கள் யாரையும் எதையும் மறந்துவிடவில்லை

மறந்துவிடவும் மாட்டோம்‘‘

நன்றி என் ஆரஞ்சு நிறத்தவளே!

என் பட்டணத்தை சூழ்ந்தவர்களின்

மமதையின் பின்னால் இருந்த

முகங்களிலொன்றை கண்ட

என் மரணித்த தான்யா

நீயுமா லெனின் கிராட் என்றும்

உச்சரித்து மாண்டாள்

என்ன செய்ய!







(2013தை - கார்த்திகை வரை சிறையில் இருந்தபோது எழுதப்பட்ட கவிதை)

 -பொன்.காந்தன்-  




குறிப்புக்கள்...

லெனின்கிராட் -- ஏழு இலட்சத்துக்கு மேற்பட்ட கிட்லரின் படைகள் சூழ்ந்து கிட்டத்தட்ட தொள்ளாயிரம் நாட்கள் முற்றுகையிட்டு சுமார் 1500 டாங்கிகளாலும் விமானங்களாலும் தொடர்ந்து குண்டுகள் பொழியப்பட்டு உயிர்ப்பாதைகள் மூடப்பட்டபோது துருவப்பனிக்குள் நின்று எதிர்த்துப்போரிட்ட சோவியத் மக்களின் புரட்சி நகரம். இங்கு சுமார் பத்து இலட்சம் பேர் வரைஇறந்ததாக நம்பப்படுகிறது.


தான்யா -- லெனின் கிராட்டில் 1941-1942ல் போரில் இறந்த சிறுமி


உயிர்ப்பாதை -- முற்றுகையாளர்களது லெனின்கிராட்டில் எல்லா பாதைகளும் மூடப்பட்டபோது.பனிப்பாறைகளின் மேல் உருவாக்கப்பட்ட உணவுக்கான வரவுப்பாதை.


ஒல்காபெர்ன்கோல்ட்ஸ் -- லெனின்கிராட் முற்றுகையின்போது வாழ்ந்த பெண் கவிஞை


பிஸ்கர் யோவ்ஸ் கோயாக் -- லெனின்கிராட் முற்றுகையின்போது இறந்த அந்த நகரவாசிகளை புதைத்த பலபத்து ஹெக்டயர் பரப்பில் எழுப்பட்ட கல்லறையின் பெயர்.

அம்மாவின் நாட்கள்



துாரத்தில்
எங்கோ கேட்கும்வெடிச்சத்தங்களால்
நான் எத்தனை முறை
செத்திருப்பேன் என்பது
எனக்கு மட்டுமே தெரியும்

நீ எங்கோ நின்றிருந்தாலும்
வெடியோசை கேட்குமிடத்தில்தான்
நீ நிற்கிறாயென எண்ணி
இதயம் எங்கெங்கோ மோதுண்டு
விழுந்து களைத்திருக்கும்.
நான் உன் அன்னையல்லவா மகனே!
இப்போது
வெடிச்சத்தங்களும் இல்லை

நீயுமில்லையடா மகனே!

அம்மாவின் விடுதலை




பத்திரிகையை பக்கம் விடாமல்
அவசரமாய் படித்தாள் அம்மா.
இளம்பெண்கள் யாரும்
அவர்களால் கைது செய்யப்படவில்லை.
பெருமூச்செறிந்தாள் அம்மா.

ஆழ்ந்த விடுதலை அவள் முகத்தில்.

அவளின் இரவு






முந்தநாள் இரவும்
அவள் முதலிரவுப்பெண்போலஇருந்தாள்.
மூன்று பிள்ளைகள் பெற்றாயிற்று.
மூத்தவள் கூட
இன்னும் ஓரிரண்டு வயதில் பருவப்பெண்.
பதினைந்து வருடங்கள் ஆயிற்று
நம் இல்லற வாழ்க்கைக்கு.

அவளும் நானும் சண்டைகள் பிடித்ததுண்டு
எப்பொழுது எப்படி
 சமரசம் செய்துகொண்டோமென்று தெரியவில்லை.
முப்பது பிள்ளைகள் பெற்றுக்கொள்ளும் அளவில்
அவளுக்கும் எனக்குமிடையில்
நமது இதயமிருந்தது.
அவளை முழுமையாக நினைக்கின்ற
இரவுகளில் ஒன்று இது.
இப்போதுதான் நம்
நான்காவது பிள்ளைக்காக
அவளை பிரவசவிடுதியில்

அனுமதித்துவிட்டு வந்திருக்கின்றேன்.