Friday, September 2, 2011

எருக்கலைகளின் காலம்



-nghd;.fhe;jd;


இக்காலத்தை
எருக்கலைகளின் காலம் என்று எழுதிவையுங்கள் நண்பர்களே!
ஒவ்வொரு தமிழனுக்குள்ளும்
எருக்கலை அடர்ந்து வளரட்டும்
சிறு வயதில்
எருக்கலைகளின் மலர்களில இருக்கும் ;மூக்குத்தியை
அணிந்து மகிழ்ந்ததுண்டு
ஆயினும் எருக்கலைகள் ஆழமாக என்னை
வசீகரித்ததில்லை
சில ஞாபகங்கள் இருக்கின்றன 
எருக்கலைகள் பற்றி
எங்கள் வீட்டில் ஆடுகள்
குட்டி ஈன்றபொழுதுகளில்
இளங்கொடிகளை ஒரு பையில் கட்டி
பின் எருக்கலைகளில் கட்டி விட்டதுண்டு
அநேகமாக ஊர் வழமை இது
எருக்கலைகளில் இளங்கொடிகளை கட்டினால்
அதிகம் மடிகளில் பால் சுரக்குமாம் என்பது அய்தீகம்

எருக்கலை பால் மரம்தான்
இருந்தபோதும் ஆழமாக அது;;
முன்பு என்னை வசீகரித்ததில்லை
அதற்குள் இருக்கின்ற ஆழங்கள் பற்றி
உண்மையில் உணரத்தவறிவிட்டேனோ
என்று மனம் அங்கலாய்க்கின்றது.
ஆத்மாக்கள் பேசிக்கொள்ளக்கூடிய
ஒரு உன்னத மொழியை
உணரும் வல்லமை
எருக்கலைகளுக்கு மட்டும்தான்
கைவரப்பெற்றதோ என்று
ஆச்சரியமுறுகிறேன்.
நண்பர்களே!
வெட்கத்தைவிட்டு
அச்சத்தை விட்டு
இருளின;;y; பெரும் சுவர்களில் மோதுண்டு
பிரகடனம் செய்கிறேன்
தமிழர்களின் இக்காலத்தை
எருக்கலைகளின் காலமென்று எழுதிவையுங்கள்.

எங்கள் சொர்க்கம்
கண்டக்கோடரிகளால் பிளக்கப்பட்டு
முத்துப்பரல்களும்
ஓம குண்டங்களும்
தர்ம சாத்திரங்களும்
புதையல்களும்
புனிதங்களும்
இன்பக்கலசங்களும்
ஒப்பாரி ஆற்றிலே மிதந்து போக
சதைத்துண்டங்களையும்
கட்டியழ முடியா
அகதி வெளியில் 
பாறுண்ட விருட்சத்தின் பாடலை
பாடிட நிர்ப்பந்தமான
எனது இனத்தின் ஏதோ ஒன்று செத்துநாறும்
காலத்தில்
எருக்கலைகளின் காலத்தை
நான் எழுதத்துணிந்தேன்.

ஒரு காலத்தில் நாம்
கண்ணீரும்
நம்பிக்கையும்
சத்தியமும் 
நெருப்பும் 
உண்மையும ;வேகமும்
காற்றும் கடலும் வரலாறும் கலந்து
கோயில்கள் கட்டினோம.;
எங்கள் இனம் மொத்தமும்
கட்டுண்ட கிடந்த கணப்பொழுது
அங்குதான் இருந்தது.
ஒவ்வொரு கல்லறையும்
ஒவ்வொரு மூலஸ்தானம்
கோபுரமாகக்கூட இருக்கலாம்.
வானமாகக்கூட இருக்கலாம்
மலர் மேனியாகக்கூட இருக்கலாம்
என்னால் சரியாக சொல்ல முடியவில்லை
அம்மா அற்புதமாகச்சொல்லுவாள்
அவள்கருவறையில் இருந்து வருகின்ற வார்தைகள் அவை.
அம்மாவின் பிள்ளை உரிமைக்களத்தில் குதித்தது தொட்டு
விடுமுறையில் பிள்ளை வந்து போவது ஈறாக
வெடியும் குண்டொலிகளும்
கேட்கும் நாட்களுடன்
பிள்ளை வித்துடலாக வந்த நாட்களுடன்
கோயில்களில் பிள்ளை விதைக்கப்பட்டு
கல்லறை எழுந்த காலம் வரை
அதன்பின்னும்....
அம்மாக்களின் எழுதமுடியாத கவிதைதான் அற்புதம்
அம்மா நல்லாச் சொல்லுவாள்
முள்ளிவாய்க்காலில் சாகாமல்
இருந்திருந்தாy;.
நானும் சிறிது சொல்ல முடிந்தது
என் தங்கச்சியையும் ஒரு நாள்
அப் புனித கோயிலில் விதைத்து வந்தோம்.

வரலாறுகளில்
இன்னொரு தேசத்துள்
படைகள் புகுத்தன
போர் செய்தன.
என்று படித்திருக்கிNறேன்.
எனது மண்ணிலும்
சிங்களப்படைகள் புகுந்தன என்றும்
பிரபாகரனை வெற்றி கொண்டன என்றும்
என்றும் ஏராளம் செய்திகள் வந்துவிட்டன.
நிச்சயம்
அது பொய்
மிருகங்கள் போர் செய்ததற்கான சாட்சியங்களே அதிகம்.
ஒரு மனிதன் இன்னொரு மனிதனின் கல்லறையை உடைப்பானா
நிச்சயமாக இல்லை
எவன் கல்லறையாக இருந்தாலும்
எவ்வளவு கொடுர எதிரியாக இருந்தாலும்
என் தங்கச்சி உண்மையாக ஒரு செவ்விரத்தம்
மலரை என்றாலும்
காணிக்கை ஆக்கியிருப்பாள்.

கனகபுரம்  போகின்றபோது
துயிலுமில்லத்தை ஒரு முறை
திரும்பிப்பார்ப்பேன்
என் தங்கச்சியின் உடைத்துக்கிளறப்பட்ட
கற்களேனும்
எருக்கலைகளின் கீழ்தெரிகிறதா என அங்கலாய்க்கும் மனம்
தினமும் மனங்கள் அங்கலாய்த்துச் செல்லும் வீதியது
தினமும் மனிதர்கள் மனங்களால் மட்டும் மலர்கள்
தூவிச்செல்லும் வீதியது.
பார்க்கும் இடமெங்கும் சிங்கள சிப்பாய்களின்
அரண்கள்.
யாருக்கு யார் காவல்?
ஒன்றும் இன்றுவரை தமிழர்களின் மனங்களுக்குள்
வெற்றி கொண்டு ஒரு காவலரணையேனும்
அவர்களால் அமைக்க முடியவில்லை.
ஏனெனில் இது எருக்கலைகளின் காலம்
முன்பெல்லாம் எருக்கலைகள் எங்கெங்கோ வளரும்
இப்போது கல்லறைகள் உடைக்கப்பட்டு
புனித உடல்கள் அவமதிக்கப்பட்ட இடங்களில்தான்
வளர்ந்திருக்கின்றன.
எருக்கலைகளை நான் இப்போது அதிகம் நேசிக்கின்றேன்
எருக்கலைகள் கோபத்தின் மொழியாக
சாபமிடுவதன் அடையாளமாக இருக்கலாம்
தமிழர்களின் வரலாற்றில்
இது எருக்கலைகளின் காலம்
எழுதிவையுங்கள் நண்பர்களே!