Friday, July 20, 2012

உனது மழையும்
எனது வெறிச்சோடிய வானமும்

பொன் காந்தன்


மெய் விழியே ! மெய் விழியே !
நீ எங்கு போனாய்
மெய் மனிதர் வீழ்கையிலே
பொய்யுடுத்து கிடந்தாயோ
இன்றுன் பெயர் என்ன
சாக்காடு முழுதும்
பூக்காடு எழுத
இன்றுதிரும் உன் புன்னகையை
குரங்கு தின்னி பழம் என்று
நம் காலப்போடியன்
கணித்து போவான் .


தாகத்தில் நீ பொழியா மழை
பாவத்தின் அடையாளம்
எனினும்
நீ பொழிவாய்
பூப்பாய்
கனியென இனிப்பாய்
இரக்கத்தின் கடவுள்
இதயம் தொடும் கருணை
எல்லாம் சுமப்பாய்
மானுடம் கரைய
ஊழியை பார்த்து
உட்கார்ந்திருந்த உனதவதாரம்
தேவலோகத்தை சிருஷ்டிக்கும் சக்தியை
எப்போதோ இழந்துவிட்டதை நீ அறியாய்

என்றோ உன்னை சங்கரிக்கப்போகும்
அஸ்திரங்கள்
காலடி மண்ணில் கருத்தரிக்க
நீ எதற்கோ காத்துகிடக்கிறாய்
நான் எதற்கோ காத்து கிடக்கிறேன்

பூமியின் தேகமெங்கும்
உன் நகங்களின் காயங்கள்
காயங்களின் மீது
சில கால சகுனிகள்
மகுடங்களோடு திளைத்து கிடப்பது
உன்கால பூக்களென தெரியும் சிலருக்கு
புளுக்களென நெளியும் எமக்கு .


என் வாசலில் நீ நின்றாலும்
என் வீட்டில் நீ விருந்துண்டாலும்
நான் உனது நண்பன் அல்ல
தேநீர் குவளையும்
உணவு தட்டும்
பூங்கொத்தும்
உனக்கு விரிக்கப்படுகிற
வலையாக இருக்கலாம் .
என் பின்னாலேயே திரி
ஓயாமல் கணக்கெடு
உன் சுவர்களில் என் முகங்களை
ஒட்டிவை
எல்லா ஆலோசனைகளின் பின்னும்
உன்னால்
என் குழந்தையை தூங்க வைக்க முடியாது .