Monday, December 19, 2016

நான் யாரிடமும் பேசவில்லை!












மரணங்களுக்கும் மரணங்களுக்குமான உரையாடல்
தொடரும் விநாடியில்
உயிர்கசியும் ஏக்கத்துக்கும் உயிர்கசியும் ஏக்கத்துக்குமான சந்திப்பு
சிதறுண்ட குழந்தைகளின்
பிஞ்சு விரல்களுக்கும் பிஞ்சுவிரல்களுக்குமான கைகுலுக்கல்
தான்யாவின் குடும்பத்தில்
தான்யாவைத்தவிர எல்லோரும் மடிந்துவிட்டார்கள்
இறுதிச் செய்தி ஸ்ரலின்கிராட்டில் இருந்து முள்ளிவாய்க்காலிற்கு
முள்ளிவாய்க்காலில் இருந்து அலப்போவிற்கு....
முன்னெப்போதும் அறியப்படாத முள்ளிவாய்க்கால்
முன்னேப்போதும் அறியப்படாத அலப்போ
உலகின் சக மனிதர்களுக்கு
ரத்தஆற்றாலும் உயிர்கள் கொட்டுண்ட நிலத்தாலுமே
அறியப்படுத்துவதில்
மிக்க மகிழ்ச்சி உடையவர்களே
உங்கள் முகங்களினால் ஆன இந்த உலகத்தில்
ஒரு குழந்தையின் ஒரு நூற்றாண்டு கால மூச்சை
பனிமலைகள் இடையேயும்
பாலைவனங்களிடையேயும்
நதிக்கரைகளிலும்
கைகோர்த்து இடைதழுவி அணைத்து
ஓடித்திரிந்து ஒட்டிவைக்கும் காதல் இதயங்களை
பூமியை குளிர்விக்கும் மாயவிரல்களை
இதுவரை பார்த்திராத
ஆச்சர்ய கோல்களை உதைக்கப்போகும் பாதங்களை
உங்கள் பிள்ளைகளின் பிரியமான நண்பர்களை
நீங்கள் உங்களுக்கு பிடித்த கட்டளைகளால் கொன்றுவிட்டீர்கள்
வாழ்கிறவர்களுக்காக வணங்கப்படுகின்ற கடவுள் போல்
இறந்தவர்களுக்காக வரும் கடவுள்
இரக்கமுள்ளவனாக இரக்கமாட்டான்
மரங்களும் கட்டிடங்களும் மின் ஒளிச்சாரல்களும் நிறைந்து
நந்திக்கடலோரத்தில் ரம்மியமாக மாறியிருக்கும் இயற்கை
எதுவும் நடவாததுபோல
முளைத்திருக்கும் காட்சிகள்
அலப்போவிலும் நடந்தேறும்.....
அலப்போ என பெரிய எழுத்தில் கரும்பச்சை நிறத்தில்
ஒரு வரவேற்பு பலகையை நட்டுவையுங்கள்
எப்போதாது நான் வரும்போது
ஒரு செல்பி எடுத்துக்கொள்கிறேன்
கைப்பற்றப்பட்டவை
வெற்றிக்கொள்ளப்பட்டவை
எல்லாவற்றையும் அலப்போ வரும் வழியில்
எங்காவது காட்சிக்கு வையுங்கள்
மனதாபிமானத்துக்கான யுத்தத்தை விளக்கமளியுங்கள்
ஏன்சாகுறோம்
எதற்கு சாகிறோம்
எதனால் சாகிறோம்
என்று தெரியாமலே
இன்னும் எத்தனை நூற்றாண்டுகள்
எத்தனை இலட்சம் உயிர்கள்!!
எல்லோரும் ஒரே மாதிரியே இருக்கிறார்கள்
அலேப்போ பற்றி யாரிடமும் நான் பேசவில்லை!!!

No comments:

Post a Comment