Saturday, January 14, 2017

நண்டுகளாய் நடனமாடியும்
மீள்களாய் துள்ளியும்
வெண்நுரைகளாய் பூத்துக் குலுங்கியும்
அந்திப்பொழுதில்
பரிதியுடன் கலந்து
சித்திரங்கள் நூறு வரைந்தும்
வெண்நிலவின் நிழல் ஏந்தி
நீல தேவதையாய்
விடியவிடிய அருகிருந்தும்
அம்மாவின் மடியாய்
அப்பாவின் தோளாய்
தாய் மாமனின் செல்லமாய்
அழுகையை ஆற்ற
கடலே
நீ இத்தனை ஆண்டுளாய்
தவிக்கிறபோதும்
வலம்புரிச்சங்குகளாய்
சிப்பிமுத்துக்களாய்
நிலைத்திருந்த எங்கள் புன்னகைமீது
அந்தக் காலையில்
அத்தனை பொறாமையும்
ஆசையும் நீ ஒரு போதும் கொண்டிருக்கக்கூடாது
அதற்குப்பிறகு
அம்பாப்பாடல்களில்
உனது துரோகமும் இழையோடுகின்றது
நீ காவிச்சென்ற
நத்தார் பண்டிகையில்
மணலில் விளையாடிக்களைத்து
நல்ல தூக்கத்தில் இருந்த
மழலை பிறின்சி
புதுவருடத்திற்கு மருன் வர்ணத்தில்
ஒரு புது சுடிதார் வாங்கி வைத்திருந்தாள்
றீற்றாவுக்கு
திருமணம் நிச்சயமாகியிருந்தது
பேராளி சமரழகி
விடுமுறையில் அம்மாவிடம் வந்திருந்தாள்
நிக்சனுக்கு பல்கலைக்கழகம் கிடைத்திருந்தது
சம்மாட்டியாரின் மருமகள்
தலைப்பிரசவத்திற்கு தயாராக இருந்தாள்

No comments:

Post a Comment