Monday, December 19, 2016

இன்று ஈழக்கவியரசு கவிஞர்புதுவை அப்பாவின் பிறந்த நாள்














எனக்கு கவிதை பிச்சை இட்ட பெருமானாரை
எப்படி நான் வாழ்த்துவேன்
உலைக்களம் உருக்கொள்ளவேண்டிய காலத்தில்
நீ இல்லையோ என்ற கேள்வி
நெஞ்சை கொல்லும் கவிதையே
புதுவை எனக்கு மதுவை ஊற்றியவர்
அதற்குள் நாவண்ணன் நெருப்பை ஊற்றி
நீறு பூக்க வைத்தவர்
புதுவை தந்த விரல்கள்
எப்போதும் வெட்டியாய் இருப்பதாய் தெரியவில்லை
விரல் விட்டு எவர்எவருக்கோ ஆட்டிக்கொண்டே இருக்கிறது.
தமிழை
காங்கிரீட் கலவை ஆக்காதவர் நீர்
மாசிப்பனியெனவும்
மார்கழி தூறல் எனவும்
காப்பணிந்த மகளிர்
களமேகிய வழியின் முத்துப்பரல்கள் எனவும்
பள்ளம் திட்டியென நெளிந்த வன்னி தெருக்களின்
கலவி மயக்கமெனவும்
தன் தலைவனை சாலையோரப்பூவரசின்
பூவில் பிசைந்து
காலத்தில் தீட்டிய மகரந்த வருடலெனவும்
காட்டியவன்
உன் தமிழில் எனக்கும் ஒரு கவளம் ஊட்டியவன்
உன் கர்வத்தில் ஒன்றாய்
உன் முற்றத்துப்பந்தலோரத்தில்
என்னையும் பதியமிட்டாய்
உன் காலடியில் இருந்து
கனவுகளை எடுத்துவைத்தேன்
வாங்கிப்பார்த்து
வகிடெடுத்து தலைசீவி
சிற்ப நுணக்கங்கள் பார்த்து
ஆங்காங்கு தொங்கிய குஞ்சங்களை அறுத்தெறிந்து
நெற்றியில் ஒரு பொட்டுவைத்து
உனக்கேயுரிய நக்கல் நளினங்களுடன்
என்னையும் பார்த்து
நீரும் வெளிக்கிட்டீரோவென
சிலாவி
கருணாகரனை அழைத்து
இதை வெளிச்சத்தில் இடுவென உரைத்த
தொண்ணூறுகளை மீண்டும் தொட்டு வணங்குகிறேன்
வாழ்ந்து முடிக்க வேண்டியிருக்கிறது
உங்களோடிருந்த
ஈரமும் எரிமலையுமான நினைவுகளுக்குள்
காலப்பாதையில்
கழிவு வாய்க்கால்களுக்கும் நடந்து
கடக்கவேண்டிய இத்தருணத்தில்
சாக்கடைப்புளுக்களின் படங்களையும்
இடைச்செருகி இடைஞ்சல்படுகிற இடர்பாடு
வெடியும் மருந்துமான வெள்ளையுள்ளங்களோடு
கவிதை வேள்வி செய்தாய் நீ
நானோ நடிகர் திலகங்களுக்கு மத்தியில்
அடிக்கடி என் மீதும் ஒட்டிக்கொள்கின்ற
அரிதாரங்களை தட்டி ஊதி தடுமாறுகிறபோது
உன் பாதிக்கவிதைதான் வருகின்றது
மீதி ஒரு விசரனின் விடியலுக்கான விஸ்வரூபமாகின்றது
நல்ல வேளை நீ இல்லை என் பிதாவே
இருந்திருந்தால்
நீ அன்று உலைக்களத்தில்
தம்பி விம்மி அழுகிறாள் ஈழத்தாய்
இன்றுன் வேலைகளை ஒதுக்கி
வெளிக்கிட்டுவா
விடுதலைத்தேரின் வடத்தில்
நீயும் ஓர் இடம்பிடி நாளைக்காயென்று
நாரி வலிக்க எழுதி அழைத்தபோது
ஊருக்குள் சேலைக்குள் ஒளித்திருந்த
செட்டியார்கள் எல்லாம்
இன்றுனக்கு பொற்கிழியும் பொன்னாடையும் அளிக்க
இதயம் கருகியிருக்கும் உனக்கு
தப்பிவிட்டாய் கவித்தலைமகனே!
வாழ்க நின் புகழ்

No comments:

Post a Comment