Monday, September 12, 2016

நந்திக்கடலுக்கான பாதை




நந்திக்கடலுக்கான பாதையில்
புதைந்து போன குழந்தைகளின் ஒலிகள்

சதை கிழிந்து தலை சிதறி
கதை முடிந்த
அன்னையர்களின் ஒலிகள்
எனக்கு இப்போதுவரை கேட்கிறது

நந்திக்கடலுக்கான பாதையில்
காயமுற்று
மருந்துகள் இன்றி வலி பட்டு
உயிர் போன உறவுகளின் ஓலம்
குடும்பமாய் எச்சமின்றி எரிந்துவிட்ட
சாம்பலில் எழுந்த
ஏக்கக் குரல்கள் எனக்கு இதுவரை கேட்கிறது.

நந்திக்கடலுக்கான பாதையில்
ஊரிழந்தவனின் கடைசி மூச்சின் ஒலி
அகதி ஒருவனின் ஆன மட்டுமான துயரம்
எனக்கு கேட்டுக் கொண்டே இருக்கிறது

நந்திக்கடலுக்கான பாதையில்
இசைப்பிரியாவை இழுத்துச் செல்லும்
வேட்டை நாய்களின் கடிபாடு
இரைகண்ட குரைப்பு
கண்டல் நிலத்தில் விறாண்டிய நக ஒலி
ஒரு முயல் குட்டி
வெறி நாய்களை கடவுளாய் வரம் கேட்ட
வறண்ட கெஞ்சல்
எனக்கு இதுவரை கேட்கிறது

நந்தி கடலுக்கான பாதையில்
உன் திசைகளில் இருந்து
பாய்ந்த எறிகணைகளில்
உன் திசைகளில் இருந்து புறப்பட்ட
யுத்த விமானங்களில்
டாங்கிகள் கொட்டிய குண்டுகளில்
செவிப்பறை கிழிந்த
எனக்கு எல்லாம் கேட்டுக்கொண்டிருக்கும்போது

வீரனே கமால்
உமக்கு மட்டும் நந்திக்கடலுக்கான பாதையில் ஏதும் கேட்க வில்லை

துட்ட கைமுனுவின் கனவாக
சிங்கபாகுவின் வாளாக தீட்டப்பட்டு
எம்மிடம் அனுப்பப்பட்ட உங்களிடம்
தட்டு நிறைய சுமந்து செல்லும்
வெண் தாமரைகள் எந்த இரக்கத்தையும் அறிவித்திருக்கவில்லை

நந்திக்கடலுக்கான பாதை நோக்கிய
உனது நாட்களில்
உனது கிராமத்துக்கும்
உனது சுற்றங்களுக்கும்
காட்டுமிராண்டியாய்
அறிவிக்கப்பட்டிருந்த பிரபாகரனை
புனிதமாக்கும்
உன் நந்திக்கடலுக்கான பாதையில்
வெறி கொண்டிருந்த
ஆண்குறிகள் பேசாது என்றும்
மார்புகளில் விறாண்டிய நகங்கள்
எழுதாது என்றும்
யோனிகளை பிளக்கச் சொன்ன உனது
காற்றில் கலந்திருக்கும் சங்கேதங்கள்
மொழி பெயரா என்றும்
பொம்மைகளின் ஏக்கத்தோடு முடிந்த
குழ்ந்தைகளின்
மறு பிறவி உன் சந்ததிகளிடம் புகுந்து
அலைக்க
கட்டி வைக்கப்பட்ட
புனித யானைகளிடம் மதம் ஏற்றி
தெருக்களை துவம்சமாக்குமெனும்
அமானுஸ்யம் உண்மையில்லையென்றும்
நம்புகிற
உன் நந்திக்கடலுக்கான பாதை
உங்கள் படைகளால் பரிசளிக்கப்பட்ட
எமது எல்லா மரணங்களும்
நிகழ்ந்த வீடுகளிடையே
எதுவரை போகும்!

No comments:

Post a Comment