Saturday, August 27, 2016

ஊடல்




கதவு திறந்து
அறைச்சாளரம்
யாவும் திறந்து
வா என்றேன்
வரவில்லை
ஆவி நோக
அடங்கா வெம்மையில்
நான் வாட
எங்கே நிக்கிறாய்
கூவி அழைத்தேன்
சாளரம் வழி தேடினேன்
வேலிப்பூவரசின்
காய்ந்த இலை தடவி
கருகி விழுந்த புல் தடவி
முகத்தை சுழித்தபடி
மெல்லச் சாளரத்தால்
வந்தறையில் குந்திற்று காற்று
கடுகடுப்போடு
கதையை தொடக்கினேன்
என்னை உனக்கு தெரியாதோ
அழைத்தபோது
ஏன் அசுமாத்தமில்லை
காலி முகத்திலும்
கசூரினாவிலும்
காக்கை தீவிலும்
சாமரம் வீசும் உனக்கு
என் இளைப்பு எரிச்சல்
எப்படிப் புரியும்
வயல் ஒழுங்கைகளில்
தினம் சந்திக்கும் சோடிகளுக்கு
நீ தான் இதம் கொடுத்து
இனிப்பு ஊட்டுகிறாயாம்
காதல் கடிதமொன்றில்
உன்னையும் பற்றி
ஓரிரு வரிகள் கண்டேன்.
உன் அம்மா அற்புதம்
முற்றத்தில் முன் விறாந்தையில்
என் தலையணைக்கருகே
என் மனமறிந்து உலவுவாள்
இப்போதில்லை
அந்த இனிய சுகம்
நீயோ காதலர்க்கும்
கடும் போதைக்கும்
சரம்போல நிக்கிறாய்
என்று நீட்டினேன்
நிறுத்தென்று
தொடங்கியது காற்று
முட்டாள்
முற்றத்திருந்த
தாத்தா கால வேம்பை
கொளுத்த காசுக்கு
அறுத்தாய் குடித்தாய்
கும்மாளமடித்தாய்
ஏதுமுரைத்தாயா முன்னெனக்கு
லீசிங்கில்
வீட்டில் ஆளுக்கிரண்டு
மின் விசிறி
காலுக்கும் தலைக்கும் வைத்து
கால மோட்டும் உனக்கு
நானெதற்கு
பனை விசிறி
மறந்த உனக்கு
மல்லிகை மணத்துடன்
நான் வந்து
மெல்லிதாய் தடவவேண்டுமா
பண்டிகை பரவச சடங்கெல்லாம்
குளிரூட்டி வைத்து கொண்டாடி
பணப்பெருமை
பறை சாற்றும் உனக்கு
காதோரம்
சில்லென்று போகவேண்டுமா
இப்போதியலா
இனி வரும் மாரியில்
பத்து வேம்பு வை
அதுவரை நான் உன்னொடு
பழகுவதில் அர்த்தமில்லை
ஊடலுடன்
முன் வாசல் வழி
எங்கேயோ போனது காற்று.

No comments:

Post a Comment