Saturday, August 27, 2016

பற்றை





போர்முடிந்து
பொல்லாத வேலிக்குள்
புதைந்திருந்து அகதி வாழ்வு முடித்து
மீண்டும் வந்ததில் மிக்க மகிழ்ச்சி
பூண்டு பிடித்து
மாண்டு கிடக்கும் என் வளவை
மறுசீரமைத்து
தீண்டுவோம் வாழ்வையென்று
தெருவில் இருந்து இறங்கி
தேத்தண்ணி சாப்பாடு
தாங்கிய பொட்டலத்தை
ஆங்கிருந்த வேலிப்பூவரசில்
பூனை தொடாமல் பொருத்திவிட்டு
கூடைப்பையிருந்த
கொடுவாள் கத்தி எடுத்து
சூடை மீன் வெட்ட முன்
சுறுக்கென்று தீட்டும் கல்லில்
இரண்டிழுவை இழுத்து
கூர் தடவி
ஏக்கர் நிறைந்து கிடந்த
நாயுண்ணி பற்றைகளை
பூக்கள் காய்கள் உதிர
கொத்தாய் கொத்தாய்
குலையோடு வெட்டி
குவித்தான் மூலையில் நம்மாள்
அட நாசமாய்ப்போவானே!
ஒரு வார்த்தையேனும்
அந்த நாயுண்ணிகள் பற்றி
நவிலவில்லை அவன்
காணி கிடைத்த சந்தோசம்
ஏணி வைத்து ஏற
எட்டுப்பத்தறையில் வீடுகட்டி
ஏசி பூட்டி
எழுப்பம் விடுவதுதான் அவன் எண்ணமாக்கும்!
கொடுவாள் வெட்டில்
கூனிப்போய் குவிந்துகிடந்த
நாயுண்ணி மரங்களை காணும்போது
நாவில் பிறக்கிறது நம் காலவரிகள்
பத்தினால்தான் பத்தியப்படுபவரும்
மலசலம் இளகிப்போய் இதமாகும் என்பவரும்
வெத்திலை சப்பினால்தான்
வேலை ஓடும் என்றவரும்
முள்ளிவாய்க்காலில்
பத்து நாயுண்ணி இலை
பல நூறு காசுக்கு வாங்கி
சன்னமழைக்குள்ளும்
சப்பி விழுங்கியதை எப்படி மறக்க
இப்பொழுது அதன் பெயர் பத்தை
இன்னும் சில மணியில் அது
அவன் வைக்கும் தீயில் பஸ்பமாகிவிடும்
குத்து மதிப்பாய்
குவிந்துகிடக்கும் நாயுண்ணிகளை
முள்ளிவாய்க்கால் கணிப்பில்
கூட்டிக்கழித்துப்பார்க்கிறேன்
ஒரு எழுபது எண்பது இலட்சம் பெறும்
உதிர்ந்து போன நாயுண்ணிகள்
உள்ளத்தில் வலி கிளறாவிடில்
பறந்து போன பல இலட்சம் உயிர்களை
மறந்துபோனதுபோல் எண்ணுகிறது மனசு!

No comments:

Post a Comment