Saturday, January 14, 2017

வதனி ரீச்சர்

வதனி கவனி
இதுவரை நீ வதனி
இனி
தடைதாண்டி
போட்டி பரீட்சை
விடைதாண்டி
வேலையற்ற
பட்டதாரியென்ற
பழி தாண்டி
படிப்பித்தல் நியமனத்தில்
படியேறுகின்ற ரீச்சர்வதனி
அரச நியமனங்கள்
ஆயிரம் இருந்தாலும்
ஆண்டவனுக்கு அருகில்
அமரும் அதிஸ்டம்
அம்மணி உனக்கு
காலை ஒன்பது மணிக்கே
இதுவரை தொடங்கிய உன் நாள்
நாளையிலிருந்து
அதிகாலை நான்கிற்கே ஆரம்பம்
பள்ளியெழுந்து நீ
அம்மாளாச்சி போலவே
தெருவில் இறங்கப்போகிறாய்
காலை வணக்கம் சொல்லியே
உன்னை ஒரு களங்கமற்ற கூட்டம்
சுற்றிவரத்தொடங்கும்
கைபற்றியிழுக்கும்
புன்னகை பூரிப்பு மௌனம் என
வெள்ளைச்சீருடைக்குள் தோன்றும்
பாசைகளையெல்லாம்
நீ மொழிபெயர்த்தாகவேண்டும்
வதனி கவனி
நேற்றுவரை நீவதனி
இன்று நீ ரீச்சர்வதனி
இனி நீ ஆயிரம் கண்களுக்குள் நடக்கிறாய்
காயதாய் இருக்கும் உன் காதல்கூட
கனியாது போகலாம்
காட்டுமல்லிகை போல
உன் சின்னக்கனவுகள்
வாசம் நுகரப்படாமலே
வாழ்ந்துமுடிந்தும் போகலாம்
ஆழமான உள்ளங்களின் கதவு
உனக்கு அகன்று திறந்திருக்கிறது
ஆங்கோர் உயர் பீடத்தில்
நீ ஓய்வு பெறும் போது
சூட்டுவதற்கான
மண்ணில் அழியா மகா கிரீடங்கள்
அடுக்கிவைக்கப்பட்டிருக்கின்றது
எல்லாவற்றின் முன்பும்
உன் கற்பித்தல் என்ற
கனவுப் பாதையில் நடக்கத்தொடங்குகிறாய்
அதிபரை கரைக்கும் மருந்து
ஆங்காங்கு வந்து
இடைக்குள் செருகும்
கற்களை அகற்றும் கைவசியம்
சேடிகளின் வாயால்
உன் சிறப்புரைக்கவைக்கும்
காட்டின் நடுவில் இருக்கும்
புற்றில் சீறுகின்ற
ராஜநாகத்தின் நவரத்தினகல்
எல்லாம் வரப்பெற்ற வல்லமையாகுவாய்
மருதோண்டிவைத்து
மகிழ்ந்திருந்த உன் உள்ளங்கை
வெண்கட்டி விளைந்திருக்கும்
கைதடுமாறி உன் கன்னங்களில் கூட
சின்னமாயிருக்கும்
எல்லாமே
எண்ணற்றோர் எதிர்காலத்தை
நீ தீர்மானித்துக்கொண்டிருப்பதன் அழகு
இனி
பச்சை இல்லமா மஞ்சள் இல்லமா
சிவப்பு இல்லமா உனது
உன் ஆடைக்கனவுகளில்
அரைவாசி நாளையோடு முடிகின்றது
இனிச் சேலைக்குள் இருந்தே
ஆயிரம் வானவிற்களுக்கு வர்ணம்
கொடுக்கப்போகிறாய்
சுற்றுலாவிற்கு உன்னை முதல்வர் அழைத்து
முற்றிலும் நீயே பொறுப்பென்பார்
அப்போதெல்லாம்
திருமணம் ஆகாமலே
திரும்பி வந்து இறங்கும்வரை
பத்து நல்லதங்காளாய்
இருநூறு பிள்ளைகளுக்கு
தாயாக மாறவேண்டும்
ஆயாவாயும் மாறவேண்டும்
கறுத்தப்புள்ளிகளின்றி உன் பயணமிருந்தால்
அடுத்துனக்கு ஆசனங்கள் தேடிவரும்
தடுட்தாட்கொள்கின்ற சந்தர்ப்பங்களும்
தானாக விளையலாம்
நீ படுக்கமுடியாது இனி
பாடவேளைகள்தான் கனவாய் வரும்
படபடப்பும் இருக்கும்
புதிதாயும் ஏதும் கொண்டு செல்லவேண்டும்
உலகப்புதினங்களை உற்றுநோக்கவேண்டும்
அல்வா எடிசன்கள்
ஆபிரகாம் லிங்கன்கள் அலெக்ஸ்சாண்டர்கள் பிரபாகரன்கள்
ஓசாமாக்கள் தெரேசாக்கள் டயானாக்கள்
மூன்று இலைகளோடு உன் முன்
வகுப்பறையில் வந்திருக்கும்
எல்லாவற்றுக்கும்
உன்னிடம் பதிலிருக்கவேண்டும்
ஊமையானால்
உள்ளத்தில் வழங்கப்பட்ட உனக்கான உயர்பதவி
மெல்ல மெல்ல அகற்றப்படும்
என்ன செய்யப்போகிறாய்
நேற்றுவரை நீ வதனி
இனி நீ ரீச்சர் வதனி
கன்ன மயிர் பழுத்து
கடைசிப்பெருங்காலத்துள் நுழைகின்ற
எந்தனது நெஞ்சில்
சங்கரப்பிள்ளை சோதிநாதன் விந்தன்
மனோகரி குமார் அருள்நேசன் சசிகலா சிவகௌரி
சிறீசெல்வராஜா மோட்சலிங்கம் கனகேந்திரம் என்றொரு பட்டியல் நீள்கிறது
இவர்கள் என் ஆசிரியர்கள் இன்னும் பலர்
பக்கங்கள் பலவற்றை அலங்கரிப்பர்
ரீச்சர்வதனி
உந்தனது காலத்தில்
எத்தனை உள்ளங்களில் உட்காரப்போகிறாய்!!

No comments:

Post a Comment