Saturday, January 14, 2017

பெட்டகப்பேச்சு

மாலை தேனீரை மசமசப்பு தீர்ந்துவிட
மடியில் வைத்தபடி
வடையில் ஒரு கடியும்
மாண்புமிகு துணையாளின்
சீனி தணித்த
சிக்கனத் தேனீரின் குடியும்
படியில் இருந்தபடி
பழைய பத்திரிகை சிலதை
முதிரைப்பெட்டகத்தின்
முதல் கதவை முக்கித்திறந்து
தட்டியிழுத்து தடவியெடுத்து
பத்திரப்படுத்திய பரவசத்துடன்
பக்கத்தில் நின்ற
பாசத்துணையை பார்வையால் துளாவி
பக்கங்கள் சிலதை திறக்க
பால்ய நினைவுகள்
வெட்கத்தில் அவள் விறாந்தையில் அகல
சித்திரம்போலொரு வாழ்வை
சீக்கிரம் தொலைத்தது தெரு
சின்ன வயதில்
பட்டுக்கோட்டை எனக்கு
பாட்டெழுதும் கவி
கல்யாணசுந்தரத்தின்
கொட்டும்;சிந்தனையால் அறிமுகம்
எட்டயபுரம் கூட
அப்பெருங்கவி ஆற்றலில்தான்
மட்டுநகர் விபுலானந்தரின்
வித்தகத்தில்
பண்டாரவன்னியனால்
கற்சிலை மடு
கட்டையில் போனாலும்
கரியிலும் மறவாது
ஆழிக்குமரனால்
அலைதழுவும் ஊரொன்று
அண்ணன் பிரபாகரனால்
வல்வெட்டித்துறை
வல்லமை தவில் தட்சணாமூர்த்தியால்
அளவெட்டிபதி
அந்நாளில் உள்ளத்தில்
அறிமுகம் ஆனது
விக்டரால் அடம்பனும்
வீரி மாலதியால் ஆட்காட்டிவெளியும்
மில்லரால் நெல்லியடியும்
உள்ளத்தில் கரைந்ததுகாண்
சொல்ல வெட்கம் இன்று
கசிப்பால் சில ஊர்கள்
கஞ்சாவால் சில ஊர்கள்
கற்பழிப்பால் சில ஊர்கள்
வாள்வெட்டில் சில ஊர்கள்
இனிவரும் சந்ததிக்கு
இந்த நாள் பத்திரிகை
எடுத்துப்போகிறது.
வடக்கரசின் அடிபிடியால்
கைதடியும் கூட
தடுக்குப்பட்டு தலைகுனிந்து
தலைப்புச்செய்தியாகிறது.
இந்நாள் பத்திரிகையை
எடுத்து வைத்து பெருமைகொள்ள
இனி எனக்கு முடியாது
எடடி ஒரு நெருப்பெட்டி
கடந்த ஆறாண்டு
தொந்தி பந்தியோடு
அந்திவரை வாசிக்க
அகன்று விரிந்து வந்து
மந்து பற்றி கிடக்கும்
பத்திரிகைகளை
அக்கினிக்கு இரையாக்கு!!!

No comments:

Post a Comment