Saturday, January 14, 2017

ஒரு உண்மை!!

சித்திரை நாள் குறித்து
சீர் வரிசை சரிபார்த்து
இக்கணம் இருந்துபேசி
இருவீட்டார் அழைப்பாக
பத்திரிகை அச்சேற்றி
பலருக்கும் போய்ச்சேர்த்து
பல காரச் சூடுவைத்து
பந்தலையும் வரவைத்து
பழக்குலையும் கட்டிவிட்டு
பம்பரமாய் சுழன்ற அசதி
பன்னிரண்டு நடுநிசியில்
பாம்படித்துப்போட்டதுபோல்
படுதூக்கம் சரித்துவிட
பந்தலுக்குள் சிலபேரும்
பத்தியில சில கிழடும்
பெண்புரசு அறைக்குள்ளும்
புரண்டு கண் செருகிவிட
நாலரைக்கு வைத்த அலாம்
நாலுபேரை எழுப்பிட
அறைக்குள் வெளிச்சம்வர
வேதியக்கை விறைத்துப்போனார்
விடிஞ்சால் மணத்துக்கு
வெளிக்கிடும் மல்லிகையாம்
மணவாட்டி நித்தியா
மாயமாய் காணவில்லை
கனகம் ஓடிப்போய்
கக்கூசை திறந்து பார்த்து
கருக்கலுக்குள் ஓடிப்போய்
கிணத்தடியை எட்டிபாத்து
ஓடிவந்து அலுமாரியை
ஓவென்று திறந்து பார்க்க
ஒரு உடுப்பும் அங்கில்லை
முத்தன் பெடி மோகனுக்கும்
பத்தன் மகள் இவளுக்கும்
முளைத்திருந்த காதல் பற்றி
முன்னூரில் முணுமுணுப்பு
முடிச்சுக்குள் இருந்ததுண்டு
கத்துகிறார் பத்தர் இப்ப
கனகத்தை திட்டுகிறார்
கொத்துவன் எல்லாரையும்
கொளுத்தவள் போய்விட்டாள்
சத்தியமாய் அவளெனக்கு
சரித்திரத்தில் மகளில்லை
இன்றோடு போச்சென்மானம்
இனியெல்லாம் அவமானம்
இது நடந்து வருசங்கள்
இற்றைக்கு இருபத்தைந்து
நேற்றைக்கு நெடுநாள்பின்
பத்தரை பார்த்தபோதவர்
வார்த்தைக்கு வார்த்தை
நித்தியா நித்தியாதான்
மருமகனும் தங்கமாம்
மறு பேச்சு பேசாராம்
மகள் பெற்ற பிள்ளையும்
மகா கெட்டிக்காரியாம்
தொப்பூள் கொடி பிணைப்பும்
தோள் சுமந்த அச்சுகமும்
எத்தனை ஆச்சர்யம்
எப்போதும் ஒரு உண்மை!!

No comments:

Post a Comment