Saturday, January 14, 2017

முள்ளிவாய்க்காலை மறக்காதே
அலப்போவை மறக்காதே

எந்த வல்லரசின் தூதர்களின்
முதுகிலும்
யாரும் சுட்டதாய் ஞாபகம் இல்லை
தமிழீழத்தை மறக்காதே
முள்ளிவாய்க்காலை மறக்காதே
துப்பாகியுடன் எவரும்
தொண்டையில் நீர்வற்ற
உலகத்தின் மூலைவரை குரல் கேட்க
கத்தியதாக குறிப்புக்கள் இல்லை
தூதர்கள்
புகைப்படக்கண்காட்சிகளில்
சுதந்திரமாக பயங்கரவாதம் பற்றி
பேசிக்கொண்டிருந்தார்கள்
எல்லா விருந்துகளிலும் மகிழ்ந்திருந்தார்கள்
அவர்கள் எல்லோருக்கும் முதுகில்
புளுப்போல மரணம் ஊர்கின்ற
திகிலான அனுபவ நாட்கள் ஏற்படவில்லை
தங்கள் மெய்ப்பாதுகாவலர் பற்றிய பூர்வீகங்களை
அவசரமாக தேடி தேடி
தூக்கம் தொலைந்த இரவுகளை
அவர்களுக்கு முள்ளிவாய்க்கால் பரிசளித்ததாக
எந்த கவிதைகளும் இல்லை
தனது வாகன ஓட்டுனர்
வாயிற்காவலர்
நம்பிக்கையான முடி திருத்துனர்
சமையற்காரர்
எல்லோர் மீதும்
ஒருவனின் முகமே படிந்திருந்திருப்பதுபோல
மரண பிரம்மையை
எவரும் கொடுத்திருக்கவில்லை
ஆயினும்
முள்ளிவாய்க்காலில்
பயங்கரவாதம் அழிக்கப்பட்டதாக
உலகத்திற்கு பிரகடனம் செய்யப்பட்டது
அலப்போவை மறக்காதே
சிரியாவை மறக்காதே என்றபடி
துப்பாக்கி ஏந்தி
இருபத்திரண்டே வயதானவன்
அமைத்த மரண களரி
இறந்தவர்களுக்கான கடவுள்
இரக்கமில்லாதவன் என்கிறதா
ஒரு குழந்தையின் மரணத்தில் எழுந்த
மானுட நேயம் என்பதா
தன்னினம் மடிகிறபோது
எங்கிருப்பினும் எவனொருவனும்
எதையோ செய்வான் என்பதா
முடிவாக
கைகட்டி வாய்பொத்தி
தலைகுனிந்து நின்று
வல்லரசு சொல்கிறது
அது ஒரு பயங்கரவாதத்தாக்குதல் என்பதை
எல்லா ஓட்டைகளாலும் உள்வாங்கிக்கொண்டு
உறங்கி இருளிலேயே எழுவதா!!

No comments:

Post a Comment