Sunday, July 3, 2016

யோவ்ஸ் பிஸ்கர் கோயாக்


  2013தை-கார்த்திகைவரை சிறையில் இருந்தபோது எழுதப்பட்ட கவிதை







ஒல்காபெர்ன்கோல்ட்ஸ்

பட்டிணியாலும் மரணங்களாலும்

பதட்டத்தாலும் ஏக்கத்தாலும் உறுதியாலும்

நான் உனது சாயல்

நீ ஆரஞ்சின் நிறம்

நான் எரிந்து முடிந்த சூரியனின் நிறம்

உனக்கு பனித்துருவம்

எனக்கு நந்திகடற்கரை

உனது சனத்தைப்போலவே

எனது சனமும்

பட்டணங்களை இழக்கவிரும்பாதவர்கள்.

இந்த குறிப்புகளோடு

சுமார் எழுபது ஆண்டுகளின் பின்

உன்னை

என் சிநேகிதியென அழைக்க விருப்பமாயிருக்கின்றேன்.





இப்போது நான் காலிக்கடலோரம் பூசாவில் இருக்கின்றேன்.

சுமாராக உன்னைபோல

ஆயிரம் முற்றுகை நாட்களை  கடந்தேன்

மரணங்களின் எச்சமாய்

உப்புவெளிக்கு அப்பால் எறியப்பட்டேன்.

உயிரை கொண்டோடியவனை துரத்திப்பிடித்து

உயிர் கிழிய கிழிய பறித்து

என்னுள் சொருகிக் கொண்டது போல அந்த ஞாபகம்.

பல இலட்சம் சம்மட்டிகள் சூழ்ந்து ஓங்கியடித்தன.

‘‘ தான்யாவின் குடும்பத்தில் எல்லோரும் இறந்துவிட்டார்கள்

தான்யாவைத்தவிர‘‘என்று

குறிப்பெழுதக்கூட

என் தான்யாவுக்கு அவகாசமில்லை.

என் பட்டணங்ளை முற்றுகையிட்ட

முகங்களின் பின்

நான் காணக்கிடைத்தவைகளால்

ஓ! நீயுமா! நீயுமா!! நீயமா!!! என்று

கேட்டுகேட்டு இழந்திருந்தேன்.





உயிர்ப்பாதைகள் மூடப்பட்ட 

கடலோர மணலில் என் சனம்

பசி வருத்த ஏதோ செய்துண்டது

நாம் உண்டது உரொட்டியா மண் கட்டியா என்பதுகூட

உணராப் பசியிலிருந்தோம்.

பொருக்கவெடித்த நதியின் தாகத்தால்

மேலான ஒன்றை தனதாக்க காத்திருந்தபோது

ஓ! நீயுமா! நீயுமா!! என்ற குரல்கள்

நெஞ்சை அடைத்துவிட்டன.

பல நுாறு மைல்களில் என் தாய் நிலம்மூடி

மலர் வளையங்களை வைக்க நினைக்கும்

என் கரங்களை

ஒல்கா பெர்ன்ட் கோல்டஸ்!

என் சிநேகிதி

நீ இறுகப்பற்றக்கூடும்.





பிஸ்கர் யோவ்ஸ் கோயாக்கில் தலை சாய்த்து

நினைவுகளை வருட உன்னால் முடிகிறது

என்னால் முடியவில்லை

உடைக்கப்பட்ட கல்லறைகளை பொறுக்கியெடுத்து

பிஸ்கர் யோவ்ஸ் கோயாக் எழுப்ப கனவு காண்கிறேன்.

அதுவரை சிநேகிதி!

உன் வரிகளில் சிலதை

உச்சரிக்க அனுமதி கொடு

இதோ எடுத்துக்கொள்கிறேன்

‘‘பலர் இங்கே உறங்குகிறார்கள்

இவர்களின் பெயர்களோ

எத்தனைபேர் புதையுண்டு கிடக்கிறார்கள் என்பதோ

நமக்கு சரியாக தெரியாது

ஆனால்

எல்லோரும் தெரிந்து கொள்ளவேண்டியது இதுதான்

நாங்கள் யாரையும் எதையும் மறந்துவிடவில்லை

மறந்துவிடவும் மாட்டோம்‘‘

நன்றி என் ஆரஞ்சு நிறத்தவளே!

என் பட்டணத்தை சூழ்ந்தவர்களின்

மமதையின் பின்னால் இருந்த

முகங்களிலொன்றை கண்ட

என் மரணித்த தான்யா

நீயுமா லெனின் கிராட் என்றும்

உச்சரித்து மாண்டாள்

என்ன செய்ய!







(2013தை - கார்த்திகை வரை சிறையில் இருந்தபோது எழுதப்பட்ட கவிதை)

 -பொன்.காந்தன்-  




குறிப்புக்கள்...

லெனின்கிராட் -- ஏழு இலட்சத்துக்கு மேற்பட்ட கிட்லரின் படைகள் சூழ்ந்து கிட்டத்தட்ட தொள்ளாயிரம் நாட்கள் முற்றுகையிட்டு சுமார் 1500 டாங்கிகளாலும் விமானங்களாலும் தொடர்ந்து குண்டுகள் பொழியப்பட்டு உயிர்ப்பாதைகள் மூடப்பட்டபோது துருவப்பனிக்குள் நின்று எதிர்த்துப்போரிட்ட சோவியத் மக்களின் புரட்சி நகரம். இங்கு சுமார் பத்து இலட்சம் பேர் வரைஇறந்ததாக நம்பப்படுகிறது.


தான்யா -- லெனின் கிராட்டில் 1941-1942ல் போரில் இறந்த சிறுமி


உயிர்ப்பாதை -- முற்றுகையாளர்களது லெனின்கிராட்டில் எல்லா பாதைகளும் மூடப்பட்டபோது.பனிப்பாறைகளின் மேல் உருவாக்கப்பட்ட உணவுக்கான வரவுப்பாதை.


ஒல்காபெர்ன்கோல்ட்ஸ் -- லெனின்கிராட் முற்றுகையின்போது வாழ்ந்த பெண் கவிஞை


பிஸ்கர் யோவ்ஸ் கோயாக் -- லெனின்கிராட் முற்றுகையின்போது இறந்த அந்த நகரவாசிகளை புதைத்த பலபத்து ஹெக்டயர் பரப்பில் எழுப்பட்ட கல்லறையின் பெயர்.

No comments:

Post a Comment