Sunday, July 3, 2016

தேன் நிலவு-பொன்.காந்தன்




எட்டாம் வகுப்பில்
மொட்டவிழ்ந்த அவள்
மோகனச் சிரிப்பில்
மயங்கி
கட்டினால் இவள்தானென
கனவு நூறு கண்டு
கடிதம் குடுத்து
பதில் வரும்வரை
பசியிருந்து
ஒப்பேறிய காதலை
அவளும் நானும்
தாலி கட்டும்வரை
தடை உடைத்து செல்வதற்கு
கடந்த கால காதலர்கள்
கண்ட பல சாத்திரிகள் முன்
கை நீட்டி
காரியம் நிறைவேறும்
கைதொழுதால் என்ற கோயில்களில் நேர்த்தி வைத்து
காப்பு கட்டி காவடி கற்பூர சட்டியெடுத்து
முட்டுக் காலில் இருந்து
முந்நூறு மந்திரம் உச்சரித்து
வீட்டுக்கு நம் காதலை சொல்ல
ஆளமர்த்தி
அவரை அடிக்கடி ஆசுவாசப்படுத்தி
ஈற்றில் எச்சில் விழுங்கி விழுங்கி
எல்லாம் வீட்டில் கொட்டி
காற்றில் பறப்பது போலானோம்
கலியாண நாள்
கட்டினேன் நேற்றவள் கழுத்தில்தாலி
மாதுளம் பழமென மயங்கி
நின்றவளை
தேனிலவு தேதி சொன்னேன்
கசூரினா போகலாமா
சங்குப்பிட்டி பாலத்தில்
உரசி நின்று ஒரு செல்பி எடுக்கலாமா
காலி போய் காற்று வாங்குவோமா
கண்டி நுவரெலியா
கதகதப்பு தேடலாமா
என் கனவுகளை அடுக்கிவிட்டேன்
புன்னகையுடன்
அவள் சொன்னாள்
எவனாவது ஒருவன்
மறைந்திருந்து படமெடுத்து
இத்தனை வருட நம் காதலுக்கு
இணைய தளங்களில்
கள்ளக்காதலர்கள் களியாட்டமென பெயர் சூட்டுவான்
தேவையா என்றாள்
தெளிவாய் இருந்தது
தேன் நிலவு எனக்கு.

No comments:

Post a Comment