Sunday, July 3, 2016

பொன்.காந்தன்------ காகா....காகா... காக்கைகளின் அறிவிப்பு



உப்பளக்காற்றை இதயத்தின் வேர் வ ரை
சுவாசித்து கடக்கின்றேன்
ஆத்ம கறைகளை போக்குமென்பது
என் அசையாத நம்பிக்கை
ஆனையிறவின் கடல் வெளியில்
இறாலுக்காக மொய்த்துக்கிடக்கும்
சைபீரிய வாத்துக்களும் கொக்குகளும்
இடுப்பளவு உவருக்குள்
வலை கட்டி கொண்டிருக்கும் சிநேகிதனும்
உப்புச்சேற்று மணமும்
உடன் பிறந்த சகோதரர்களை போல
என் கவிதைக்குள்
அனுமதியற்று நுழைவது ஆச்சரியமல்ல
கஸ்தூரிகள் வேர்கொண்டிருந்த
கனவு வெளியில்
அனைத்துமே பூசிப்பதற்குரியதென்பது
ஆகாய கடல் வெளியில் இருந்து நீளும்
பாயிரங்களுக்குள் தொடர்வது
எஞ்சியிருக்கின்ற
பளையின் தென்னந்தோப்புகளில்
சோட்டியை
இடுப்பில் செருகிவிட்டு
மோட்டையில் ஊறப்போட்;ட கிடுகுகளை
இழுத்துவருவதும்
தொலைபேசியில் வானொலியை கேட்டபடி பின்னுவதும்
என் இதயத்துக்குள் இருக்கின்ற
சிலபல ஏக்க ஓட்டைகளை வேய்கின்றது.
இத்தாவில் பனைகள்
நிமிர்ந்த கொள்ளிகளாய் இருப்பது
புறநானூற்றின் காட்சிகளில்
இத்தாவில் பரணியை
ஈராயிரம் பாக்கள் கொண்ட
தளகர்த்தன் ஒருவனின்சன்னதத்தை
மழை காலங்களுக்கு முன்னும்
உல்லாச விடுதிகளை கட்டி
காதல் ஜோடிகள் கீதங்களை
காற்று சுமப்பதற்கு முன்னும்
எழுதி முடிக்கும்படி விண்ணப்பம் விடுவது.
முகமாலை கடந்துபோகிறபோது
யாராவது இன்று
தற்கொலை செய்துகிடக்கிறார்களா என
தண்டவாளங்களில் தேடுகிறேன்
தண்டவாளங்களுக்கு அருகில்
நிற்கின்ற எல்லோரும் விரக்தியுற்றவர்கள் போலவும்
இன்றோ நாளையோ
தூக்கில் தொங்கியோ
யாழ் தேவியின் முன் பாய்ந்தோ
செத்து விடுவார்கள்போல
எதிர்மறையாகவே எல்லாம் ஓடிவருகின்றது
ஒரே அல்ககோல் மணம்
எங்கிருந்து
நல்ல தண்ணீர் கிணற்று பக்கங்களில் இருந்தா
வாசிக சாலைகளில் இருந்தா
மதவடியில் இருந்தா
பள்ளிக்கூட பின் மதிலோரத்தில் இருந்தா
கோயில் கேணியடியில் இருந்தா
பஸ் தரிப்பிடங்களில்
வசதிப்பட இருக்கும் நிழல்குடைகளில் இருந்தா
அல்ககோலில் தலைசுற்றி குமட்டி
கிருசாந்தி புதைந்த
செம்மணித் தெருவில் தலைகுப்புற விழுந்துவிட்டேன்
ஐயோ நான் குடிக்கவில்லை
சத்தியமாய் சத்தியமாய்
சவுக்கு மரங்கள் தள்ளாடியபடி சிரித்தன
என்னைப்பார்த்து
வெட்கமில்லை வெட்கமில்லை
அவமானமில்லை அவமானமில்லை
சரித்திரம் சரித்திரம்
சவுக்கு மரங்கள் வேதமோதின எனக்கு
ஜயசுக்குறு காலத்தில்
கனராயன்குளத்தின்
கானகக்குருவிகள் கத்துவது
வாடா பாப்பம் வாடா பாப்பம் என
நிலாந்தன் என்ற பாவலனுக்கு கேட்டதுபோல
என்னை கடந்த போகும்
காக்கைகள் காகா காகா
கால் கால் கால் அரை அரை
ஒன்று ஒன்று ஒன்று
காகாகாகாகா
வெறி வெறி வெறி வெறி
குடி குடி குடி குடி
காக்கையை இனி நம்பமாட்டேன்
ஒ! காக்காய்
முற்றத்தில் பனையில் இருந்து
கரவெட்டியில் இருக்கும்
என் பேத்தி கிழவிக்கு என் வரவை
நீ அறிவித்திருக்கப்போவதில்லை
குளத்தடிக்கு நல்ல தண்ணிக்குபோய்
நீராடிவிட்டு
கூந்தல் நீர் வடிய வடிய
பின்னழகில் பரவி
மணலில் கால் புதைய புதைய நடந்துவரும்
என் அழகிக்கும் நீ எதையும் அறிவித்திருக்கப்போவதில்லை
நல்லூர் சந்தணத்தை எடுத்து
நாலாபுறமும்
வீசி நடந்தால் இந்த மணம் போய்விடுமா
மாதாவின் திருவடியில் இருக்கும் குங்கிலியத்தை எடுத்து
ஊர் முழுக்க ஓடினால் இந்த மணம் மாறிவிடுமா
அல்ககோல்
சந்தண வாசமென தலைதடவி
தாள் பணிந்து
மெய் மறந்து கிடக்கும் மண்ணில்
அவசரமாய் தேடிதேடி பொறுக்கி எடுத்து
ஈமத்தாழிகளுக்குள் போட்டு
பொன்பரப்பித் தீவுகளில் புதைத்திடவேண்டும்போல்
கடைசியாய் ஒரு கேள்வி
பணம் இல்லாவிட்டால்
என்ன செய்வீர்கள்
தட்சணாமூர்த்தியின் தவிலை விற்போம்
கந்தமுருகேசனாரின் முதுசத்தை விற்போம்
துரைராசாவின் கண்டு பிடிப்புக்களை அடைவு வைப்போம்
விபுலானந்தரும் குடித்தார் என்றும்
மதுப்பிரியர் என்றும் மாற்றிவைப்போம்
என்ன நினைக்க!

No comments:

Post a Comment