Sunday, July 3, 2016

மற்றச்சிறகு







பருவவயதில்
காதல் தோல்விகளின்போதுஅடிக்கடி
எல்லாமே முடிந்துபோனது
இனி எதுவுமில்லை
ஒற்றைச்சிறகு உடைந்துவிட்டதாய்
இடிந்துபோனேன்.
புரட்சிக்காலத்தில்
ஊரை இழந்து
நெடும்பிரிவைச்சந்தித்த
ஒவ்வொரு முறையும்
இத்தோடு முடிந்தது
என் வாழ்வென்று நினைத்ததுண்டு.
இல்லறத்திலும்
தோல்விகளை சந்தித்தபோது
தனித்துப்போனதாக தளர்ந்ததுண்டு.
இறுதியாய்
மரணநாட்களாலான
முள்ளிவாய்க்கால் நோக்கிய வாழ்வின்போது
இத்தோடு என் வாழ்வு அஸ்தமிப்பதாய்
நிச்சயப்படுத்திக்கொண்டேன்.
இப்போது
புரட்சியை மீள உருவாக்க நினைக்கிறாயென
நான் இனத்துவேசிகளால்
சிறைவைக்கப்பட்டிருக்கும் தருணத்தில்
எல்லா சந்தர்ப்பங்களையும்நினைத்துப்பார்க்கின்றேன்.
என்னிடம் ஒற்றைச்சிறகல்ல
மற்றச்சிறகொன்று
எல்லா  தருணங்களிலும் இருந்திருக்கிறது
இப்போதும் கூட.
அது மிகப்பெரிதென்றும்
பறவையை நினைக்கும்
வானம் போன்றதென்றும்
ஆதியும் அந்தமுமில்லா ஆழத்திலிருந்தும்
உந்திக்கிளம்புமென்றும் உணர்கிறேன்.
இப்போது
எங்கள் தெருக்களில்
நிறைய பறவைகள் மனதோடுரசிப் போகின்றன.

No comments:

Post a Comment