Sunday, July 3, 2016

பொன்.காந்தன்----- மூத்தவன்



சண்டிக்கட்டுக்கள் அவிழுகின்றன
அது அது அந்தந்த இடங்களில்.......
அம்மா வாசலை வாசலை பார்க்கிறாள்
பட்டியல் ஒன்று அவளுக்குள்
மூத்தவன் வருகிறான்
மூத்தவன்
இன்னொரு பெயர் கழுதையாகலாம் சுமப்பதனால்
அப்பாவின் பார்வையை
அம்மாவின் முகத்தில் உள்ள சோர்வை
சரியாக மொழிபெயர்க்கக்கூடியவன்
இளையவர்களுக்காக
படிக்க
நல்லவனாக இருக்க
உழைக்க
கோபப்பட
கோபித்துக்கொண்டுபோய் திரும்பிவர
தன் காதலை புதைத்துவைக்க
சாப்பிடாமல் இருக்க
கொள்ளிவைக்க
மூத்தவன் பிறந்திருந்தான்
மூத்தவன்
போய்வருவது பற்றி
எங்கு ஏன் என்ற கேள்விகள்
இல்லாத காலம் அழகானது
போய்விட்ட மூத்தவன்
திரும்பிவராக்காலமும் அழகானது
திரும்பி வந்தபோது
அம்மா அப்பாவின் பேரழுகை
இளையவர்களை
மூத்தவனாய் இருக்கவைத்தது
இப்பொழுதும்
என் மூத்தவன் இருந்திருந்தால்
என தொடங்கும் அம்மாக்களின்
கண்களில் மூத்தவன்
கருக்கலுக்குள் பின்னிருக்கும் சூரியன்போல.....
கதவு தட்டப்பட்ட பொழுதுகளில்
மூத்தவன் திறந்த கதவுகளில் எழுதப்பட்டிருக்கும்
மர்ம இரவுகள்
இன்னும் விடியாமல் பல வீடுகளில்
எலும்பும் தோலுமான
அம்மாவின் சுருக்கங்களில்
மூத்தவன் பற்றிய சரித்திரத்தை எழுதிவைத்திருக்கிறது
மூத்தவனுக்குள் இருந்த காதலை
அம்மாவும்
இளையவர்களும் அறிய ஆவல்பட்ட பொழுதுகளில்
அவன் நிலவுக்குப்பின்
அழகிய நதிகளின் ஆழத்தில்
தன் காதலியை மறைத்து வைத்தான்
அவள் கூந்தல்பற்றிய
இரகசியத்திலும்
கண்கள் பற்றிய இளையவர்களின்
கற்பனையிலும் மிதக்கும்
ஒரு இளவரசிக்காய் காத்திருக்கும் வீட்டில்
ஒரு தாய் மாமனுக்கான கடமைக்குப்பின்னும்
ஒரு நாள் குறிக்க முடியாமல் போனதுண்டு!
நாள்பட்ட இளமையுடன்
அண்மையில் எச்சமாய் இருந்த மூத்தவன்
ஒரு முதிர்கன்னியை தேடிக்கண்டுபிடித்தது பற்றியும்
ஒரு நாள் குறித்து
வசந்தத்தை வரவழைக்க
கேள்விகள்
சட்டங்கள்
சாட்சியங்கள் கையொப்பங்கள் என
பட்டபாடு பற்றியும்சொன்னபோது
அவன் ஒரு தியாகச்சிலையாய் தோன்றினான்
இப்பொழுதுகளில்
மூத்தவர்கள்
எங்கே போகிறார்கள்
எங்கே வருகிறார்கள்
ஏன் போகிறார்கள்
என்ன செய்கிறார்கள்
கேட்பதும் அறிவதும்
துடக்கெனக் கொள்வோம்

No comments:

Post a Comment